தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அலுவலக நாட்களில் வாரம் இரண்டு நாட்கள் வரை கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கைத்தறி ஆடைகள்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கென பல நலத்திட்ட உதவிகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பல துறைகளின் முன்னேற்றத்திற்கான சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற அவர் தமிழக அரசின் கல்வித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அந்த வரிசையில் தற்போது நலிந்து வரும் கைத்தறி ஆடைகள் தயாரிப்பு பணிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர் இது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன் படி தமிழக அரசுத்துறைகளில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலக நாட்களில் வாரம் இரண்டு நாட்களுக்கு கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கைத்தறித்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர், நெசவு துணிகளின் வர்த்தகத்திற்காக வணிகப் பெயரை உருவாக்க வேண்டும் எனவும் பனை வெல்ல உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் பொது பயன்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.