கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப்-4 தேர்வில் வென்றவர்களுக்கான கலந்தாய்வு துவக்கம்

குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றுள்ள, 10 ஆயிரம் பேருக்கு, துறை ஒதுக்கீட்டு உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நவம்பர் 19ம் தேதி துவங்கியது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், குரூப்-4 நிலையில், காலியாக உள்ள, 10 ஆயிரத்து 718 இடங்களை நிரப்ப, ஜூலை 7ல், போட்டித்தேர்வு நடந்தது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவு, கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தேர்வு பெற்ற, 10 ஆயிரத்து 718 பேருக்கும், அரசுத் துறை ஒதுக்கீடு வழங்குவதற்கான கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில் துவங்கியது.
முதலில், சுருக்கெழுத்தர்-தட்டச்சர் பணிகளுக்கு, 1,179 இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, நவம்பர் 19ம் தேதி துவங்கி, நவம்பர் 21ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு பெற்றவர்கள், உற்சாகத்துடன், கலந்தாய்வில் பங்கு பெற்றனர். தேர்வாணைய தலைவர் நடராஜ் தலைமையில், செயலர் விஜயகுமார் மேற்பார்வையில், கலந்தாய்வு பணிகள் நடந்தன.
காலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும், பிற்பகலில், துறை ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட இதர பணிகளுக்கான கலந்தாய்வு, டிச., 3ம் தேதி முதல் நடக்கிறது. குரூப்-2, நேர்முகத் தேர்வு அல்லாத, 3,000 பணியிடங்களுக்கு, பணி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு, இம்மாதம், 22ம் தேதி முதல் நடக்கும் என்றும், தேர்வாணைய செயலர் விஜயகுமார் தெரிவித்தார்.

>>>பள்ளி அடிப்படை வசதிகளுக்காக 260 கோடி

மாநிலத்தில், 236 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, 260 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என, பள்ளிக்கல்வி செயலர் சபிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், "நபார்டு திட்டத்தின் கீழ், இந்த பள்ளிகளில், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும், எத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்; ஒவ்வொரு பள்ளிகளுக்குமான நிதி ஒதுக்கீடு எவ்வளவு போன்ற விவரங்களும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>வெளிநாட்டு மருத்துவப் படிப்பு - சில ஆலோசனைகள்

வெளிநாட்டிற்கு சென்று மருத்துவப் படிப்பை மேற்கொள்வது பெரிய விஷயமல்ல என்றாலும், திரும்பவும் இந்தியா வந்து மருத்துவராக பணிபுரிவதற்காக எழுத வேண்டிய ஸ்கீரினிங் டெஸ்ட் பற்றி யோசிக்க வேண்டியது அவசியம். அந்த தேர்வானது மிகவும் கடினமானதாக இருக்கிறது என்பதே பலரின் கருத்து.
அத்தேர்வில் சிலர் தேர்ச்சி பெற்றாலும், பலரால், பல முயற்சிகளுக்குப் பின்னரும், தேர்ச்சிப் பெற முடியவில்லை என்பதே இன்றைய நிலையாக இருக்கிறது.
குறைந்த கட்டணம்
வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்க, இந்திய மாணவர்கள் விரும்புவதற்கு முக்கிய காரணம் கட்டணம் குறைவு என்பதுதான். இந்தியாவில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள், இங்குள்ள தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தை தவிர்க்க, மருத்துவ இளநிலைப் படிப்பை முடிக்க, ரஷ்யா, சீனா மற்றும் ஜார்ஜியா போன்ற நாடுகளுக்கு சென்று விடுகின்றனர்.
இந்தியாவில் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில், ரூ.1 கோடி வரை வசூலிக்கப்படுகிறது. மேலும், நல்ல மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளில் பல மாணவர்களால் தேர்ச்சிப் பெற முடிவதில்லை. எனவே, அவர்களுக்கு வெளிநாட்டு மருத்துவப் படிப்பே ஒரே தீர்வாக உள்ளது. ஹங்கேரி, போலந்து, ரஷ்யா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில், முழு மருத்துவப் படிப்பிற்கான செலவு, ரூ.20 லட்சத்திற்குள் முடிந்து விடுகிறது.
நுழைவுத்தேர்வு கிடையாது
பல வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகள், மாணவர்களை, அவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆங்கிலப் புலமை அடிப்படையிலும் சேர்த்துக் கொள்கின்றன. தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதில்லை. சில இடங்களில், அறிவியல் பாடங்கள் மற்றும் ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே போதும் என்ற நிலை உள்ளது.
முந்துகிறது சீனா
கடந்த காலங்களில், இந்திய மாணவர்களுக்கான, மருத்துவப் படிப்பு இலக்குகளாக, ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளே இருந்தன, ஆனால் தற்போது, சீனாவை நோக்கிச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிரித்து வருகிறது.
சீனாவில், 1.76 மில்லியன் மாணவர்களுடன், 280 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2010ம் ஆண்டில், குறைந்தபட்சம் 8000 இந்திய மாணவர்கள் சீன மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
ஸ்கீரினிங் தேர்வு
வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவிற்கு வரும் பட்டதாரிகள், இங்கு மருத்துவத் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கும் பொருட்டு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு(FMGE - Foreign Medical Graduate Examination) எனப்படும். கடந்த 2002ம் ஆண்டு இந்தத் தேர்வை இந்திய மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியது. இதன்படி, ஏதேனும் ஒரு வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்திய மருத்துவக் கவுன்சிலிலோ அல்லது ஏதேனும் ஒரு மாநில மருத்துவக் கவுன்சிலிலோ, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பதிவு செய்து கொள்ள விரும்பினால், அவர் மேற்கண்ட தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற வேண்டியது கட்டாயம்.
இதன்மூலம், சம்பந்தப்பட்டவரின் அறிவு மற்றும் திறமை சோதிக்கப்படும். இந்த நுழைவுத்தேர்வை ஒரு வெளிநாட்டுப் பட்டதாரி எழுத வேண்டுமெனில், அவர் படித்த மருத்துவக் கல்லூரி, சம்பந்தப்பட்ட நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) டைரக்டரியில் பட்டியலிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
தேர்வில் தேர்ச்சிப்பெறல்
வருடத்திற்கு 2 முறை, டெல்லியில், தேசிய தேர்வு வாரியத்தால் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் நடத்தப்படும் இத்தேர்வில், மொத்தம் 300 மதிப்பெண்கள். Pre and para-clinical பாடங்களுக்கு 100 மதிப்பெண்களும், Para clinical பாடங்களுக்கு 200 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும்.
ஒருவர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, இத்தேர்வில் தேர்ச்சிப்பெற முடியும். இத்தேர்வில் வெற்றிபெற்ற ஒருவர், MCI அல்லது மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கு, நிரந்தர அல்லது தற்காலிக பதிவிற்காக விண்ணப்பிக்கலாம்.
போலி பல்கலைகள் ஜாக்கிரதை
சரியான ஆய்வு அவசியம்: ஒரு வெளிநாட்டுப் பல்கலையில் சேரும் முன்பாக, அது அந்நாட்டு அரசின் அங்கீகாரம் பெற்றதா மற்றும் WHO பட்டியலில் இடம்பெற்றதா என்பதை நன்கு சோதிக்கவும். மேலும், சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டும் விசாரிக்கலாம்.
பழைய மாணவர்: நீங்கள் சென்று படிக்க விரும்பும் வெளிநாட்டு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே படித்த பழைய மாணவரிடம் விசாரித்து, அக்கல்லூரியின் கல்வித் தரம், பாடத்திட்டம், ஆசிரியர் தகுதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவைகளை அறிந்து கொள்ளலாம்.
போலி ஆலோசகர்கள்: வெளிநாட்டு மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை, போலி கல்வி ஆலோசகர்களுக்கு பஞ்சமில்லை. அவர்கள் பணத்திற்காக உங்களை எங்கு வேண்டுமானாலும் தள்ளி விடலாம். சில நாடுகளில், ஒரே வளாகத்தில் 3 மருத்தவக் கல்லூரிகள் கூட இயங்கும். எனவே, முன்னெச்சரிக்கை என்பது உங்கள் பொறுப்பு.
பெரிய கல்வி நிறுவனங்கள்
உலகெங்கிலும் உள்ள பல்கலைகள், தங்களின் மருத்துவப் படிப்புகளில் சேர, வெளிநாட்டு மாணவர்களை அழைத்தாலும், ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் இடம்பிடிப்பது மிகவும் கடினம். அவற்றின் நடைமுறைகள் மற்றும் செயல்திட்டங்களை விரிவாக அறிந்துகொள்ளுதல் மிகவும் அவசியம். அத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம்பெற MCAT போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டும்.
MCAT
மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் ஒரு மாணவரின் சிக்கல் தீர்க்கும், நுட்ப சிந்தனை, எழுதும் திறன், அறிவியல் அறிவு மற்றும் மருத்துவப் படிப்பிற்கு ஏற்ற உளப்பாங்கு பெற்றிருக்கிறாரா என்பதை ஆய்வு செய்ய இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஏறக்குறைய, அமெரிக்காவின் அத்தனை மருத்துவக் கல்வி நிறுவனங்களும், வெளிநாட்டு மாணவர்களிடம் MCAT தேர்வு மதிப்பெண்களை எதிர்பார்க்கின்றன.
வெளிநாட்டுப் படிப்பு - இந்தியாவில் வேலை
வெளிநாட்டில் மருத்துவம் படித்த பலர், இந்தியாவில் வந்து பணிபுரிவதையே விரும்புகிறார்கள். இதற்கு 2 காரணங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள அதிக மக்கள்தொகையால், பலவிதமான நோயாளிகளை கையாண்டு, அதன்மூலம் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பது முதல் காரணம். வெளிநாட்டிலுள்ள மொழிப் பிரச்சினை மற்றும் குடியுரிமை சிக்கல்கள் போன்றவை இரண்டாவது காரணம்.
சிலர், வெளிநாட்டுக் குடியுரிமைக்காக, அங்குள்ளவர்களை மணந்துகொள்ளும் சம்பவங்களும் நிறைய உண்டு.

>>>தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவங்க...

"சுயநிதி கலை - அறிவியல் கல்லூரிகளை துவங்குவது தொடர்பான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு, மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வறிக்கை போதுமானது" என, அரசு அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல், இது அமலுக்கு வருகிறது.
அரசு நிதியுதவி பெறாத தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவங்க, அரசு அனுமதி கோரும்போது, இதுவரை மாவட்ட கலெக்டரே ஆய்வறிக்கை அனுப்புவது வழக்கம். புதிதாக துவங்கப்படும் கல்லூரிக்கான நிலத்தின் விவரம், அந்த நிலம் விவசாய நிலமாக இருந்தால், அதற்கு உரிய அனுமதி பெற்றிருத்தல்; அந்நிலத்தில் கட்டடங்கள் கட்ட, நகர ஊரகமைப்புத் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள விவரம் போன்றவை கலெக்டரால் ஆய்வு செய்யப்படும்.
மேலும், கல்லூரியில் ஆய்வக கழிவுகளை அப்புறப்படுத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியா; சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொள்வார்.
இத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் உட்பட, கட்டட அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை கலெக்டர் அரசுக்கு தாக்கல் செய்வார். கல்லூரி துவங்குவதற்கான விண்ணப்பங்கள், ஆய்வு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய சரிபார்ப்பு படிவம் வெளியிடப்பட்டு, 45 நாட்களுக்குள் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரையை கலெக்டர் அரசுக்கு அனுப்ப வேண்டும் என, விதிமுறை இருந்தது.
தற்போது இந்த உத்தரவில், மாற்றம் ஏற்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வறிக்கை அனுப்பும் அதிகாரத்தை கலெக்டர்களுக்கு பதிலாக, மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், "இனி வரும் காலங்களில் (2013 - 14 கல்வியாண்டு முதல்) சுயநிதி கலை - அறிவியல் கல்லூரிகளை துவங்குவது தொடர்பான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலரின் ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரை போதுமானது. மாவட்ட வருவாய் அலுவலர் தனது ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரையை, 90 நாட்களில் அரசுக்கு அனுப்ப வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>நவம்பர் 20 [November 20]....

நிகழ்வுகள்

  • 284 - டயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனான்.
  • 1194 - இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது.
  • 1700 - சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் நார்வா என்ற இடத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டரைத் தோற்கடித்தான்.
  • 1910 - பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சி ஆரம்பமாயிற்று.
  • 1917 - உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  • 1923 - ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
  • 1936 - ஸ்பானிய அரசியல்தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.
  • 1947 - இளவரசி எலிசபெத் இளவரசர் பிலிப்பை திருமணம் புரிந்தார்.
  • 1962 - சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்தாதை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது.
  • 1977 - ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
  • 1979 - சவுதி அரேபியாவில் மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முஸ்லிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரெஞ்சுப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
  • 1985 - மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
  • 1988 - ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
  • 1992 - இங்கிலாந்தில் வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
  • 1993 - மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.
  • 1994 - அங்கோலா அரசுக்கும் யுனீட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதில் 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
  • 1998 - பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
  • 1999 - மன்னார் மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1750 - திப்பு சுல்தான், மைசூர் பேரரசன் (இ. 1799)
  • 1901 - நாசிம் ஹிக்மட், துருக்கிய கவிஞர் (இ 1963)
  • 1942 - ஜோ பைடன், அமெரிக்க துணைத் தலைவர்
  • 1980 - ஷாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

  • 1910 - லியோ தல்ஸ்தோய், ரஷ்ய எழுத்தாளர் (பி. 1828)

சிறப்பு நாள்

  • யுனிசெஃப் - குழந்தைகள் நாள்
  • மெக்சிக்கோ - புரட்சி நாள் (1910)
  • வியட்நாம் - ஆசிரியர் நாள்

>>>ஆகாஷ் 2 ‘ரிலீஸ்’

உலகின் குறைந்த விலை கம்ப்யூட்டர் என பெயரெடுத்த ஆகாஷ் டேப்லெட் கம்ப்யூட்டரின் அடுத்த பதிப்பு, ‘ஆகாஷ் 2’ டேப்லெட். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்தாண்டு டேட்டாவின்ட் நிறுவனம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து ஆகாஷை அறிமுகப்படுத்தின. இது, உலக கம்ப்யூட்டர் பயனர்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்தது. மாணவர்களுக்கு 1,100 ரூபாயில் வழங்கப்படும் என அப்போதைய மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். லட்சக்கணக்கான மாணவர்கள் இக்கம்ப்யூட்டர் வேண்டி, பதிவு செய்திருந்தனர். சில தொழில்நுட்ப கோளாறுகளால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. தற்போது டேட்டவின்ட் நிறுவனம் இதிலிருந்து விலகி விட்டது. மும்பை ஐ.ஐ.டி.,யும், சி-டாக் இணைந்து ஆகாஷ் 2 டேப்லெட்டை வடிவமைத்துள்ளன. இது முழுக்க முழுக்க ஒரு இந்திய தயாரிப்பு.
இதில் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்ரேட்டிங் சிஸ்டம், வி.ஜி.ஏ., முன்பக்க கேமரா, 4 ‘ஜிபி’ இன்டர்னல் மெமரி, 1 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசசர், 7 இஞ்ச் டச் ஸ்கீரின், 3 மணி நேர பேட்டரி சார்ஜ், ‘வைபை’ கனெக்ஷன் ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை 2,263 ரூபாய். ஆனால் மத்திய அரசு மானியத்துடன் 1,130 ரூபாய்க்கு மாணவர்களுக்கு வழங்க உள்ளது. முதலில் ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுõரிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் 22 கோடி கம்ப்யூட்டர்களை தயாரித்து வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

>>>கல்வித் துறையில் டாப் 15ல் இரு இந்தியர்கள்

அமெரிக்காவில் வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகளவில் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பல துறைகளில் உலகில் சிறந்து விளங்குவோரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. போர்ப்ஸ் வெளியிட்ட கல்வித் துறையில் சாதனை படைத்த டாப் 15 பேரின் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் நபர், ‘டேட்டாவின்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ., சுனித் சிங் துலி. இவர் உலகின் குறைந்த விலை கம்ப்யூட்டரான, ‘ஆகாஷ் டேப்லெட்’ கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வழி வகுத்துள்ளார்.
இரண்டாவது நபர், அமெரிக்காவின் எம்.ஐ.டி., பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசியர் ஆனந்த் அகர்வால். இவர், ஆன்லைன் வழி கல்வியை அறிமுகப்படுத்தியவர். இவரது கண்டுபிடிப்பால் 4 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் ஆன்லைன் வழி கல்வியை பயன்படுத்துகின்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் கத்தியால் குத்திக்...