கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers' Federation Condemns Union Education Minister's Dictatorship Speech

 

43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வி அமைச்சரின் சர்வாதிகாரப் பேச்சுக்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்


Teachers' Federation Condemns Union Education Minister's Dictatorship Speech For Harming Education Welfare Of 43 Lakh Tamil Nadu Students


43 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி நலனை பாழ்படுத்துகின்ற ஒன்றிய கல்வி அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான்  அவர்களின் சர்வாதிகாரப் பேச்சுக்கு ஐபெட்டோ அகில இந்திய அமைப்பு (AIFETO... ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS' ORGANIZATIONS ) கடும் கண்டனம்... வெளியிட்ட கருத்தினை திரும்ப பெற வலியுறுத்துகிறோம்


*AIFETO... 19.02.2025..*


 *தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*



*ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தர்மேந்திர பிரதான் அவர்கள் கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு எல்லையையும் தாண்டி எல்லா அதிகாரமும் பெற்ற ஒரு சர்வாதிகாரி போல் ஒரு பொதுக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.*


 *தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையினையும் மும்மொழி திட்டத்தினையும் ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு 1252 கோடியினையும் நாங்கள் விடுவிப்போம்!.. மும்மொழிக் கொள்கையினை ஏற்றுக் கொள்வதில் ஏன் பிடிவாதமாக இருக்கிறீர்கள்!.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் ஏன் இவ்வளவு எதிர்ப்புணர்வை காட்டுகிறீர்கள்!.. என்று கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.*


 *தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் என்ற ஒப்பீடு இல்லாமல் அனைவரும் ஒரே நோக்கத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்!.. மும்மொழி கல்வி திட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம்!.. என்று கண்டனக் கூட்டத்தினை கோரிக்கை முழக்கத்தினை எழுப்பி களத்தில் போராடும் நிலையினை உருவாக்கி இருக்கிறார்.*



 *அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் சார்பில் டெல்லியில் உள்ள அமைச்சர் அலுவலகம் முன்பு கண்டனப் போராட்டத்தினை நடத்தி உள்ளார்கள்.*



 *சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு எத்தனையோ ஒன்றிய கல்வி அமைச்சர்கள் காங்கிரஸ், ஜனதா கட்சி,  பாரதிய ஜனதா, ஆகிய கட்சிகளில் இருந்தவர்கள் பொறுப்பு வகித்து செயல்பட்டு வந்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல்  அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிராக மாநில மக்களின் மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய கல்வி அமைச்சர் ஒருவர் இருப்பாரேயானால் அவர் தர்மேந்திர பிரதானாகத்தான் இருப்பார்.*



 *ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோதே நாங்கள் இரு மொழி கொள்கையினை ஏற்றுக் கொண்டவர்கள்.  பேரறிஞர் அண்ணா அவர்கள்  கொண்டு வந்த இரு மொழிக் கொள்கை... தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரால் ஆதரிக்கப்பட்ட இரு மொழிக் கொள்கை... பேரறிஞர் அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சர்களாக  இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா உள்ளிட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் உள்ளது.*


 *தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உருது ஆகிய  மொழிகளை பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அவர் அவருடைய தாய் மொழியை அவர் அவர்கள் பேசுகிறார்கள். படிக்கிறார்கள். இன்னொரு மொழியினை தேர்வு செய்து  பொது மொழியாக தேசிய அளவில் உலக அளவில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதால் ஆங்கில மொழியை படிக்கிறார்கள்.*


 *உலகின் பல நாடுகளில் ஆராய்ச்சி படிப்பு வரையில் தாய் மொழி வழிக் கல்வி போதிக்கப்படுகிறது. தாய்மொழி வழிக் கல்வியில் படித்தவர்கள் உலக அளவில் பல்வேறு பொறுப்புகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரோ அமைப்பின் தலைவர்கள் அதில் பணியாற்றும் விஞ்ஞானிகள் பலர் தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் தான். தமிழ்நாட்டு அரசு பள்ளியில் படித்தவர்கள் தான்.*


 *நாடாளுமன்றத்தில் நாவன்மையுடன் விவாதங்களில் கலந்து கொண்டவர்கள் பலர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் தான். 140 கோடி மக்களினுடைய பிரதிநிதியாக மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம்  அவருக்கு வரவேற்பினையும் பொது மரியாதையையும் அளித்து வருகிறார்கள். ஆனால் அவர் அங்கு  இந்தி மொழியில் தான் பேசுகிறார். பெருமைக்குரிய மேனாள் பாரதப் பிரதமர்   வாஜ்பாய் அவர்கள் பல்வேறு விவாதங்களில் இந்தியில் தான் பேசி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேசி வருகிறார்கள்... இப்போது வளர்ந்துள்ள தொழில்நுட்ப உதவியால் தாய் மொழியான தமிழில் பேசி வருகிறார்கள்.*



 *எந்த மொழியை படிக்க வேண்டும் என்று முதலில் மாநிலங்கள் முடிவு செய்ய வேண்டும். இது கொள்கை வழி சார்ந்த முடிவாகும்.  தன் குழந்தைகளை எந்த மொழியில் படிக்க வைக்க வேண்டும் என்ற உரிமை பெற்றோர்களுக்கு தான் இருக்கிறது.*


 *அதை விடுத்து  அவர்கள் பிள்ளைகள்  அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்... ஹிந்தி படிக்கிறார்கள்... சமஸ்கிருதம் படிக்கிறார்கள்  என்பதெல்லாம் அரசியல் ஆகும்.*


 *தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். 52 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.  56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் மும்மொழி கொள்கையை படிக்கிறார்கள்.. ஆனால் அரசு பள்ளியில்  படிக்கும் பிள்ளைகள் மட்டும்  மும்மொழிக் கொள்கை படிக்க எது தடையாக உள்ளது?.. என்று கேள்வி கேட்டுள்ளார்கள்.*



 *தமிழ்நாட்டில் உள்ள மொத்த 56 ஆயிரம் பள்ளிகளில் சுயநிதி தனியார் பள்ளிகள் 16490 தான் இதில் 1235 சிபிஎஸ்சி சுயநிதி தனியார் பள்ளிகளில் மட்டும்தான் இந்தி பாடம் கற்பிக்கப்படுகிறது. வெறும் 3.16% சதவீதம்  படிக்கிறார்கள்.. தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் மாணவர்கள்தான் இந்தி படிக்கிறார்கள்..  தமிழ்நாடு சமச்சீர் கல்விமுறையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. அறிக்கைகள் வேறு!.. எதார்த்தம் என்பது வேறு!...*



*தமிழ்நாட்டில்  படிக்கும் மாணவர்கள் ஏன் இந்தி படிக்கிறார்கள்? என்று யாரும் கேட்கவில்லை. சமஸ்கிருதம் ஏன் படிக்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை.*



 *ஆனால் மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியை திணிக்க முற்படுவதைதான் தமிழ்நாடு  மொழிப்போர் தியாகிகளின் அடிச்சுவட்டில்   நின்று கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.*



 *தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள 66 பக்கத்திலும் நவீன குலக்கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் புகுத்துவது தான்... விஸ்வகர்மா திட்டம் மாணவர்களை குலத் தொழிலுக்கு  அழைத்து செல்வதுதான் எதார்த்தமான உண்மையாகும்.*



 *தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்கிறார்கள். 43 லட்சம் மாணவர்களின் கல்வி நிதியினை தேசிய கல்விக் கொள்கை, மும்மொழித்திட்டம் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தினை ஏற்றுக் கொண்டால்தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சர்வாதிகார பேச்சுக்கு...*


 *தமிழன் என்றோர் இனமுண்டு!.. தனியே அவருக்கோர் குணம் உண்டு..*



*செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும் இந்த தேகம் இருந்ததொரு லாபமுண்டோ?...*


 *என்ற மொழிப்போர் விடுதலை குரல் வழியே தமிழ்நாட்டில் பதிலடி கொடுப்போம்!.*



 *தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி நலனுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பீர்களேயானால் கண்டன குரல்களை விட... வாக்குச்சாவடியில் உங்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் மனக் குமுறல்கள்  தேர்தலில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும்... என்பதை  ஆசிரியர் இயக்கங்களின் மூத்த  தலைவர் என்ற முறையிலும்  22 மாநிலங்களின் பிரதிநிதிகள் இருக்கக்கூடிய அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பு  (AIFETO)  ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS' ORGANIZATIONS  தேசிய செயலாளர் என்ற  முறையில் அனைத்து மாநிலங்களில் நேரடி தொடர்புள்ளவன் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்.*


 *மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர்  தர்மேந்திரா பிரதான் அவர்கள் சுயபரிசோதனை செய்து கொண்டு வெளியிட்ட கருத்தினை திரும்பப் பெறுங்கள்...*



 *ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனை காப்பாற்றுவதற்காக... இரு மொழி கொள்கையினை காப்பாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்!.. என்பதில் உறுதி எடுத்துக்கொண்டு களத்தில் நின்று போர்க் குரலை  எழுப்பிக் கொண்டே இருப்போம்!...*



 *விரைவில் டெல்லியில் ஒன்றிய கல்வி அமைச்சர் அலுவலகத்திற்கு முன்பு  மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


 *மொழிப்போர் தியாகிகள் ஒரு சங்கரலிங்கனார் ஒரு பொன்னம்பலனார், ஒரு உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் உணர்வுகள் தமிழ்நாட்டில் இன்னமும் பீறிட்டு எழுந்து கொண்டுதான் இருக்கிறது..*


*புகழ்பெற்ற கோத்தாரி கல்வி குழு ஒட்டுமொத்த  GDP இல் 6% நிதியினை கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். ஆனால் ஒன்றிய அரசு 4% சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே நிதியினை ஒதுக்கி வருகிறார்கள்.. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியினை 6% சதவீதமாக உயர்த்த வேண்டுகிறோம்.*


*நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ₹ 2152 கோடி நிதியினை உடன் மத்திய அரசு விடுவித்திட வேண்டுமென்று ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம்.*



 *அடுத்த பதிவில் பீகார் மத்திய பிரதேசம் உத்தரப்பிரதேசம் குஜராத் ஆகிய மாநிலங்களின் மொழி உணர்வினையும் கல்வித் தரத்தினையும் விரிவான பதிவாக வெளியிட உள்ளோம் என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம்.*



*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com . தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600 005.*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2025 - SAT Question Paper

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு 2025 - படிப்பறிவுத் திறன் தேர்வு வினாத்தாள் NMMS 2025 - SAT Question ...