செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 50% மாணவர்களை மட்டும் பள்ளியில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் தனியாரும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என கூறியிருந்தார். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும் என தெரிவித்தார். கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என கூறினார். கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அதோடு பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைப்பதற்கும் இதில் ஆலோசிக்கப்படும் என தகவல் கூறப்பட்டுள்ளது.