கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இட ஒதுக்கீடு நாயகன் வி.பி.சிங் - நினைவு தின சிறப்பு பகிர்வு (V.P.Singh - Hero of OBC Reservation - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)



 வரலாற்றில் இன்று - நவம்பர் 27 - "ஒரு தலைவன் இருந்தான்!" - வி.பி. சிங் ஏன் கொண்டாடப்படுகிறார்? - நினைவு தின சிறப்புப் பகிர்வு (Today in History - November 27 - "There Was a Leader!" - Why is V.P.Singh celebrated? - Remembrance Day Special Share)...


வி.பி.சிங் இந்தியப் பிரதமராக இருந்தது வெறும் 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே. ஆனால், காலத்துக்கும் ஏன் அவர் நினைவுகூரப்படுகிறவராக இருக்கிறார்?


வி.பி.சிங் முதலமைச்சராக இருந்தபோது, தன் சொந்த மாநிலத்தில் கொள்ளைச் சம்பவங்களை ஒழிக்க முடியவில்லை என மனம் வருந்தி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். இன்றைய சூழலில் அப்படியொரு முதலமைச்சரை நம்மால் கற்பனைசெய்து பார்க்க இயலுமா? 


முன்னர், ராஜீவ் காந்தி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங், அப்போதைய பிரபலங்களான திருபாய் அம்பானி, அமிதாப் பச்சன் ஆகியோர்மீது எழுந்த புகார்களுக்கு தைரியமாக நடவடிக்கை எடுத்தார். 


ஸ்வீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனத்திடம் இந்தியா ஆயுதம் வாங்குவதற்காக அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் லஞ்சம் வாங்கினார்கள் எனப் புகார் எழுந்தது. இச்செய்தி பரவலாக ஆரம்பித்தபோது, யாருடைய ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக வி.பி.சிங் இருந்தாரோ, அதைப் பற்றி கவலைப்படாமல் விசாரணைக் கமிட்டிக்கு உத்தரவிட்டார். அதன் விளைவாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து வி.பி.சிங் நீக்கப்பட்டார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகூட அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. இதற்காகவெல்லாம் அவர் சோர்ந்துவிடவில்லை. 


காங்கிரஸுக்கு எதிராக தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டார். அப்போது, வலுவாக இருந்த காங்கிரஸை எதிர்க்க வேண்டுமென்றால், சில கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென முடிவுசெய்தார். அதன்படி ஜன் மோர்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளை இணைத்து, 1988-ல் ஜனதா தளத்தை உருவாக்கினார். இந்தியா முழுக்க சுற்றுப்பயணம்செய்தார். 


1989-ல் மக்களவைத் தேர்தல் நடக்க இருந்தது. தமிழ்நாட்டுக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்தார், வி.பி.சிங். தி.மு.க, ஜனதா தளம், தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து, 'தேசிய முன்னணி' என்கிற கூட்டணியை உருவாக்கி, அந்தத் தேர்தலைச் சந்தித்தார். அவருடைய கூட்டணிக் கட்சி 143 இடங்களைக் கைப்பற்றியது. ஆனாலும், அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பி.ஜே.பி கட்சி மற்றும் இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததால், வி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்றார். 


வி.பி.சிங்கிடம் உள்ள சிறப்புக் குணமே, யாரிடமும் எதற்காகவும் தன்னை அவர் சமரசம் செய்துகொண்டதில்லை என்பதை அவர் வாழ்க்கைப் பயணத்தைக் கவனித்தாலே புரிந்துவிடும். 


அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெறுவதற்காகக் காலம்சென்ற முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு 'பாரத ரத்னா'விருது கொடுத்தார். நாட்டுக்காக மிக முக்கியப் பணிகள் செய்த அம்பேத்கர் போன்றோருக்கே பாரத ரத்னா கொடுக்காதபோது, ஏன் எம்.ஜி.ஆருக்கு இத்தனை அவசரமாக பாரத ரத்னா விருது என காங்கிரஸை விமர்சித்த வி.பி.சிங், தன்னுடைய ஆட்சியில் அண்ணல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கினார். அது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம்பெறவும் வைத்தார். 


ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையை, தான் பிரதமராக இருந்தபோது நாட்டுக்குத் திரும்பி வரச் சொன்னார் வி.பி.சிங். காவிரி நதிநீர் பங்கிடுதலில் இனியும் பிரச்னை வரக்கூடாது என்று முதன்முதலில் காவிரி நடுவர் மன்றம் ஆரம்பித்தார். 


இத்தகைய தருணத்தில் வி.பி.சிங்'கிற்கு ஆதரவு கொடுத்ததை அறுவடைசெய்யும் விதமாக, பி.ஜே.பி கட்சி தனது இந்துத்துவா பரவலாக்கத்தை அவர்மூலம் சாத்தியப்படுத்த நினைத்தது. ஆனால் வி.பி.சிங், அதற்கு இசைந்துகொடுக்காததனால் அவருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும், வி.பி.சிங் எதற்கும் அஞ்சவில்லை. 


''பிற்படுத்தப்பட்ட மக்களின் பட்டியல் இந்தியாவிடம் இல்லை. அரசாங்கம் அம்மக்களைக் கண்டறிந்தால் மட்டுமே அவர்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்கும்'' என்றார் அண்ணல் அம்பேத்கர். அவர் கூறி 28 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற மொரர்ஜி தேசாய், பி.பீ.மண்டல் என்கிறவர் தலைமையில் ஓர் ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் சுமார் இரண்டு வருடங்கள் நாடு முழுவதும் மாநில அரசுகளின் உதவியுடன் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. 


ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு அந்த அறிக்கையின்படி இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தத் தயங்கியது. ஏறத்தாழ பத்தாண்டுகள் மக்களின் உரிமைகள் கிடப்பில் கிடந்தன. அத்தகையதொரு சூழலில்தான் நீண்டகாலம் கிடப்பில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரை செய்ததை, மக்களின் உரிமைக்கான திட்டத்தைத் தைரியமாக அமல்படுத்தினார் வி.பி.சிங். 


வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால், இந்தியா முழுக்க பெரிய அளவில் போராட்டங்கள் நிகழ்ந்தன. ஒருபக்கம் நெருக்கடி அதிகரித்துக்கொண்டுபோனது. மறுபக்கம், காங்கிரஸ் கட்சியும் அவர் ஆட்சியிலிருந்து வெளியேறுவதற்கான வேலையை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது; தனக்கு ஆதரவு வழங்கிய பி.ஜே.பி-யும் தன் பங்குக்கு நெருக்கடியை மேலும் அதிகரித்தது. வி.பி.சிங் எதற்கும் அசரவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை மேற்கொண்ட பி.ஜே.பி தலைவர் அத்வானி கைதுசெய்யவும் வாரன்ட் பிறப்பித்தார். இதனால் வெகுண்டெழுந்த பி.ஜே.பி, தன்னுடைய ஆதரவை விலக்கிக்கொண்டதால், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சியை இழந்தது. 


அதற்குப் பிறகு, 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய முன்னணியின் ஆட்சி அமைத்தபோது, வி.பி.சிங் பிரதமர் பதவி வகிக்க வேண்டுமெனத் தலைவர் சிபாரிசு செய்தார்கள். ஆனால், வி.பி.சிங் மறுத்துவிட்டார். சிறுநீரகக் கோளாறு, ரத்தப் புற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வி.பி.சிங், வேறு வழியின்றி பொது வாழ்க்கையில் இருந்து தன்னை துண்டித்துக்கொண்டு, நோயினால் அல்லலுற்றார். 2008-ம் ஆண்டு, டெல்லியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் இறந்தார். இன்றோடு அவர் இறந்து 14 வருடங்கள் நிறைவுறுகிறது.


ஒரு நல்ல தலைவன் ஆட்சிபுரிந்த காலங்கள் குறைவெனினும், தன் குடிமக்களால் அவன் என்றென்றும் நினைவுகூரப்படுவான் என்பதற்கு நித்திய உதாரணம் வி.பி.சிங்.

நன்றி: விகடன்


இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் இறந்த தினம் - நவம்பர் 27, 1940


1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.


வி.பி.சிங்



1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.


வி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பை தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி.யும் படித்தார்.


அப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.


1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த வி.பி.சிங், தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.


1969-ம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.


இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.


பிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது, இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி & கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார், இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது. 1983 ல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.


1984ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியதுவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்' முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்க கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியை குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்க கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி இராஜீவ் காந்தி இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.


பாதுகாப்பு துறை அமைச்சரானதும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது. அதைத்தொடர்ந்து இவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார்.


மக்களவையிலிருந்து விலகியதும் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடும் போட்டிக்கிடையே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார். ஜனதா கட்சியின் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது, இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.


காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னனி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னனி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கம்யூனிஸ்டுகளும், பாரதிய ஜனதா கட்சியும் அரசில் பங்கேற்க மறுத்துவிட்டு அரசில் பங்குபெறாமல் வெளியிலிருந்து தேசிய முன்னனி அரசை ஆதரிப்பதாக கூறின.


ராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரசுக்கு எதிர் அணியினர் வி. பி. சிங்கையே தூய்மையான மாற்று பிரதம வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் அரியானாவின் ஜாட் தலைவரான தேவி லால் பிரதமர் பதவியை ஏற்க்க மறுத்து பெருந்தன்மையாக வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஆனால் ஜனதா தளத்தின் கட்சிக்குள்ளயே வி.பி.சிங்கின் பிரதமர் பதவிக்கு போட்டியாளராக விளங்கிய தேவிலாலின் நெருங்கிய நண்பரான சந்திரசேகர்க்கு பிரதமர் பதவியை தர மறுத்ததை பல கட்சியினருக்கு நடுவே ஆச்சரியத்ததை ஏற்படுத்தியது. ஏனென்றால் கருத்தொருமித்த பிரதம வேட்பாளராக தேவிலால் வருவார் என சில தலைவர்கள் அவரிடம் கூறியதே. அவர் காங்கிரசில் பல பதவிகளில் நேர்மையாக செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியின் அரசின் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து எதிர்த்த அமைச்சர் வி. பி. சிங்கை பிரதமருக்கான தகுதியுடைய வேட்பாளராக அறிவித்துவிட்டு நாடாளமன்ற கூட்டத்திலிருந்து வெளியேறிய தேவி லால் அமைச்சரவையிலும் பங்கு பெறவும் மறுத்து விட்டார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சிக்கு பிறகு இரண்டாவது முறை கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு.


டிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.


பதவியேற்ற சில தினங்களிலேயே அரசு நெருக்கடியை சந்தித்தது. காஷ்மீர் தீவிரவாதிகள் அப்போதய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகளை கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளின் நிபதனைக்கிணங்க சில தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்து அமைச்சரின் மகளை மீட்டது. மாநில பிரிவினைவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என கருதிய பாஜகவின் வற்புறுத்தலினால் சர்ச்சைக்குரிய முன்னால் அதிகாரியான ஜக்மோகனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனராக நியமித்தார். அதிகாரபூர்வமற்ற காஷ்மீர் இஸ்லாம் தலைவரான மிர்வாச்சின் மரண ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு நடத்த ஜக்மோகன் உத்தரவு கொடுத்ததன் விளைவாக காஷ்மீர் தீவிரவாதம் மேலும் பரவகாரணமாக இருந்தார்.


பஞ்சாபில் கடும் போக்குடைய சித்தார்த்த சங்கர் ரேவை நீக்கிவிட்டு மித போக்குடைய முன்னால் அதிகாரி நிர்மல் குமார் முகர்ஜி அவர்களை ஆளுனராக நியமித்தார். இவர் புது தேர்தல் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றார். வி.பி.சிங் பொற்கோவிலுக்கு சென்று இந்திரா காந்தி அரசில் நடைபெற்ற புளுஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிக்கும் படி வேண்டிக்கொண்டார்.


இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை வி.பி.சிங் விலக்கிக்கொண்டார்.


பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு


இதற்கு முன்பு காங்கிரசின் எமர்ஜென்சியை எதிர்த்து தொடங்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சி ஆட்சியில் அக்கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் கொண்டு வந்த மண்டல் ஆணைக்குழுவை அவர் பரிந்துரை செய்து நடைமுறை செய்வதுக்குள் கட்சியில் ஏற்பட்ட ஒற்றுமை இல்லாமையால். பிரதமர் தலைமை சரண் சிங் வசம் வந்து விட சிறிது காலத்திலேயே ஜனதா கட்சி ஆட்சி 1980 ஆம் ஆண்டு கவிழ்ந்ததால். 1990ல் 10 வருடங்களுக்கு பிறகு ஜனதா கட்சி நீட்ச்சியாக மாறிய ஜனதா தளம் ஆட்சியில் வி.பி.சிங் தலைமையில் மண்டல் கமிஷன் பரிந்துரை உயிர்பெற்றது. தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். இத்திட்டமானது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத்துறை அமைப்பு மத்திய அரசாங்கம் சார்ந்த வேலை வாய்ப்புகள் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பு திட்டம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகையாகவும், சாதகமாகவும் இருந்தாலும். உயர் சாதி மக்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் எந்த பலனும் இல்லாததால் கடும் எதிர்ப்பு நிலை ஏற்பட்டு வட இந்தியாவில் நகர்புறங்களில் போராட்டங்களும், கலவரங்களும் நடைபெற்றது.


மேலும் இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டு திட்டத்தை வி. பி. சிங் அமல் படுத்த முற்பட்டபோது ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளபடும். என்று கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தலைவரான அத்வானி எச்சரிக்கை விடுத்தார். இத்திட்டத்தை அமல் படுத்த கூடாதொன்று அத்வானி தலைமையில் வட இந்தியாவில் பல மதகலவரங்களும், தீ குளிப்பு உயிர் பலி போராட்டங்களும் நடந்தேறியதால். வி.பி.சிங் ஆட்சியை பல எதிர்கட்சி தலைவர்களால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் இந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதாலும், அப்போது வட இந்தியாவில் நடந்த ராமர் யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்யப்பட்டதால் ஜனதா தளம் ஆட்சிக்கு பாஜக அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் வி.பி.சிங் பிரதமர் பதவியை இழந்து ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் மண்டல் கமிஷன் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கிரீம் லேயர் முறையில் வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது பல்லாண்டுகளாக மத்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு பெரும் சவுக்கடி என்று கூறினார்' வி.பி.சிங் தனது முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மகிழ்ச்சி தெரிவித்து கொண்டார்.


1989ல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 ல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு- தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


தீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.


வி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது.வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர்.மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

நன்றி : விக்கிபீடியா...



வி.பி.சிங் வெறும் பெயர் மட்டுமல்ல; இந்திய வரலாற்றின் தொடக்கம்...


வரலாற்றில் சில பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எஞ்சி நிற்பதில்லை. அவை, பெரும் வரலாற்றின் சாட்சியங்களாக, நீண்டதொரு கனவின் தொடக்கமாக உருப்பெற்று நிற்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி. சிங்கின் பெயர், அப்படியான பெயர்களில் ஒன்று. இந்திய வரைபடத்தின் கோடுகளைப் போல சமமற்றுக்கிடந்த மக்களின் வாழ்வை சமநிலைப்படுத்தியவர் வி.பி.சிங். இன்று அவரது நினைவு தினம்.


பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர், வி.பி.சிங். ஆனால், அவரது பிறப்பும் வாழ்வும் நேரெதிரானவை. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய வி.பி.சிங், அணுசக்தி விஞ்ஞான பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.


அரச குடும்பம், செல்வாக்கான வாழ்வு என்றிருந்தவர் வி.பி.சிங். வினோபாபாவேயின் பூமிதான இயக்கத்தின் செயல்பாடுதான் வி.பி.சிங்கின் பொதுவாழ்வில் குறிப்பிடத்தக்க முதல் விஷயம். அவரின் பூமிதான இயக்கத்துக்கு தனது சொந்த நிலங்களைத் தானமாக வழங்கினார்.


எளிய மக்களின்மீது அக்கறையும், சமூக நீதி எண்ணமும் கொண்டிருந்த வி.பி.சிங், 1969-ல் தேர்தல் அரசியலில் வென்றார். உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் என்னும் பரமபதத்தை வி.பி.சிங் தனது நேர்மையாலும் திறமையாலும் திறம்பட எதிர்கொண்டு அதில் வெற்றியும் கண்டார். எம்.எல்.ஏ-வாகத் தேர்வான அடுத்த இரண்டு ஆண்டுகளில், 1971-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆனார். வி.பி.சிங்கின் திறமையை அறிந்த இந்திரா காந்தி, தனது அமைச்சரவையில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக அவரை நியமித்தார்.



எமர்ஜென்சி காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் வர்த்தகத் துறையும் ஒன்று. பதுக்கல் ஒழிக்கப்பட்டதன் வாயிலாக, விலைவாசி, அரசின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அதற்கு வி.பி.சிங்கின் பங்கு உண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிப்பர். குறுகிய காலத்திலேயே இந்திய அரசியலில் வி.பி.சிங்கின் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றானது.


1980-ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திரா காந்தி, வி.பி.சிங்கை உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். உத்தரப்பிரதேசத்தின் தென்மேற்கு மாவட்ட மக்கள் வழிப்பறி, கொள்ளை இவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார் வி.பி.சிங். முழுவதுமாக கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாததற்குத் தானே பொறுப்பேற்றுக்கொண்டு, பதவி விலகவும் முன்வந்தார்.


அவருடைய சகோதரர் கொலைசெய்யப்பட, உத்தரப்பிரதேச முதல்வர் பதவியை, பதவியேற்ற இரண்டு வருடங்களில் ராஜினாமா செய்தார் வி.பி.சிங். அவரின் இந்தச் செயல், அப்போதைய இந்தியா முழுக்க வி.பி.சிங்கின் பெயரை உச்சரிக்க வைத்தது. இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆனார் வி.பி.சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் எனப் பலரும் அவரது நடவடிக்கைக்குத் தப்பவில்லை. 


அவரின் நேர்மையான செயல்பாடுகள், பல முக்கியப் புள்ளிகளுக்கு அழுத்தம் தரவே, நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வி.பி.சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார் ராஜீவ் காந்தி. இந்த நேரத்தில், ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில், பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், இம்முறை துறைமாற்றத்திற்குப் பதில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உடனே வி.பி.சிங், தனது எம்.பி பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.


மக்களவையிலிருந்து விலகியதும், அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து, 'ஜனமோர்ச்சா' என்ற கட்சியைத் தொடங்கினார். இவர் பதவி விலகியதால், அலகாபாத் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. பைக்கில் பயணம், தலையில் கட்டப்பட்ட துண்டு என மக்களோடு மக்களாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, வெற்றி வி.பி.சிங்கின் வசம் வந்தது. கடும் போட்டிக்கிடையே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியைத் தோற்கடித்தார். அக்டோபர் 11 அன்று 1988-ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து, ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. அப்போது நிலவிய அரசியல் சூழலில், வி.பி.சிங் ஒரு முக்கியத் தலைவரானார்.


1989-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய முன்னணியைக் கட்டமைத்து, ஆட்சியையும் அமைத்துக் காட்டினார், வி.பி.சிங். டிசம்பர் 1, 1989 அன்று, வி.பி.சிங் நாடாளுமன்ற அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால், பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். இந்திய அரசியலின் மிகச் சிறந்த தருணங்களில் அதுவும் ஒன்று. பாபா சாகேப் அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்த பெருமையும் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்கையே சேரும்.


இந்திய அரசியலில் மிக முக்கிய சீர்திருத்தத்தை அப்போது நிகழ்த்தினார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார் வி.பி.சிங். அவரின் இந்த செயல், இந்தியாவின் அசமன்பாடுகளைத் தவிடுபொடியாக்கி, பல எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் பெற உதவியது. இடஒதுக்கீடு, வி.பி.சிங் ஆட்சிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது. தொடர்ச்சியாக அத்வானியின் கைது போன்ற சம்பவங்கள் வி.பி.சிங்கின் அரசியல் அஸ்திவாரத்தை அசைத்தன. பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.



அவர் ஆட்சி செய்தது என்னவோ வெறும் 11 மாதங்கள்தான். அந்த 11 மாதங்களில், 'இந்திய அரசியலில் தன்னிகரற்றவர் வி.பி.சிங் ' என்ற பெரை அவருக்குப் பெற்றுத்தந்தது. அதன் பிறகு, பொது வாழ்க்கையிலிருந்து விலகியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, "பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை" என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார். ஏழைகளின் பகதூர், இடஒதுக்கீட்டின் நாயகன் எனக் கொண்டாடப்பட்ட வி.பி.சிங், புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார். அவரது பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. 


நன்றி : விகடன்...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...