கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆரம்ப பள்ளிகளில் பழைய முறையிலேயே பாடங்கள்

ஆரம்ப பள்ளிகளில் "செயல்வழி" கற்றல் முறைக்கு குட்பை சொல்லி, பழைய முறையில் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.
செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்காததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பல்வேறு புதிய முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி, இடைநிற்றல் கல்வி, செயல்வழி கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என பல முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக பழைய முறையை தவிர்த்து, ஒவ்வொரு மாணவ, மாணவியரும் திறமைக்கேற்ப, எளிதாக புரிந்து படிக்கும் முறையில் மாற்றியமைக்கப்பட்டது. முதல் ஐந்து வகுப்புகளுக்கு செயல்வழி கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிற்கும் செயல்வழி கற்றல் அட்டைகள் வழங்கப்பட்டன.
மாணவ மாணவிகள், அட்டைகளை எடுத்து படித்துக் கொள்ளலாம். அவரவர் திறமைக்கேற்றவாறு, முடிந்த அளவு படிக்கலாம். நான்கு மாதங்களாக செயல்வழி கற்றல் அட்டைகள் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால், ஆரம்ப பள்ளிகளில் செயல்வழிகற்றல் முறையில் பாடங்கள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாறாக, பழைய முறையில் மீண்டும் வாசித்தல், கரும்பலகையில் எழுதி படித்தல், மனப்பாடம் செய்தல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

>>>ஜவ்வாக இழுக்கும் 1,100 பேர் பணி நியமனம் : தேர்வாணையத்திற்கு உயர்கல்வி துறை உத்தரவு

ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கும், 1,100 உதவி பேராசிரியர் பணி நியமனத்தை, விரைந்து முடிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (டி.ஆர்.பி.,), உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், உயர் கல்விக்கான பணி நியமனங்களை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக, அத்துறையில், மண்டல இணை இயக்குனர் அந்தஸ்தில், ஒரு அதிகாரியை நியமனம் செய்ய, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு தேவையான ஆசிரியரை தேர்வு செய்வதே, பெரும் பணியாக, தேர்வாணையத்திற்கு இருந்து வருகிறது. தற்போது, கூடுதலாக, ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,) சேர்ந்து விட்டதால், பணிப்பளு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, உயர் கல்வித் துறைக்கு தேவையான ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, குறித்த காலத் தில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நியமனம் செய்ய, 1,100 உதவி பேராசிரியரை தேர்வு செய்யும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. கல்லூரிகளில் ஆசிரியராக பணியாற்ற, "நெட்' அல்லது "ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்ற நிலையில், அவர்களுக்கும் கூடுதலாக ஒரு தகுதித் தேர்வை நடத்தலாமா என, உயர் கல்வித் துறையிடம், டி.ஆர்.பி., ஆலோசனை கேட்டுள்ளது. அதை, உயர் கல்வித் துறை நிராகரித்து விட்டது.

இது குறித்து, உயர் கல்வி வட்டாரங்கள் கூறியதாவது: கல்லூரி ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், ஏற்கனவே, "நெட்' அல்லது "ஸ்லெட்' என்ற தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுத் தான் வருகின்றனர். எனவே, அவர்களுக்கு மேலும் ஒரு தகுதித் தேர்வு தேவையில்லை. உயர் கல்வித் துறைக்கு தேவையான தேர்வுப் பணிகள், தொடர்ந்து தாமதமாகி வருகின்றன. எனவே, உதவி பேராசிரியர் தேர்வுப் பணியை, விரைந்து முடித்து, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி.,யை வலியுறுத்தியுள்ளோம். பட்ஜெட் கூட்டத்தொடர் வருவதற்குள், ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே, 1,100 உதவி பேராசிரியர் பணி நியமனம் விரைவில் நடக்கும். அத்துடன், உயர் கல்வித் துறைக்கு தேவையான பணி நியமனங்களை, உடனுக்குடன் கவனித்து நிறைவேற்றுவதற்கு வசதியாக, தனி அதிகாரியை வழங்குமாறு, டி.ஆர்.பி., கேட்டுள்ளது.
அதன்படி, மண்டல இணை இயக்குனர் நிலையில், ஒரு அதிகாரி, அங்கு நியமிக்கப்படுவார். அவர், உயர் கல்வித் துறைக்கு தேவையான பணி நியமனங்களை, விரைந்து முடிக்க, உதவுவார். இவ்வாறு உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு தமிழகத்தில் 712 பேர் பங்கேற்பு

நாடு முழுவதும், சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு, நேற்று துவங்கியது; தமிழகத்தில், 712 பேர் எழுதுகின்றனர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பதவிகளில், காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆண்டுதோறும், போட்டித் தேர்வுகளை மத்திய தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. நடப்பு ஆண்டுக்கான முதல்நிலை தேர்வு, மே மாதம் நடந்தது. இதில், நாடு முழுவதும், மூன்று லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், தகுதி பெற்றவர்கள், மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். தமிழகத்தில், 17 ஆயிரம் பேர், முதல்நிலைத் தேர்வு எழுதியதில், 712 பேர், மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றனர். நாடு முழுவதும், மெயின் தேர்வு நேற்று துவங்கியது. தமிழகத்தில், மெயின் தேர்வை நடத்தும் பொறுப்பு, அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஆகிய இரு மையங்களில், நேற்று துவங்கிய மெயின் தேர்வில், 712 பேரும் பங்கேற்கின்றனர். 26ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கின்றன. ஒவ்வொரு தேர்வரும், ஒன்பது தேர்வுகளை எழுத வேண்டும். ஒவ்வொரு தேர்வுக்கும், தலா, 300 மதிப்பெண்கள். இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதி வாய்ந்த தேர்வர், டில்லியில் நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.மெயின் தேர்வு முடிவுகள், இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ வெளியாகும்.

>>>டெங்கு ஒழிப்பு உறுதி மொழி : மாணவர்கள் வாசிக்க உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பிற்கு உறுதிமொழி வாசிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், திருநெல்வேலி மாவட்டத்தில் பலர் இறந்தனர். மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதையடுத்து, சுகாதாரத்துறையினர், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, பள்ளி மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உறுதிமொழி: டெங்கு பரப்பும் ஏ.டி.எஸ்., கொசுக்களை ஒழிப்பதற்கு, அனைத்து பள்ளிகளிலும் தினமும் இறைவணக்கத்தின் போது, டெங்கு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்க வேண்டும். வீட்டில் உள்ள தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மழை நீர் தேங்காமல், உரல், சிரட்டை, டயர்கள், டீக்கப்களை அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனது வீட்டை சுத்தப்படுத்துவேன். இதை எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களிடமும் நான் எடுத்துக்கூறுவேன். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் முன் மாணவர்கள், உறுதிமொழி ஏற்க வேண்டும்.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""டெங்கை ஒழிப்பதற்கு மாணவர்கள் பங்கு முக்கியம். மாணவர்களிடம் இந்த கருத்தை பரப்பினால், ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று நாங்கள் கருத்துக்களை பிரதிபலித்தது போல் அமையும்,''என்றார்.

>>>அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜூலை மாதம் முதல், முன்தேதியிட்டு இந்த பணம் வழங்கப்படும்.
இதுகுறித்து, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தாண்டு, ஜூலை மாதம் முதல், மத்திய அரசு அலுவலர்களுக்கான, அகவிலைப்படியை, அவர்கள் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அதே ஜூலை மாதம் முதல், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை, அவர்கள் அடிப்படை மற்றும் தர ஊதியத்தில், 7 சதவீதம் உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஊதியம் பெறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும், உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். அகவிலைப்படி உயர்வால், 18 லட்சம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இதன் மூலம், அரசுக்கு, ஆண்டு ஒன்றுக்கு, 1,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்கள் மகிழ்ச்சி: மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து, முதல்வரின் அறிவிப்புக்காக மாநில அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று வெளியான அறிவிப்பை அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு, தமிழ்நாடு அரசு அலுவலர், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

>>>அக்டோபர் 06 [Ocober 06]....

  • இலங்கை ஆசிரியர்கள் தினம்
  • எகிப்து ராணுவ தினம்
  • ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
  • பிஜி குடியரசானது(1987)
  • முதல் பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...