கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அரசு உதவிபெறும் கலை கல்லூரிகளில் 3,500 பணியிடங்களை நிரப்ப உத்தரவு

அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, நிரப்பப்படாமல் உள்ள, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 3,500 பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிதி உதவியுடன், 148 கலை, அறிவியல் கல்லூரிகள், இயங்கி வருகின்றன. இவற்றில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 3,500 பணியிடங்கள், 7 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இந்த பணியிடங்கள் அனைத்தும், ஏற்கனவே, அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள். இதை நிரப்ப அரசின் அனுமதி கேட்டு, கல்லூரி நிர்வாகங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. தற்போது, இந்த பணியிடங்களை நிரப்ப, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. உதவி பேராசிரியர் முதல், அலுவலக பணியாளர் வரை, பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வரும் கல்வியாண்டு துவங்குவதற்குள், 3,500 பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிடும். சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகங்கள், தேவையான பணியிடங்களை நிரப்ப, விளம்பரம் வெளியிட்டு, விண்ணப்பங்களைப் பெற வேண்டும். அதன்பின், கல்லூரி நிர்வாகக் குழு, தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதி வாய்ந்தவர்களை, அரசின் ஒப்புதலுடன், பணி நியமனம் செய்யும்.

>>>மதிய உணவு திட்டம்:மானிய விலையில் சிலிண்டர்

நாடு முழுவதும் மதிய உணவு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கு மானியம் வழங்க கோரி பெட்‌ரோலியத்துறை அமைச்சர் ‌ஜெயபால் ரெட்டிக்‌கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது கர்நாட‌கம், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், நகலாந்து, ஹரியாணா, திரிபுரா, டாமன்டையூ மற்றும் தத்ராநாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேற்கண்ட மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றன. மொத்த செலவு தொகையில் சுமார் 60 சதவீதம் வரையில் சிலிண்டர்களுக்கு ‌‌செல‌வு செய்ய வேண்டியிருப்பதால் மதிய உணவு திட்ட பயன்பாடற்கான சிலிண்டர்களுக்கு மானியம் அளிக்க வேண்டும் என ‌ கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

>>>உதவி பேராசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் : விரைவில் டி.ஆர்.பி., அறிவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, இன்னும் 10 நாட்களில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள, 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஒரு ஆண்டை கடந்த நிலையில், இன்னும், உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், உயர்கல்வித் துறை சார்பில், புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அதற்குள், பழைய அறிவிப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, சமீபத்தில், உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஏற்பாடுகளை, டி.ஆர்.பி., வேகமாக செய்து வருகிறது. இம்மாதம், 20ம் தேதிக்குப் பின், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வினியோகிக்கப்பட உள்ளது. எம்.பில்., மற்றும் "நெட்' அல்லது "ஸ்லெட்' ஆகிய தேர்வுகளில், தகுதியைப் பெற்றவர்கள், உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். நேரடியாக, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்களும், விண்ணப்பிக்கலாம். கற்பித்தல் அனுபவத்திற்கு, 15 மதிப்பெண், அதிக கல்வித் தகுதி இருந்தால், 9 மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் என, 34 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர், இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர். பணி அனுபவத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக, 7.5 ஆண்டு இருந்தால், 15 மதிப்பெண்கள் கிடைக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>பல்வேறு பல்கலை பாட திட்டங்களுக்கு அங்கீகாரம்

அண்ணாமலை பல்கலையில் உள்ள, ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு, எம்.ஏ., படிப்பை, எம்.ஏ., ஆங்கிலத்திற்கு நிகரானது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
உயர்கல்வித்துறை வெளியிட்ட அரசாணை: சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், ஐந்து ஆண்டு, ஒருங்கிணைந்த, எம்.ஏ., ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பு படிப்பு படித்தவர்களின், வேலை வாய்ப்பு நலன் கருதி, அப்படிப்பை, எம்.ஏ., ஆங்கிலம் படிப்பிற்கு நிகரானது என, அரசு உத்தரவிடுகிறது.
கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலையில், எம்.ஏ., "அப்ளைடு சைக்காலஜி கவுன்சிலிங்' மற்றும் சென்னை பல்கலை வழங்கும் எம்.எஸ்சி., "அப்ளைடு சைக்காலஜி' ஆகிய படிப்புகள், முதுகலை சைக்காலஜி படிப்பிற்கு நிகரானது என, உத்தரவிடப் படுகிறது. இந்தப் படிப்பை முடித்தவர்கள், மருத்துவப் பணிகள் சேவைத் துறையில், நேரடியாக உதவி பேராசிரியர் - சைக்காலஜி பணியில் சேர, வழி செய்யப்படுகிறது.
அண்ணாமலை பல்கலை வழங்கும், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த, எம்.ஏ., "அப்ளைடு எகனாமிக்ஸ்' படிப்பு, எம்.ஏ., பொருளியல் படிப்பிற்கு நிகரானது. பாரதியார் பல்கலை வழங்கும், பி.எஸ்சி., "பிளான்ட் பயாலஜி மற்றும் பிளான்ட் பயோ-டெக்னாலஜி' படிப்பு, பி.எஸ்சி., தாவரவியல் படிப்பிற்கு நிகராக ஏற்றுக் கொள்ளப்படும்.
பாரதியார் பல்கலை வழங்கும், பி.ஏ., வரலாறு மற்றும் சுற்றுலா பட்டப் படிப்பு, பி.ஏ., வரலாறு பட்டத்திற்கு இணையானதாக, அரசு உத்தரவிடுகிறது. இதே பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையின், பி.லிட்., - தமிழ் படிப்பு, சென்னை பல்கலை வழங்கும் பி.லிட்., படிப்பிற்கு இணையானது. அண்ணாமலை பல்கலையின், எம்.ஏ., - எம்.எஸ்சி., "அப்ளைடு சைக்காலஜி' படிப்புகளை, எம்.ஏ., சைக்காலஜி படிப்பிற்கு இணையானது.
இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட படிப்புகளை, அதிக மாணவ, மாணவியர் படித்திருப்பதால், அவர்களின் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

>>>ரூ.10 கோடி மதிப்பில் இலவச தங்குமிடம்

தமிழக அரசு சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்திற்கென, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், 10.14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டடத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., - பி.சி., வகுப்பினருக்கு, இலவச தங்குமிடம், உணவு ஆகியவற்றுடன் அரசின் சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதுவரை, சென்னை அண்ணாநகரில், இந்த பயிற்சி மையம் இயங்கி வந்தது. ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்தில், 76 அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அறைகள், அனைவருக்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறை என, 10.14 கோடி ரூபாயில், நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளன. ஒன்பது மாதங்களில், கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் திறந்து வைத்தார்.

>>>பத்தாம் வகுப்பு நேரடி தனி தேர்வர் விண்ணப்பங்கள்: ஆயிரக்கணக்கில் நிராகரிப்பு

தமிழகம் முழுவதும், இம்மாதம், 15ம் தேதி முதல், பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்க உள்ள நிலையில், எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, நேரடியாக, 10ம் வகுப்பு தனி தேர்வுக்கு விண்ணப்பித்த, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் செய்முறை பயிற்சியில் பங்கேற்காததால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஜூன், ஜூலையில் நடந்த, உடனடித் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் மற்றும் நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வெழுத விரும்பிய மாணவ, மாணவியர், இம்மாதம், 15ம் தேதி முதல் துவங்கும் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இம்மாதம், 26ம் தேதி வரை நடக்கும் தேர்வில், 72 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்; 150 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன.
செய்முறை தேர்வு அமல்:
கடந்த ஆண்டு வரை, மெட்ரிக்., - ஆங்கிலோ இந்தியன் மாணவ, மாணவியருக்கு மட்டுமே செய்முறைத் தேர்வு அமலில் இருந்தது. சமச்சீர் கல்வி அமலுக்கு வந்துவிட்டதால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எழுத்து தேர்வுக்கு, 75 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு, 25 மதிப்பெண்கள் என, பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நேரடியாக தனி தேர்வு எழுதும் மாணவ, மாணவியரும், அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்காக, தேர்வுத்துறை சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பதிவு செய்து கொள்ளும் தேர்வர்களுக்கு, செய்முறை தேர்வு குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முடித்து, நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தேர்வர்களுக்கு, தற்போது, செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை அறியாமல், தேர்வில் பங்கேற்பதற்கு, ஆயிரக்கணக்கான நேரடி தனி தேர்வர் விண்ணப்பித்துள்ளனர்.
நிராகரிப்பு:
தர்மபுரி மாவட்டத்தில், தமிழ் பாடத்துக்கு, 764 பேர், ஆங்கிலம், 1,363, கணிதம், 533, அறிவியல், 339, சமூக அறிவியல், 757 பேரும் விண்ணப்பித்தனர். தனி தேர்வுக்கு, நேரடியாக விண்ணப்பித்திருந்த பலர், நேற்று, தர்மபுரி, டி.இ.ஓ., அலுவலகத்திற்கு, "ஹால் டிக்கெட்' பெற வந்தனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தோல்வி அடைந்து, மதிப்பெண் சான்றிதழ் நகலுடன், "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நேரடியாக, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால், மாணவ, மாணவியர், ஏமாற்றத்துடன், திரும்பிச் சென்றனர். இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், கொத்து, கொத்தாக, பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இரு நாளில், தேர்வு துவங்க உள்ள நிலையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதால், மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விளக்கம்:
விண்ணப்பங்கள் நிராகரிப்பு குறித்து, தேர்வுத்துறை இயக்குனரக வட்டாரங்கள், நேற்று மாலை கூறியதாவது: நேரடி தனி தேர்வர், மார்ச் மாதம் நடக்கும் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும். அனைத்து வகை, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், அறிவியலில் செய்முறைத் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நேரடி தனி தேர்வர், ஆறு மாதங்களுக்கு முன், செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டும். இந்த வகை தேர்வர், மார்ச்சில் நடக்கும் தேர்வுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஜூன், ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வு, அக்டோபரில் நடக்கும் தனித் தேர்வில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது தெரியாமல், செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்யாத நேரடி தனி தேர்வர், விண்ணப்பித்துள்ளனர். இப்படிப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பதைத் தவிர, வேறு வழியில்லை. எத்தனை ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்ற விவரம், தற்போது தெரியவில்லை. இவ்வாறு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>டி.இ.டி., தகுதித் தேர்வு - வெற்றி ரகசியங்கள்

நாளை டி.இ.டி., மறு தகுதித் தேர்வு நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற சில ஆலோசனைகள்:
* நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிப் பாடமான தமிழையும், விருப்பப் பாடமான, அறிவியல் அல்லது சமூக அறிவியல், விடைத்தாளில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில், நிழலிட்டு காட்டுவது அவசியம்.
* மறுதேர்வு எழுதுவோருக்கு, புதிய பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொள்ளவும்.
* தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள், அதே பெயரில் கிளைகளை கொண்டிருப்பதால், மையம் எது என்பதை முதல் நாளே உறுதி செய்யுங்கள்.
* போட்டோ இல்லாமல் ஹால் டிக்கெட் வந்திருந்தால், அரசிடம் பதிவு பெற்ற அலுவலரிடமிருந்து பெறப்பட்ட, போட்டோ ஒட்டிய, தற்காலிக அடையாள அட்டையை எடுத்துச் செல்லுங்கள்.
* விடைத்தாளில், ஒன்றன் பின்ஒன்றாக விடையளிப்பதே நல்லது. தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளித்து, தெரியாதவற்றுக்கு பின்னர் விடையளிக்கலாம் என, நினைப்பது சரியல்ல; விடைத்தாள், ஓ.எம்.ஆர்., தாளாக இருப்பதால், கவனக் குறைவாக, வரிசை மாறிவிட வாய்ப்புண்டு; எல்லா விடைகளுமே தவறாகும் அபாயம் நிகழலாம்.
* வினாக்களின் ஆங்கில வடிவத்தையும் படிப்பது அவசியம். வினாக்கள், ஆங்கிலத்தில் தயார் செய்யப்பட்டு, பின்னரே தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன.
* வினாத்தாள் தொகுப்பு, அனைத்து விருப்பப் பாடங்களையும் உள்ளடக்கியதாகத் தரப்படுகிறது. சமூக அறிவியல், அறிவியல் வினாக்களை கவனித்து தேர்ந்தெடுக்க வேண்டும். சமூக அறிவியல், அறிவியலில் சில பாடங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதால், விருப்பப் பாட வினாப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதில், கடந்த தேர்வில் சிலர் குழம்பினர்.
* கணித வினாவுக்கு, முழுக் கணக்கையுமே செய்து பார்க்க வேண்டியதில்லை. கொடுக்கப்பட்டுள்ள, "ஆப்ஷன்'களில், வினாவுக்கு சற்றும் பொருந்தாத இரண்டு விடைகளை, "டெலிஷன் மெத்தடு' - நீக்கல் முறையில் நீக்கிட வேண்டும். மீதமுள்ள இரண்டு, "ஆப்ஷன்'களில் எது சரி எனக் கண்டுபிடிக்க, சில, "ஸ்டெப்ஸ்'கள் போட்டால் போதும். நெருக்கமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதிவிட்டு, அடுத்த வினாவுக்கு சென்று விடலாம்.
* நேர மேலாண்மை அவசியம். ஒரே கேள்விக்கு விடையளிக்க நீண்ட நேரம், யோசிக்காதீர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...