அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா: மு.க.ஸ்டாலின் அரசை சமூகநீதியே சபிக்கும் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை
அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா: மு.க.ஸ்டாலின் அரசை சமூகநீதியே சபிக்கும்- அன்புமணி
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் நீதிக்கட்சியின் வழிவந்தவர், பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.;
அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா: மு.க.ஸ்டாலின் அரசை சமூகநீதியே சபிக்கும்- அன்புமணி
பா.ம.க. தலைவர், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசுத்துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் மேலாளர் நிலை வரையிலான பணியிடங்களை குத்தகை முறையில் மனிதவள நிறுவனங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறைக்கு திராவிட மாடல் அரசு மூடுவிழா நடத்தியுள்ளது. இது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களிலும், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர்கள் வரையிலான பணிகளுக்குத் தேவையான நபர்களை குத்தகை முறையில் வழங்கும் உரிமை தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசுத்துறைகளுக்குத் தேவையான பணியாளர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட மாட்டார்கள். எந்தெந்தப் பணிகளுக்கு எவ்வளவு பேர் தேவை? என்பதை இந்த நிறுவனத்திடம் தெரிவித்தால், தேவையான பணியாளர்களை ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனமே அனுப்பிவிடும்.
அவ்வாறு அனுப்பப்படும் பணியாளர்களில் அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட கடைநிலைப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.13,000 வீதமும், நகல் எந்திரத்தை இயக்குபவருக்கு ரூ.15,000 வீதமும், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.20,000 வீதமும், ஓட்டுனர், உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.25,000 வீதமும், அலுவலக கண்காணிப்பாளர் பணிக்கு ரூ.30,000 வீதமும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக மேலாளர் மற்றும் அதற்கு இணையான பணிகளுக்கு அதிகபட்ச ஊதியமாக ரூ.40,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குத்தகை முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனத்திற்கு 8.4 சதவீத சேவைக்கட்டணத்தை 18 சதவீத ஜி.எஸ்.டியுடன் செலுத்த வேண்டும் என்றும் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய முறைப்படி கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் அவற்றுக்குத் தேவைப்படும் பணியாளர்களை இந்த நிறுவனம் மூலம் நியமித்துக் கொள்ளும்படி அதன் துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இது சமூகநீதிக்கு எதிரான, மிகவும் ஆபத்தான போக்கு ஆகும்.
வழக்கமாக அரசுத்துறைகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் போது, அது குறித்து பொது அறிவிப்பு வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பம் செய்ய ஒரு மாதம் காலக்கெடு வழங்கப்படும். வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்குப் போட்டித் தேர்வுகள் அல்லது நேர்காணல் நடத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு செய்வதன் வாயிலாகத் தான் பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் கிடந்த சமூகங்கள் வேலைவாய்ப்பு பெற்று முன்னேற முடியும். ஆனால், ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் போது இவற்றில் எந்த நடைமுறையும் பின்பற்றப்படாது; குறிப்பாக இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது. அதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மேலும், மேலும் பின்னுக்குத் தள்ளப்படவும், ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் ஒடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு முறைக்கு மூடுவிழா நடத்துவதற்கு ஒப்பானது.
தமிழகத்தில் டி பிரிவு பணிகளில் மட்டும் தான் குத்தகை அடிப்படையிலான நியமனங்கள் செய்யப்பட்டு வந்தன. 2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே சி பிரிவு பணிகளிலும் குத்தகை நியமனங்களை செய்வது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் எம்.எப். பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ.ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக் குழுவை 18.10.2022-ம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் அமைத்தது. அந்த முயற்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாணை 115 நிறுத்தி வைக்கப்பட்டது. இத்தகைய நிலையில் மேலாளர் உள்ளிட்ட சி பிரிவு பணிகளையும் குத்தகை முறையில் நிரப்புவதற்கான முடிவு எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதை அரசு விளக்க வேண்டும்.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை முறைப்படி நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காத திமுக அரசு கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்பி வருகிறது. தமிழ்நாட்டில் புதிதாக நியமிக்கப்படவுள்ள 881 கவுரவ விரிவுரையாளர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,000-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரப்பப்படவில்லை.
அதேபோல், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், அரசுத்துறை அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் போன்றவற்றில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் குத்தகை முறையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த நியமனங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு என்பது எளிதாகக் கிடைத்துவிடவில்லை. ஏராளமான போராட்டங்கள், உயிர்த்தியாகங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு தான் சமூகநீதி வென்றெடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு வென்றெடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மூடுவிழா நடத்துவதை மன்னிக்கவே முடியாது. சமூகநீதி என்றால் என்ன? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதும், அவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் சமூகநீதிக்கு எதிரானவர்கள் என்பதும் தான் தமிழகத்தில் இப்போது நடக்கும் சமூகநீதி படுகொலைகளுக்கு காரணமாகும்.
குத்தகை நியமனங்கள், தற்காலிக நியமனங்கள், ஒப்பந்த நியமனங்கள் ஆகியவற்றின் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டுக்கு மூடுவிழா நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதிக்கட்சியின் வழிவந்தவர் என்றும், பெரியாரின் பேரன் என்றும் கூறிக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும். சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டுக்கு முடிவுரை எழுதும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை சமூகநீதியே சபிக்கும்; மக்களின் வாயிலாக தண்டிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.