கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - மேஷம் (Guru Peyarchi Palangal - Mesham)...

 


குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - மேஷம் (Guru Peyarchi Palangal - Mesham)...


சுயமரியாதையின் சொந்தக்காரர்களே...!


படிப்பறிவைக் காட்டிலும் பட்டறிவு அதிகமுள்ளவர்களே, சபையாக இருந்தாலும், சத்திரமாக இருந்தாலும் ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர்களே. இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டிலும், 11-ம் வீட்டிலும் மாறி மாறி இருந்தாலும் பணவரவுக்கு குறைவில்லாமலும், வசதி வாய்ப்புகளையும், பிரபலங்களின் நட்புறவையும் ஏற்படுத்திக் கொடுத்த குரு பகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை உங்கள் ராசிக்கு விரய வீடான மீன ராசியில் ஆட்சிப் பெற்று அமர்கிறார். இதுவரை பாதியில் கட்டி முடிக்கப்படாமல் நின்று போன வீட்டை இனி முழுமையாகக் கட்டி முடித்து புது வீட்டில் கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.


குரு பகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் உடம்பில் ஏதோ பெரிய நோய் இருக்கிறது என்றிருந்த பயம் நீங்கும். ஆரோக்யம் கூடும். வெகுகாலமாக இருந்து வந்த சொத்துப் பிரச்சினைக்கு நல்ல முடிவு கிடைக்கும். தாயாருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கு-ரு உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் சண்டைக்கு வந்தவர்களைக் கூட சமாதானமாகப் பேசி நண்பர்களாக்கி விடுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு 8-வதுவீட்டைப் பார்ப்பதால் திட்டமிடாத பயணங்களும், வீண் செலவுகளும் அதிகரிக்கும். குலதெய்வ கோயிலை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள்.


குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:


14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். பழைய வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் நகருக்கு அருகில் வீட்டு மனை வாங்கும் வாய்ப்பு உள்ளது. லோன் கிடைக்கும். மகளின் கல்யாணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். அப்பா வழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வழக்கில் வெற்றியுண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.


30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் உங்களின் ஜீவன, லாபாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். சுபச் செலவுகள் வரும். அயல் நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமுண்டு. பூர்வீகச்சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். என்றாலும் திடீர் இழப்புகள், ஏமாற்றங்கள், விரக்தி, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, சோர்வு, உடல் வலி வந்து செல்லும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடாதீர்கள்.


24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் தைரிய, ரோகஸ்தானாதி பதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். சொந்த ஊரில் மற்றவர்கள் மதிக்கும்படியாக பொது காரியங்களை முன்னின்று செய்வீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதுக் கடன் வாங்குவீர்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். நெஞ்சுவலி, முதுகுவலி வந்து நீங்கும். புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.


வியாபாரிகளே, அரைத்த மாவையே அரைத்துக் கொன்டிருக்காமல் புதுவிதமாக யோசியுங்கள். போட்டியாளர்களை முறியடிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். பழைய பாக்கிகளெல்லாம் இனி வசூலாகும். கொடுக்கல் - வாங்கலில் நிம்மதி ஏற்படும். புது முதலீடுகளைப் போட்டு கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். ஹோட்டல், கமிஷன், பார்மஸி வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழிலில் வளைந்து கொடுத்து போகப் பாருங்கள். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.


உத்யோகஸ்தர்களே, பொறுப்புகள் அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். மேலதிகாரிகளிடம் வீணாக கோபப்படாதீர்கள். மறைமுக எதிர்ப்புகளைச் சந்திப்பீர்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேலைச்சுமை குறையும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. இந்த குரு மாற்றம் சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன், வாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுக்க வேண்டுமென்பதை உணர வைக்கும்.


பரிகாரம்: திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபாலச்சந்திர விநாயகரையும், ஸ்ரீ எறும்பீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் தரிசியுங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.





குருப்பெயர்ச்சி பலன் - மேஷம்


குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை


திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை



குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து


ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும்


ஏழாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தையும்


ஒன்பதாம் பார்வையின் மூலமாக அஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார்.

தடைகளை வெற்றி கற்களாக மாற்றக்கூடிய மேஷ ராசி அன்பர்களே!

இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் ராசிக்கு பனிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.


குருவானவர் தான் நிற்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் 'குரு பார்வை கோடி புண்ணியம்' என்று அழைக்கப்படுகின்றது.

பலன்கள் : 


செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்டு இருந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சியான தருணங்களும், ஒத்துழைப்பான சூழ்நிலைகளும் உருவாகும். முன்னேற்றமான சிந்தனைகளும் அதை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும். எந்தவொரு செயலிலும் திருப்தியற்ற மனநிலை ஏற்பட்டு மறையும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. மனதளவில் இருந்துவந்த பலவிதமான சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களும், அலைச்சல்களும் ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.

பொருளாதாரம் : 


பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்த நிலைகள் படிப்படியாக குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு சாதகமான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம் :


உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வாகன வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கைகூடும்.

பெண்களுக்கு : 


புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப பெரியவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், ஒத்துழைப்பும் மேம்படும்.

மாணவர்களுக்கு :


மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலைகள் படிப்படியாக குறையும். உயர்நிலை கல்வியில் முயற்சிக்கு ஏற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகும்.

அரசியல்வாதிகளுக்கு : 


கட்சி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சில காரியங்கள் கைகூடும்.

விவசாயிகளுக்கு :


விவசாயிகளுக்கு புதிய பயிர் விளைச்சல் நிமிர்த்தமான ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பயிர்களின் விளைச்சலால் வருவாய் மேம்படும்.

கலைஞர்களுக்கு : 


கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுவிதமான எண்ணங்களும், கற்பனை வளங்களும், படைப்பாற்றலும் வெளிப்பட்டு பலரின் பாராட்டுக்களை பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு : 


உத்தியோக பணிகளில் இருந்துவந்த சோர்வும், மந்தத்தன்மையும் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் மேன்மை ஏற்படும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பாலின மக்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். கணினி மற்றும் கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வியாபாரிகளுக்கு : 


வியாபாரிகளுக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புகளின் மூலம் லாபங்கள் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். கொடுக்கல், வாங்கலில் இருப்பவர்கள் நபர்களின் தன்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும்.

நன்மைகள் :


இந்த குருபெயர்ச்சியால் சிந்தனைகளில் புதிய மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும்.

கவனம் :


நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதிற்குள் ஏதோ ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

வழிபாடு :


செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர தடைகளும், குழப்பங்களும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...