புற்றுநோய், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? கேடு தரும் மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அவர்கள் வலியுறுத்தல்...

 


புற்றுநோய், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? கேடு தரும்  மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அவர்கள் வலியுறுத்தல்...

தமிழ்நாட்டில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனாகார்பஸ் (Conocarpus)  என்ற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது. சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும்,  தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள்,  கல்விநிறுவன வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவன  வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவது கண்டிக்கத்தக்கது.


தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கோனாகார்பஸ் வகை மரங்களின் மலர்கள் ஆண்டுக்கு இரு முறை மகரந்த சேர்க்கை நடத்தும் திறன் கொண்டவை. அப்போது அந்த மலர்களில் இருந்து வெளிவரும் மகரந்த தூள்கள் மனிதர்களின்  சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து சளி, இருமல், மூச்சடைப்பு  உள்ளிட்ட சுவாசக் குறைபாடுகளை ஏற்படுத்தும்;   இந்த மரங்களின் அருகில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும்,  புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல்  வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.


கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும்,  வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. பார்ப்பதற்கு பசுமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்த வகை மரங்களின் இலைகளை எந்தக் கால்நடைகளும் உண்ணாது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது. தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சக் கூடியவை. ஆனால், இது குறித்த உண்மைகள் எதுவும் தெரியாமல் இந்த வகை மரங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.


கோனாகார்பஸ் வகை மரங்களின் சிறப்புகளில் ஒன்று அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியவை. இந்த ஒற்றைக் காரணத்திற்காக அரபு நாடுகளில்  கோனாகார்பஸ் மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில்  வளர்க்கப்பட்டன. ஆனால், வெப்பத்தைத் தாங்கும் தன்மையால் கிடைக்கும் நன்மையை விட, தீமைகள் அதிகம் என்பதால் அரபு நாடுகளில் இந்த வகை மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. உலகில் மேலும் பல நாடுகளிலும் கோனாகார்பஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் குஜராத் மாநிலம் இந்த வகை மரங்களை அதிக அளவில் வளர்த்ததன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. வதோதரா நகரில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் 24 ஆயிரம் கோனாகார்பஸ் மரங்கள் நடப்பட்டன.  அந்த மரங்கள் தினமும் ஒரு லட்சம் லிட்டர் வீதம் ஆண்டுக்கு மூன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி அப்பகுதியை பாலைவனமாக மாற்றி வருகிறது. இதைத் தொடர்ந்து குஜராத், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் கோனாகார்பஸ் மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

கோனாகார்பஸ் மரங்களின் தீமைகள் குறித்தும் தமிழக அரசிடம்  சுற்றுச்சூழல் வல்லுனர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் சுற்றுச்சூழலுக்கும், மனித நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவித்து விடும். 


எனவே தமிழ்நாட்டில் கோனாகார்பஸ்  மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி,  மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய மா, வேம்பு, பூவரசு, அரசு போன்ற நாட்டு மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

@CMOTamilnadu

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...