கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் - சீமான் கோரிக்கை (Old Pension Scheme for Government Employees should be implemented immediately - Seaman demands)...


 பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்கள் வயிற்றில் அடிக்கிறது திமுக அரசு: சீமான் சாடல்...


 "எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றுகூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் நிறைவேற்ற மறுத்து அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.


கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்துவந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தொடக்கம் முதலே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர். அரசு ஊழியர்களின் 13 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016 ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். அக்குழு அமைக்கப்பட்ட 4 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையை 2018 ஆம் ஆண்டுதான் தமிழ்நாடு அரசிடம் அளித்தது.


ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அன்றைய அதிமுக அரசு, வல்லுநர் குழு அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டது. அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வல்லுநர் குழு அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டதையடுத்து வேறு வழியின்றி, 2019 ஜனவரி மாதம் அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது. இதனால் அரசு ஊழியர்களின் கண்ணீர்ப் போராட்டம் மீண்டும் தொடர்கதையானது.

 


இதற்கிடையில் கடந்த 2021 ஆம் ஆண்டுச் சட்டப்பேரவை தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கடந்த மே மாதம் சட்டப்பேரவையிலேயே அறிவித்து, நம்ப வைத்து கழுத்தை அறுத்தது திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்றுகூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.


இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் மேற்கு வங்க மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்டன. அந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே இமாசலப் பிரதேச புதிய அரசு தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒன்றரை லட்சம் பேர் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய முறையைக் கோரிப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிட அரசுகளும் ஆட்சி, அதிகார பலம் கொண்டு அவர்களை அடக்கி ஒடுக்கியும், பணியிடைநீக்கம் என அச்சுறுத்தியும் அவர்களது போராட்டத்தை, நீர்த்துப்போகச் செய்துவருவது பெருங்கொடுமையாகும்.

 


ஆகவே, திமுக அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடிவரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...