>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மே 26ஆம் தேதிக்குள் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Govt-aided schools to deplayement surplus teachers by 26th - School Education Department orders
பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கு 1.8.2022 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு 15.10.2022-க்குள் ஆணை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கையின்படி, உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை வருவாய் மாவட்டத்துக்குள் தகுதியுள்ள காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்தும், கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர்களைத் தேவையுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாணவர்கள் நலன் கருதி கல்வி ஆண்டின் இடையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல் ஆண்டின் இறுதியில் பணிநிரவல் மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 2022-23-ம் கல்வி ஆண்டின் இடையில் பணிநிரவல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரியும் வகையில் உபரி ஆசிரியர்களைத் தகுதியுள்ள இடத்துக்கு மே மாதம் 26-ஆம் தேதிக்குள் பணிநிரவல் செய்து அதன் அறிக்கையை ஆணையரகத்துக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.