கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Govt employees & Teachers will teach to DMK - Dr Ramadass

 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் திமுகவுக்குப் பாடம் புகட்டுவார்கள் - மருத்துவர் இராமதாசு


Govt employees & teachers will teach to DMK - Dr Ramadass



பணிநிலைப்பு கோரி போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? திமுகவின் துரோகம், அடக்குமுறைக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்!


தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012ஆம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. பணிநிலைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக  மாநில திட்ட இயக்குநர் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆசிரியர்களின் பிரச்சினை குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்குகூட நேரம் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் எவரும் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் பணிநிலைப்புப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழை ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. திமுக அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான பாடம் புகட்டுவார்கள்.


என மருத்துவர் இராமதாசு அறிக்கை 



B.Lit., degree is eligible for teaching job - Dr. Ramadoss urges Government to declare...

 

பி.லிட்., பட்டம் ஆசிரியர் பணிக்கு தகுதியானது என அரசு அறிவிக்க மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்...


அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பி.லிட்., பட்டம் ஆசிரியர் பணிக்கு தகுதியானது என அரசு அறிவிக்க மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தல்...


அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுப்பதா? என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானதுதான் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளநிலை இலக்கியம் (பி.லிட்) படித்து தேர்ச்சி பெற்றவர்களை, அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றும் வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்திருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்கதாகும்.



தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் 394 தமிழாசிரியர்கள் உள்ளிட்ட 2222 ஆசிரியர்களை போட்டித் தேர்வின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை கடந்த 25.10.2023 ஆம் நாள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. பின்னர் பணியிடங்களின் எண்ணிக்கை 518 தமிழாசிரியர்கள் உட்பட மொத்தம் 3192 என அதிகரிக்கப்பட்டது.



இந்த பணிகளுக்கான போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு ஆகஸ்ட் 24 ஆம் நாள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.



தமிழாசிரியர் பணிக்கு 518 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 164 பேரின் தேர்ச்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள். அந்தப் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு அடிப்படைத் தகுதியான பி.ஏ. தமிழ் இலக்கியம் பட்டத்திற்கு இணையானது இல்லை என்பதால் அவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத, சமூகநீதிக்கு எதிரான, ஒருதலைபட்சமான முடிவாகும்.



சென்னையில் கடந்த 11.04.2023 ஆம் நாள் நடைபெற்ற தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்தின் சமத் தகுதி நிர்ணயக் குழுவின் கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் பி.ஏ(தமிழ் இலக்கியம்) படிப்புக்கு இணையானது அல்ல என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இம்முடிவு இரு வகைகளில் தவறு.



முதலாவதாக, 06.09.2012 ஆம் நாள் நடைபெற்ற சமத் தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.லிட் பட்டம் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட். தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.



அதன்பின் 11 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சமத்தகுதி நிர்ணயக்குழு கூட்டத்தில் தான் அண்ணாமலை பல்கலைக்கழக பி.லிட் பட்டம், பி.ஏ., தமிழ் இலக்கியப் பட்டத்திற்கு இணையானது அல்ல என தீர்மானிக்கப் பட்டுள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் பெறப்பட்ட பி.லிட் பட்டங்கள் அனைத்தும் சென்னை பல்கலையின் பி.லிட். தமிழ் இலக்கிய பட்டத்திற்கு இணையானவையாகவே கருதப்பட வேண்டும். அந்த வகையில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்ற அனைவரும் தமிழாசிரியராக நியமிக்கப்பட தகுதியானவர்கள் தான்.



இரண்டாவதாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த 25.10.2023 ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆள்தேர்வு அறிவிக்கையின் 38 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள நான்காவது இணைப்பில் வரிசை எண் இரண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பி.லிட் பட்டங்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டத்திற்கு இணையானவை என 20.09.2012 தேதியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது எனும் போது, அண்ணாமலை பல்கலை. பி.லிட் பட்டமும் தகுதியானது தான்.


இவை இரண்டையும் கடந்து பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கான பாடத்திட்டத்தில் உள்ள 70, 80% பாடங்களைக் கொண்ட எந்த படிப்பும் பி.ஏ. தமிழ் இலக்கியத்திற்கு இணையானதாகவே பார்க்கப்பட வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டம் பெற்றவர்கள், அதை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்.



அதைத் தொடர்ந்து ஆசிரியர் வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தமிழாசிரியர் ஆக தகுதி பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் பொருந்தாதக் காரணங்களைக் கூறி 164 பட்டதாரி ஆசிரியர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதியை களைய வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உண்டு.



எனவே, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெறப்பட்ட பி.லிட் பட்டம் தமிழாசிரியர் பணிக்கு தகுதியானது தான் என்று தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டுதல்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றத்துடன் இணைந்து உயர்கல்வித்துறை வழங்க வேண்டும், அதன்மூலம் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.லிட் பட்டதாரிகள் 164 பேருக்கும் தமிழாசிரியர் பணி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


புற்றுநோய், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? கேடு தரும் மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அவர்கள் வலியுறுத்தல்...

 


புற்றுநோய், ஆஸ்துமாவை ஏற்படுத்தும் கோனாகார்பஸ் மரங்களை அரசே வளர்ப்பதா? கேடு தரும்  மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்! - மருத்துவர் இராமதாசு அவர்கள் வலியுறுத்தல்...

தமிழ்நாட்டில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனாகார்பஸ் (Conocarpus)  என்ற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது. சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும்,  தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள்,  கல்விநிறுவன வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவன  வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவது கண்டிக்கத்தக்கது.


தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கோனாகார்பஸ் வகை மரங்களின் மலர்கள் ஆண்டுக்கு இரு முறை மகரந்த சேர்க்கை நடத்தும் திறன் கொண்டவை. அப்போது அந்த மலர்களில் இருந்து வெளிவரும் மகரந்த தூள்கள் மனிதர்களின்  சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து சளி, இருமல், மூச்சடைப்பு  உள்ளிட்ட சுவாசக் குறைபாடுகளை ஏற்படுத்தும்;   இந்த மரங்களின் அருகில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும்,  புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல்  வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.


கோனாகார்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும்,  வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. பார்ப்பதற்கு பசுமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்த வகை மரங்களின் இலைகளை எந்தக் கால்நடைகளும் உண்ணாது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது. தேனீக்கள் கூட இந்த மரத்தை அண்டாது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சக் கூடியவை. ஆனால், இது குறித்த உண்மைகள் எதுவும் தெரியாமல் இந்த வகை மரங்கள் தமிழகத்தில் அதிக அளவில் நடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.


கோனாகார்பஸ் வகை மரங்களின் சிறப்புகளில் ஒன்று அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியவை. இந்த ஒற்றைக் காரணத்திற்காக அரபு நாடுகளில்  கோனாகார்பஸ் மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில்  வளர்க்கப்பட்டன. ஆனால், வெப்பத்தைத் தாங்கும் தன்மையால் கிடைக்கும் நன்மையை விட, தீமைகள் அதிகம் என்பதால் அரபு நாடுகளில் இந்த வகை மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. உலகில் மேலும் பல நாடுகளிலும் கோனாகார்பஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் குஜராத் மாநிலம் இந்த வகை மரங்களை அதிக அளவில் வளர்த்ததன் விளைவை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது. வதோதரா நகரில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் 24 ஆயிரம் கோனாகார்பஸ் மரங்கள் நடப்பட்டன.  அந்த மரங்கள் தினமும் ஒரு லட்சம் லிட்டர் வீதம் ஆண்டுக்கு மூன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி அப்பகுதியை பாலைவனமாக மாற்றி வருகிறது. இதைத் தொடர்ந்து குஜராத், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் கோனாகார்பஸ் மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

கோனாகார்பஸ் மரங்களின் தீமைகள் குறித்தும் தமிழக அரசிடம்  சுற்றுச்சூழல் வல்லுனர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் சுற்றுச்சூழலுக்கும், மனித நலத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவித்து விடும். 


எனவே தமிழ்நாட்டில் கோனாகார்பஸ்  மரங்களை அரசு தடை செய்வது மட்டுமின்றி,  மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வகை மரங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சாலையோரங்கள், பூங்காக்கள், தோட்டங்கள் போன்றவற்றில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய மா, வேம்பு, பூவரசு, அரசு போன்ற நாட்டு மரங்களை நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

@CMOTamilnadu

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை...


 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை  

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல்

இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது:

அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்!


தமிழ்நாட்டில் அரசு  பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்,  தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள்  மே மாதம் 24-ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  ஆசிரியர்களை  கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்வது வரவேற்கத் தக்கது. ஆனால், அதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறை மிகவும் தவறானதும், அநீதியானதும் ஆகும்.


ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் கடைபிடிக்கப்படும் அடிப்படை நடைமுறை, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது தான். இது தான் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம் ஆகும். ஆனால்,  2021-ஆம்  ஆண்டில்  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாகவே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் புதிய  நடைமுறையை புகுத்தியிருக்கிறது.


கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.  பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, அந்த நேரத்தில் காலியாக உள்ள இடங்களில்  அவர்களுக்கு விருப்பமான  இடத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதி ஆகும். அது அவர்களின் உரிமை. அப்படி செய்வது தான் பணியிட மாறுதலில்  குழப்பங்களைத் தடுக்கும்.  


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப் பட்டால்,  அதற்கு முன் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும்.  அத்தகைய சூழலில் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய போதிய இடங்கள் இருக்காது. அதனால், விருப்பம் இல்லாமல், அதிகாரிகளால் ஒதுக்கப்படும்  இடங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  அதுமட்டுமின்றி,  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும். அதனால்,  அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.


ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு  வழங்காமல்,  பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதன் நோக்கமே, பணியிட மாறுதல் முடிவடைந்த பிறகு  பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஏற்படும் காலியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதலில் அமர்த்தலாம் என்பது தான் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை  புறந்தள்ளி விட முடியாது.


2021-ஆம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் காரணமே ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான். அவர்களின் பணியிட மாறுதல் நடைமுறையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த  நடைமுறையை மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையை ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு,  அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று  வலியுறுத்துகிறேன்.


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் - தொடர் வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மருத்துவர் ச.ராமதாசு அவர்கள்...

 


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் - தொடர் வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மருத்துவர் ச.ராமதாசு அவர்கள்...

பழைய ஒய்வூதியம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ  நாளை முதல் பிப்ரவரி 10-ஆம் நாள் முதல் பல்வேறு கட்ட போராட்ட ஆயத்த பரப்புரை நடவடிக்கைகளை  மேற்கொள்ளவுள்ளது. அவற்றின் உச்சமாக பிப்ரவரி 15-ஆம் நாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தையும், பிப்ரவரி 26-ஆம் நாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தப்போவதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பு  அறிவித்திருக்கிறது.  இந்தப் போராட்டம் தடுக்கப்பட வேண்டும்.


ஆசிரியர்கள் மற்றும் அரசு  ஊழியர்களின்  கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், பிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் அவர்கள் போராடி வருகின்றனர்.  அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்  என்று கடந்த  20 ஆண்டுகளாகவே அதிமுகவும்,  திமுகவும் மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை எதையும் இரு கட்சிகளின் அரசுகளும் நிறைவேற்றவில்லை.  2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும்  அரசு ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் பெறப்பட்டாலும்  கோரிக்கைகள் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  பல ஆண்டுகளாக பொறுத்துப் பார்த்து, எந்த பயனும்  ஏற்படாத நிலையில் தான் ஜாக்டோ ஜியோ  அமைப்பு தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறது.  ஆசிரியர்கள் மற்றும் அரசு  ஊழியர்களின் கோரிக்கைகளையும்,  வேலை நிறுத்தப் போராட்டத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது.  அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும்.


மார்ச் மாதத்தில்  பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளன.  பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள்  அறிவிக்கப்படவுள்ளன. இத்தகைய சூழலில்  அரசு  ஊழியர்களும்,  ஆசிரியர்களும் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், கல்வி எந்திரமும், அரசு எந்திரமும் முடங்கி விடும். இது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். எனவே,  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை  நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின்  தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கோவா விமான நிலையத்தில் பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் அவர்கள்...


 சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கோவா விமான நிலையத்தில்  பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ் அவர்கள் (Tamil Nadu Airports including Chennai should employ only Central Professional Security Forces who know Tamil for security work. Action should be taken against security guard who violated woman engineer at Goa airport - Dr Ramadoss)...


இந்தி தேசிய மொழி - கண்டிப்பாக கற்க வேண்டும் என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா? அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை வேண்டும்!


சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்  பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கேட்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். ‘ நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர்,’’ தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும்  இந்தி கற்க வேண்டும்” என்று உரத்தக் குரலில் கூறி தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார்.  மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயல் கண்டிக்கத்தக்கது.


விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் பலர், தங்களின் பணி என்ன? என்பதை மறந்து விட்டு,  இந்தி தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அரசியல் கட்சியினர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர்.  இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்ற அடிப்படைக் கூட தெரியாத அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளிடமும்,  பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடமும் இதுகுறித்து அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது?


இந்தி தான் இந்தியாவின்  தேசிய மொழி என்ற பொய்யை காலம் காலமாக சில மத்திய அமைச்சர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் கூறி வருவதன் காரணமாகவே உண்மை தெரியாத  மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.  அவர்களின் பணி வரம்பு என்ன? என்பதையும்,  இந்தி நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான் என்பதையும் அவர்களுக்கு அவர்களின் உயரதிகாரிகள்  புரிய வைக்க வேண்டும்.


கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.



முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பதிவு:

கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் @CISFHqrs வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார். "தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
#StopHindiImposition



அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பதிவு:

கோவா விமான நிலையத்தில் @CISFHQrs வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.

பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். #StopHindiImposition



“எனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே மிரட்டல் குறித்து புகார் அளித்தேன்”


-கோவா விமான நிலையத்தில் மிரட்டப்பட்ட பெண், சர்மிளா ராஜசேகர் பரபரப்பு பேட்டி!



நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பிடுக - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் (Fill up 2534 posts of municipal administration department through Tamilnadu Public Service Commission (TNPSC) - Ramadoss urges Govt)...


நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பிடுக -  அரசுக்கு ராமதாசு வலியுறுத்தல் (Fill up 2534 posts of municipal administration department through Tamilnadu Public Service Commission (TNPSC) - Ramadoss urges Govt)...


 தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2,534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக  தேந்தெடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. 


எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத்துறை அமைப்புகளின் பணியாளர்களை TNPSC மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு  எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும்.


அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.



நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பிடுக -  அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது", என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. எந்த நோக்கத்துக்காக உள்ளாட்சிகள், பொதுத்துறை அமைப்புகளின் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும்.


நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் 2534 தொடக்க நிலை பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், நகராட்சி நிர்வாகமே, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. அதற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை கடந்த 14-ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசின் இந்த முடிவு முற்றிலும் தவறானது. தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறை தான் இருந்து வந்தது. ஆனால், இத்தகைய நடைமுறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இனிவரும் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான சட்டமும் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.


உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது; ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்துறையே தேர்வு செய்யும் போது, அதில் முறைகேடுகள் நடக்கக்கூடும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன.


நகராட்சி நிர்வாகத்துறைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் 2534 பேரும் தொடக்க நிலை பணியாளர்கள் ஆவர். டிஎன்பிஎஸ்சி மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது முதல் தொகுதி பணிகளுக்கும், இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் மட்டுமே நேர்முகத்தேர்வு நடத்தப்படும். தொடக்க நிலை பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படாது. அந்த வழக்கத்துக்கு மாறாக நகராட்சி நிர்வாகத்துறை தொடக்க நிலை பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் நோக்கமே, அதில் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்கி, அவர்களின் தேர்ச்சியை உறுதி செய்வது தான். இதை எவரும் மறுக்க முடியாது.


மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான பணியாளர்களை தாங்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில், நகராட்சி நிர்வாகத்துறை காட்டும் ஆர்வமும், துடிப்பும் இதை உறுதி செய்கிறது. நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை கடந்த நவம்பர் 14-ம் நாள் தான் வெளியிடப்பட்டது. அதனடிப்படையிலான அடுத்தக்கட்ட பணிகள், அதற்குப் பிறகு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே, அக்டோபர் 3-ம் நாள் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு முன்னிலையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை தீர்மானிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அரசாணைக்கு முன்பே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டியத் தேவை என்ன?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு 10 ஆயிரம் பணியாளர்களைக் கூட தேர்ந்தெடுப்பதில்லை; அதனால், அதற்கு பணிச்சுமை கிடையாது. அதற்கெல்லாம் மேலாக, அண்ணா பல்கலைக்கழகம் என்பது ஒரு கல்வி நிறுவனம். அரசு ஊழியர்களை போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கும் கட்டமைப்போ, அனுபவமோ அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடையாது. அவ்வாறு இருக்கும் போது, டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது.


அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.


 நன்றி : இந்து தமிழ் 

ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் (Salary Discrepancy Injustice: Justice should be given to Secondary Grade Teachers - Dr. S.Ramadoss)...



 ஊதிய முரண்பாடு அநீதி : இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் - மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் (Salary Discrepancy Injustice: Justice should be given to Secondary Grade Teachers - Dr. S.Ramadoss)...


தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் இரு பிரிவினருக்கு இடையிலான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசுக்கும், ஆசிரியர் சங்கத்தினருக்கும்  இடையே நடைபெற்ற பேச்சுகள் தோல்வியடைந்திருக்கின்றன. நீதி கிடைக்காத ஆசிரியர்கள் 28-ஆம் நாள் முதல் போராட்டம் அறிவித்துள்ளனர். வருங்காலத் தலைமுறையினருக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் கட்டாயத்திற்கு தள்ளுவதை ஏற்க முடியாது.


சம வேலைக்கு சம ஊதியம் என்ற முழக்கத்துடன் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை மிகவும் நியாயமானது.  2009-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம்  தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9,300 அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. ஆனால், 01.06.2009க்கு பிறகு  நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 மட்டுமே அடிப்படை ஊதியமும், ரூ.2800 தர ஊதியமும் வழங்கப்படுகிறது. அப்போது அடிப்படை ஊதியத்தில் ரூ.4100 என்ற வேறுபாட்டில் தொடங்கிய ஊதிய முரண்பாடு, இப்போது மொத்த ஊதியத்தில் ரூ.16,000க்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது. ஒரே பணியை செய்யும் இடைநிலை ஆசிரியர்களிடையே இந்த அளவு ஊதிய முரண்பாடு நிலவுவது நியாயமற்றது.


2009-ஆம் ஆண்டில் தொடங்கி 14 ஆண்டுகளாக நீடித்து வரும் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்களுக்கும், அரசுக்கு இடையில் பலமுறை பேச்சு நடத்தியும் எந்தத் தீர்வும் காணப்படாதது மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஆண்டு திசம்பர் மாதம் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் 5 நாட்களுக்கும் மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுடன்  பேச்சு நடத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆசிரியர்களின்  கோரிக்கையை ஏற்பது குறித்த முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார். ஆனால், அதன்பின் 9 மாதங்களாகியும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படவில்லை.


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது சாத்தியமற்ற ஒன்றல்ல; எளிதானதே. 2009-ஆம் ஆண்டு மே மாதம் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.5200 மட்டுமே  அடிப்படை ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. அதை ஏற்காத ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பணிக்கான அடிப்படைக் கல்வித் தகுதி பட்டயப் படிப்பு என்பதையும், ரூ.5200  என்பது பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பணிக்கானது என்பதையும் அரசுக்கு சுட்டிக்காட்டினர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கான அடிப்படை ஊதியம் 1.80 மடங்கு உயர்த்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு இதே நடைமுறையை கடைபிடிக்க  அரசு தவறி விட்டது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.


இடைநிலை ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி கல்வியியல் பட்டயப்படிப்பு (D.T.Ed) ஆகும். பட்டயப்படிப்பை குறைந்தபட்ச கல்வித்தகுதியாகக் கொண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.9300 அடிப்படை ஊதியம் வழங்கப்படும் போது இடைநிலை ஆசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் அந்த அளவு ஊதியத்தை மறுப்பது நியாயமற்றது. இந்த உண்மையையும், நியாயத்தையும் உணர்ந்து கொண்டு   2009-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ரூ.9300 அடிப்படை  ஊதியம் வழங்கப்பட்டால் 14 ஆண்டு கால சிக்கலுக்கு தமிழக அரசால் தீர்வு கண்டுவிட முடியும்.


இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதே கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு திசம்பர் 25, 26 ஆகிய நாட்களில் சென்னையில் போராட்டம் நடத்திய போது, அவர்களை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த  மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை நன்கு உணர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக  அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கி சிக்கலைத் தீர்க்க வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை (When will the Old Pension Scheme come into effect in Tamilnadu - Report by P.M.K Founder Dr.Ramadasu)...


>>> தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் அறிக்கை (When will the Old Pension Scheme come into effect in Tamilnadu - Report by P.M.K Founder Dr.Ramadasu)...


 தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்...

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

சண்டிகரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.75 லட்சம் பஞ்சாப் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். அவர்களிடமிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ.16,746 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு வலியுறுத்தியுள்ளது.


அண்மைக்காலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியது இராஜஸ்தான் மாநிலம் தான். அப்போது ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சமூக நீதிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இந்தியாவில் 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது தான் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழ்நாட்டில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.


தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும். பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்த தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.


ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்று என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது. எனவே, இனியும் ஏதேனும் காரணங்களைக் கூறி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



முதுநிலை ஆசிரியர் பட்டியலை மாற்றி வெளியிட வலியுறுத்தல்...

 முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 



அவரது அறிக்கை: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, போட்டி தேர்வுகள், 2019 செப்டம்பரில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு துவக்கத்தில், முடிவுகள் வெளியிடப்பட்டன. 



மேல் முறையீடு

வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்று, பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதனால், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வாக வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. 



இந்த அநீதியை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வான, எம்.பி.சி., மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவு பணியிடங்களில், தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ள, எம்.பி.சி., மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த, சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை, கடுமையாக விமர்சித்து நிராகரித்துள்ளது.இதற்கு காரணமான, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும்.


நடவடிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட, எம்.பி.சி., மாணவர்கள், 34 பேருக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும். அதேபோல, தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களுக்கான தேர்வு பட்டியலையும் திருத்தி அமைத்து, பாதிக்கப்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய, சம்பந்தப்பட்ட பணியாளர் சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்...

 


தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய, சம்பந்தப்பட்ட பணியாளர் சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் முருகேசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், குறைகளைக் களைவதற்குப் பதிலாக முரண்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இதுவரை இல்லாத நடைமுறையாக பல்வேறு துறை பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்நாட்டில் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டன. புதிதாக நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் பல்வேறு முரண்பாடுகளும், குறைகளும் இருப்பதாக பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் முறையீடு செய்தன. அவற்றை ஏற்ற தமிழக அரசு, அதுகுறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நிதித்துறை செலவினங்கள் பிரிவுச் செயலாளர் எம்.ஏ.சித்திக் தலைமையில் ஓர் உறுப்பினர் ஆணையத்தை அமைத்தது.

மற்றொருபுறம் 52 வகையான பணியாளர்கள் தங்களின் ஊதியப் பாகுபாட்டை நீக்க வேண்டும் என்று ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அதுபற்றிப் பரிந்துரைக்க ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்த ஊதிய விகித மாற்றங்கள்தான் அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு ரூ.2,600 சிறப்பு ஊதியம் அறிவிக்கப்பட்டிருப்பதால் அத்துறை பணியாளர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதி களையப்பட்டிருக்கிறது. ஆனால், வேறு பல துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் ஊதிய விகிதமும், பணி நிலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

இது நியாயமல்ல. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் பொறியாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணிநிலை போதிய புரிதல் இன்றி மத்திய அரசு பொறியாளர்களுடன் ஒப்பிடப்பட்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.

மத்திய அரசின் பொதுப்பணித் துறையில் பணியாற்றும் பொறியாளர்களும், தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களும் ஒரே பணிநிலையில் இருப்பவர்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை குறைக்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது இப்போது தொடங்கி வாழ்நாள் வரையிலும் பொறியாளர்களுக்குக் கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய வேண்டியது அரசின் கடமையாகும். தமிழக அரசுத்துறை பொறியாளர்களுக்கும், மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கும் பணிநிலையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மத்திய பொதுப்பணி பொறியாளர்கள் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடித்து பணியில் சேர்ந்தவர்கள்; தமிழ்நாடு அரசுத் துறை பொறியாளர்கள் பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இரு பிரிவினருக்கும் ஒரே ஊதியம் நிர்ணயிப்பது நியாயமல்ல. தமிழக அரசுத் துறை பொறியாளர்களுக்கு ரூ.15,600 அடிப்படை ஊதியம் மற்றும் பதவி நிலைக்கு ஏற்றவாறு தர ஊதியமும் நிர்ணயிக்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும்; பாகுபாடுகளைக் களையும்.

அதேபோல், நில அளவைத்துறை ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் பதவிகள் இதுவரை ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறையில் உள்ள ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர் பதவிகளுக்கு இணையாகக் கருதப்பட்டு சமமான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது பதவி நிலையும், ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை உடனடியாகக் களைய தமிழக அரசு நடவடிகை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பணியாளர் சங்கங்களை அரசு அழைத்துப் பேச வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

27-01-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் குறள் எண்:956 அதிகாரம...