ஆசிரியர் பணித் தகுதிச் சிக்கல்: விரைவான தீர்வு வேண்டும்
செப்டம்பர் 1, 2025 ஆம் நாளன்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நிதியரசர் அமர்வு தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் 20 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் இருப்பதை அனுமதிக்க முடியாது; ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளவர்கள் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் தொடரலாம்; ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; தேர்ச்சி பெறாதவர்கள் உரிய ஓய்வூதியப் பலன்களுடன் கட்டாயப் பணி ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு கோரவும் உரிமை இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீர்ப்பில் உள்ளன.
ஒரு ஆசிரியரின் பணிக்கால அளவை (length of service) ஆசிரியர் பணியைத் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் உரிய தகுதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆசிரியர் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள், பணிக்காலம் அல்லது பணி மூப்பு (seniority) அடிப்படைக்கு மாறாக பணி மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பின்பற்றப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ளதை தீர்ப்பு வழிமொழிந்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினால் நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இருந்தாலும் “ஒரு சட்டத்தின் செயல்பாட்டை ஒருபோதும் தீமையாகக் கருத முடியாது” என்று தீர்ப்புரை அறிவுறுத்துகிறது. ஆனால், புதிய பணி நியமனத்திற்கென்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பிறகு நீதிமன்ற உத்தரவு மூலமான செயல்பாட்டினால் திடீரென்று பணிப் பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படுவதை எதிர்பாராத செயல்பாடாகவே ஆசிரியர் சமூகம் கருதுகிறது.
இந்நிலையில், ஆசிரியர் இயக்கங்கள் முன் வைக்கும் தீர்ப்பு மறு சீராய்வுக்கான சட்டப்படியான நியாயங்களைப் பொதுச் சமூகம் பகுப்பாய்வு செய்வதும் அவசியமானது. ஒருவர் ஆசிரியர் பணிக்கான உரிய கல்வித் தகுதிகளுடன் நியமனம் பெற்று 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றிருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் நீடிக்க முடியாத நிலை தீர்ப்பினால் ஏற்பட்டுள்ளது. அனுபவமே நல்ல ஆசிரியர் (Experience is the Best Teacher) என்ற உலகியல் உண்மை, ஆசிரியர் தகுதித் தேர்வுத் தீர்ப்பில் விதி விலக்காக அமைந்துள்ளது. இது மூத்த ஆசிரியர்களின் கல்விப் பங்களிப்புகளையும் ஆசிரியர் பணி அனுபவங்களையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.
சிறப்பான கல்விப் பணிக்காக மத்திய அரசின் விருதையோ மாநில அரசின் விருதையோ பெற்றுள்ள ஆசிரியர்கள்; பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூகத்தால் கொண்டாடப்படும் ஆசிரியர்கள்; கற்பித்தலில் புதுமை படைத்த ஆசிரியர்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களும் ஆசிரியர் பணியில் தொடரவும் முடியாது. பதவி உயர்வும் பெற முடியாது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியை அனைத்து ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கட்டாயத் தகுதிகளில் ஒன்றாக எடுத்துக் கொள்வது ஆசிரியர் பணிக்கான தொழில்முறை நெறிக்குப் (Professional Ethics) பொருந்துவதாக அமையவில்லை.
25 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளில் பாதிப்புகள் உருவாகும். 50 வயதைக் கடந்த நிலையில் முழுநேரக் கற்பித்தல் கடமையில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் பணித் தகுதிக்கான போட்டித் தேர்வுக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவது இயற்கை நீதிக்கு உட்பட்டதல்ல.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஏழு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு (NCTE) பிப்ரவரி 11, 2011 ஆம் நாள் வெளியிட்ட வழிகாட்டுதலில் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வேலை வாய்ப்பைக் கவனத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சி வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்ற நீட்டிப்பு பத்தாண்டுகளுக்குப் பின்னர் முன் தேதியிட்டு வழங்கப்பட்டது. எனவே, தர்க்க நியாயங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது 25 ஆண்டுகளுக்கு மேல் உரிய கல்வித் தகுதிகளுடன் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வுக்கான தகுதிகளில் ஒன்றாக ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சியை கட்டாயப்படுத்துவது இயற்கை நீதிக்கு முரணாக உள்ளது.
ஏப்ரல் 1, 2010 ஆம் நாள் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மத்திய அரசின் அறிவிப்பின்படி தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு (NCTE) ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்தபட்சத் தகுதிகளை சட்டத்தின் பிரிவு 23 (1) இன் அடிப்படையில் ஆகஸ்ட் 23, 2010 இல் அறிவித்தது. இந்த அறிவிப்பாணை (notification) மூலம் ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைத்தபட்சத் தகுதிகளில் ஒன்றாக ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சியும் புதிதாகச் சேர்க்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பாணை வெளியிடப்படும் நாளுக்கு முன்னர் உரிய கல்வித் தகுதிகளுடன் பணியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் எவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்று அறிவிப்பாணையில் சொல்லப்பட்டது. தற்போது வரை இதில் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை. கல்வி அதிகார அமைப்பு ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள சட்டப்படியான பணிப் பாதுகாப்பை உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர் அமர்வு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு வகுத்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விலக்களிக்கப்பட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே, தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு சார்பிலும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு முன் வைக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் இவ்வமைப்பிற்கு உள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளுக்கு முன்னர் கல்வி அதிகார அமைப்பு வகுத்த குறைந்தபட்சத் தகுதிகளுடன் பணி நியமனம் பெற்றவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று இன்று வரை தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பும் மத்திய, மாநில கல்வித் துறைகளும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கவில்லை. ஆசிரியர்களின் குறைந்தபட்சக் கல்வித் தகுதித் தளர்வு நீட்டிப்புக்காக 2017 கல்வி உரிமைச் சட்டத் திருத்தத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவசியமில்லை என்று விலக்களிக்கப்பட்டவர்களுக்கும் நிபந்தனை இடம்பெறவில்லை என்பதையும் நீதிமன்றத்தின் மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் ஆசிரியர் நியமனத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சட்டம் நடைமுறைக்கு முன்னர் பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் பதவி உயர்வுக்கு இதே தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது இயற்கை நீதிக்கும் கல்வி நீதிக்கும் ஆசிரியர் பணி மாண்புக்கும் முரணாக அமைந்துள்ளது என்பதும் எடுத்துரைக்கப்படவேண்டும். ஒரு ஆசிரியரின் பதவி உயர்வுக்கு பணிக்கால அளவு மற்றும் பணி மூப்பு இவற்றோடு தனித்துவமான கல்விப் பங்களிப்புகளையும் உள்ளடக்கிய நெறிமுறைகளை தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு உருவாக்குவதே சரியாக அமையும்.
ஆசிரியர் இயக்கங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட வேறு சில மாநில அரசுகளும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து சட்டப்படியான விலக்களிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய தீர்ப்பு மறு சீராய்வுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. தற்போதைய சிக்கலுக்கான தீர்வை நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே கோர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நீதி மன்றத்தின் மூலம் விரைவான தீர்வு கிடைப்பதே ஆசிரியர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நீங்குவதற்கும் ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கும் வழி வகுக்கும். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற வழக்குகளால் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுத் தடைகள் நீங்கவும் விரைவாக வழி பிறக்கவேண்டும்.
சு.மூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்,
கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு.
moorthy.teach@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.