தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்தில் முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமெரிக்கா வாழ் தமிழர்களின் தமிழக அறக்கட்டளை சார்பில் ரூ.2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டார். மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, இணை இயக்குநர் வினய் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
அமெரிக்கா வாழ் தமிழர்களின் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.2.36கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் 15 அரசு மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படும். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி நாளை (ஆகஸ்ட் 23) முதல் தொடங்கப்படும்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடத்தில் கொரோனா நோயாளிகளை தங்க வைத்ததால்தான் கட்டிடம் பலவீனமானது என்று கட்டுமான நிறுவனத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது, ‘போகாத ஊருக்கு வழி சொல்வதுபோல்’ உள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் கரோனா பாதுகாப்பு மையம் செயல்பட்டது. அங்கெல்லாம், எவ்வித சேதாரமும் நடைபெறாதபோது புளியந்தோப்பில் மட்டும் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.