சமவேலைக்கு சமஊதியம்’ வழங்கக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். சாலையில் அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசிரியை ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 31.5.2009க்கு முன்னர் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருந்து வருகிறது. ஊதிய முரண்பாட்டை கண்டித்து சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், டிசம்பர் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள DPI வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வளாகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்களை நுங்கம்பாக்கம், எழும்பூர் ரயில்நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வழிமறித்து போலீஸ் வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இந்நிலையில், காலை 11.30 மணியளவில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றனர்.
மற்றொருபுறம் ஏராளமானோர் குவியத்தொடங்கினர். அதில் ஒரு பிரிவினர் சாலையில் அமர்ந்து கோஷமிட்டனர். அவர்களை காவல் துறையினர் குண்டுக் கட்டாக தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.
திடீர் மறியல்: தொடர்ந்து ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக வருவதும் சாலையில் அமர்ந்து கோஷமிடுவதும், அவர்களை போலீஸார் வாகனங்களில் ஏற்றிச் செல்வதும் என கல்லூரிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பப்பட்டன. இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல் ஆசிரியை மகேஸ்வரி என்பவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போராட்டம் தொடரும்: போராட்டம் சற்று தணிந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஒய்எம்சிஏ கல்லூரி அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டனர்.
முன்னதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக தேர்தல் வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை, தொடர்ந்து பேச்சுவார்த்தை, குழு அமைப்பது என தள்ளிக்கொண்டு செல்கிறார்கள்.
முன்கூட்டியே கைதுசெய்வது, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது என எங்கள் போராட்டத்தை ஒடுக்க நினைத்தாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். போராடக்கூட அனுமதி மறுக்கிறார்கள். அறவழியில் போராடும் எங்களை தீவிரவாதிகளைப் போல நடத்துகிறார்கள்” என்றார்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்: சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. முதல்வர் ஸ்டாலின் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: சமவேலைக்கு சம ஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்களின் மீது அடக்குமுறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
ஆசிரியர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவரையும் போராடும் அவல நிலைக்கு தள்ளுவதுதான் நல்லாட்சியின் அம்சமா? காலி பணியிடங்களை நிரப்பாமல், பணியில் இருப்பவர்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை விடுவிக்காமல் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே பழுதாக்கியதுதான் திமுக அரசின் நான்காண்டு சாதனை.
பாமக தலைவர் அன்புமணி: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஆசிரியர்களின் போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தை திமுக அரசு கைவிட்டு, அவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை இடைநிலை ஆசிரியர்களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் இன்னும் நிறைவேற்றப்படாதது ஏற்புடையதல்ல. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்தது அடக்குமுறையான செயல். தொடர்ந்து அடக்குமுறைகளைக் கையாளாமல் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.