கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டம்: வாக்குறுதி நிறைவேறட்டும் (Old Pension Scheme: Let the promise come true)...


பழைய ஓய்வூதியத் திட்டம்: வாக்குறுதி நிறைவேறட்டும் (Old Pension Scheme: Let the promise come true) - இந்து தமிழ் திசை கட்டுரை...


எம். துரைப்பாண்டியன்:

இந்திய ராணுவத்தில் சிவில் பிரிவில் கணக்குத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற டி.எஸ்.நகாரா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, ஓய்வூதியதாரர்களால் மறக்கவே முடியாதது. 1982 டிசம்பர் 17 அன்று 5 பேர் கொண்ட அரசியல் அமர்வுக்குத் தலைமை வகித்த தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கினார். ‘ஓய்வூதியம் என்பது பிச்சைக்காரர் தட்டில் போடும் பிச்சைக் காசு அல்ல. அது தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமை’ என அந்தத் தீர்ப்பில் அவர் குறிப்பிட்டார்.


தீர்ப்பு வழங்கப்பட்ட அந்த தினம், நாடு முழுவதும் ‘ஓய்வூதியர் தின’மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 40ஆவது ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படும் வேளையில், புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS – New Pension Scheme) என்ற பெயரில் ஓய்வூதியமே மறுக்கப்படும் நிலை (No Pension Scheme) உருவாகி உள்ளது.


கடந்து வந்த பாதை: 

வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் ஆகியவை அரசு வேலை மீதான பெரும் நம்பிக்கையை உருவாக்கியிருந்தன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே ஓய்வூதியம் நடைமுறையில் இருந்தது. பணி ஓய்வுச் சட்டம் (1834), ராயல் கமிஷன் (1856), ஓய்வூதியத் திருத்த மசோதா (1867) உள்ளிட்ட சட்டங்களால் ஓய்வூதியம் நிலைத்து நிற்கும் சூழல் உருவானது.




1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் ஓய்வூதியம் தொடரத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அரசமைப்பின் 4ஆவது கூறின்படி கல்வி கொடுப்பது, வேலை கொடுப்பது, ஓய்வூதியம் கொடுப்பது, இயற்கைச் சீற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு உதவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 விதமான ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அனைத்து ஓய்வூதியங்களுக்கும் அரசு உத்தரவாதம் உண்டு. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு எந்த உத்தரவாதமும் வழங்காது; பங்குச் சந்தைதான் முடிவுசெய்யும்.


 


சமூகப் பாதுகாப்புக்கு வேட்டு: 

1991இல், புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது முதலே பிரச்சினை தொடங்கிவிட்டது. 2000ஆம் ஆண்டுவாக்கில் சர்வதேச நாணய நிதியமும் டாக்டர் பட்டாச்சார்யா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், ‘ஓய்வூதியம் என்பது மிகப் பெரிய நிதிச் சுமையை அரசுகளுக்கு உருவாக்கும் (Drain on Public Finance). எனவே, பழைய ஓய்வூதியத்தை மாற்றி பங்களிப்பு ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த வேண்டும்’ எனப் பரிந்துரைத்தன. புதிய ஓய்வூதியத் திட்டம் 2003 டிசம்பர் 22 அன்று, பாஜக ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சக ஆணை ஒன்றின் மூலமாகக் கொண்டுவரப்பட்டது.




அறிமுக நிலையிலேயே நாடாளுமன்ற இடதுசாரி உறுப்பினர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், சட்டம் நிறைவேற்றப்படாமல், புதிய ஓய்வூதியத் திட்டம் 2004 ஜனவரி 1இலிருந்து பணியில் சேர்ந்தவர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியமாக மாறியது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2002 வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தவர்களைப் பழிவாங்கும் விதத்தில் 2003 ஏப்ரல் 1ஆம் தேதியே அது அறிமுகப்படுத்தப்பட்டது.



 


பங்களிப்பு ஓய்வூதியத்தின் பாதகம்: 

ஊழியர்களின் சம்பளத்தில் 10% (Pay DA) பிடிக்கப்படும். இதுவும் ஒரு மாதிரியான சம்பளப் பிடித்தம்தான். அரசு 10%-ஐ ஊழியர்கள் கணக்கில் போடும் (மத்திய அரசில் தற்போது 14%). இரண்டும் சேர்ந்து ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் நியமித்துள்ள நிதி மேலாளர்கள், பரஸ்பர நிதி, எல்ஐசி, யூடிஐ உள்ளிட்ட பல்வேறு பங்குகளில் முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டு வட்டி ஏறும், இறங்கும். 2008இல் பங்குச் சந்தை வீழ்ச்சியின்போது பல ஆயிரக்கணக்கான கோடி வட்டி வருவாய் குறைந்தது. முதலீட்டுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.




வரையறை செய்யப்பட்ட (பழைய ஓய்வூதியம்) என்பது வாங்கும் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகச் சட்டப்படி வழங்கப்படும் (சம்பளத்தில் எந்தப் பிடித்தமும் செய்யப்படாமலேயே). பணியிலிருந்து ஓய்வுபெறுகிறபோது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு, சேர்த்த மொத்தப் பணத்தில் 60% மட்டும் வழங்கப்படும். 40% ஓய்வூதிய ஆண்டுத் திட்டத்தில் போடப்படும். அன்றைய பங்குச் சந்தை நிலவரப்படி ஓய்வூதியம் கிடைக்கும்.



நிதிதான் பிரச்சினையா?: 

புதிய ஓய்வூதியத் திட்டம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை பல கோடிப் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளார்கள். இதில் தனியாரும் தனியார் நிறுவனத் தொழிலாளர்களும் சேரலாம். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சேர்த்து வைத்துள்ள மொத்தத் தொகை ரூ.6,30,376 கோடி. இன்று இருக்கும் வரையறை செய்யப்பட்ட ஓய்வூதியத்தை 1954இல் தொடங்குகின்றபோது, மத்திய அரசு ஊழியர்களின் கணக்கிலிருந்த பங்களிப்பு வருங்கால வைப்பு நிதியிலிருந்த பணத்தைச் சுழல் நிதியாக எடுத்துக்கொண்டுதான் தொடங்கப்பட்டது.


இன்றும் தொழிலாளர் வைப்பு நிதியில் வழங்கப்படும் ஓய்வூதியம்கூட, சேர்ந்த மொத்தப் பணத்தில் ஒரு பகுதியைச் சுழல்நிதியாகப் பயன்படுத்தித்தான் வழங்கப்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகளுக்குப் பணம்தான் சுமையென்றால் அரசு ஊழியர்கள் சேர்த்து வைத்துள்ள ரூ.6,30,376 கோடியைச் சுழல் நிதியாகப் பயன்படுத்தி ஓய்வூதியம் வழங்க முடியும்; அரசுக்கு நிதிச் சுமையும் ஏற்படாது.


எல்லா மாநில அரசுகளும் இந்தத் திட்டத்தில் சேர வேண்டும் எனும் கட்டாயமில்லை என, 2013இல் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியபோது அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். மேற்கு வங்க மாநிலம் இதுவரை இதில் சேரவில்லை. திரிபுராவில் பாஜக ஆட்சி வந்த பிறகுதான் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2022 செப்டம்பர் 30 கணக்கின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழ்நாட்டில் 6,02,377 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளார்கள்.


அவர்கள் சேர்த்துவைத்துள்ள பணம் ரூ.53,000 கோடி. அதிமுக அரசு முறையாக இதை முதலீடு செய்யாததால் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை இழந்துகொண்டிருக்கிறது. அதிமுக அரசு ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் (PFRDA) சேரவே இல்லை. எனவே, இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை.


புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தில் இறந்துபோனால் பழைய ஓய்வூதியத்தின்படி குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தாது. மாநில அரசே பணிக்கொடைச் சட்டத்தை மதிக்கவில்லையோ எனும் கேள்வியை இது எழுப்புகிறது. பழைய ஓய்வூதியத்தைத் திரும்பக் கொண்டுவருவோம் எனத் தேர்தல் அறிக்கையில் திமுக உறுதியளித்தது.


ஆட்சிக்கு வந்து ஓராண்டைக் கடந்துவிட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் இதே வாக்குறுதியை அளித்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிட்டது; முதலாவது, அமைச்சரவைக் கூட்டத்திலேயே, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் அது ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. தமிழக முதல்வரும் சொன்னதைச் செய்வார் என நம்புவோம்!

 - எம். துரைப்பாண்டியன் செயல் தலைவர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்


நன்றி: இந்து தமிழ் திசை






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...