கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்: தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் வேலை

டி.இ.டி., தேர்வில் தேர்வு  பெற்றவர்களில், பணி நியமனத்திற்கு தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல்,  தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து  வருகிறது. இறுதி தேர்வுப் பட்டியலில், இடம்பெறும், 22 ஆயிரம் பேருக்கு,  விரைவில் வேலை வழங்கப்பட  உள்ளது. டி.இ.டி.,தேர்வு அடிப்படையில், இடைநிலை, பட்டதாரி  ஆசிரியர், 25 ஆயிரம் பேர் தேர்வு  செய்யப்படுவர் என, டி.ஆர்.பி.,  அறிவித்தது. இந்த ஆண்டு,  ஜூலையில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில், 2,448 பேரும், அக்டோபரில் நடந்த மறு தேர்வில், 19 ஆயிரம் பேரும், தேர்வு பெற்றனர். ஆசிரியர் நியமன புதிய வழிகாட்டி விதிமுறைகளின்படி, இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் இரு நாட்களில் முடிவடையலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.உரிய சான்றிதழ் இல்லாதவர்கள், பாடத்திற்குரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் குறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் இறுதிக்குள்...

முதல் தகுதி தேர்வுக்கு, தனி இறுதி தேர்வுப் பட்டியலும், மறு தேர்வுக்கு, தனி இறுதி தேர்வுப் பட்டியலும், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் பட்டியல் வெளியானதும், 22 ஆயிரம் பேரும், துறை வாரியாக பிரித்து, சம்பந்தபட்ட துறைகளுக்கு, தேர்வுப் பெற்றவர்களின் பட்டியலை,டி.ஆர்.பி., அனுப்பும்.முதலில், பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, அதன்பின் மாநகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகள், சமூக நலத்துறை பள்ளிகள் என, படிப்படியாக ஆசிரியர் பிரித்து, பணி நியமனம் செய்யப்படுவர். அடுத்த மாத இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
400 பேர் தகுதியிழப்பு?
டி.இ.டி., மறுதேர்வில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேரில், 2 சதவீதம் பேர் வரை, தகுதி இழக்க நேரிடும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி, 380 பேர் வரை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்படுவர் என, தெரிகிறது.இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது:சிலர், சரியான கல்வித்தகுதியை பெற்றிருந்தாலும், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர். சிலர், "கிராஸ் மேஜர்'பாடங்களை படித்துள்ளனர். இன்னும் சிலருக்கு, கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் இருந்தாலும், சாதி சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றிதழ்கள் இல்லாமல் உள்ளனர்.அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் படித்து, பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். இப்படி, பல்வேறு காரணங்களால், இரண்டு சதவீதம் பேர் வரை, பாதிக்கப்படலாம். இவர்கள் குறித்த சரியான புள்ளி விவரம், ஓரிரு நாளில் தெரியும்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தகுதியில்லாதவர்களின் பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

>>>தினமொரு நற்செயல்! - வெ.இறையன்பு

நாம் ஏதேனும் ஒரு நல்ல செயலைச் செய்தால்தான் அந்நாள் முழுமை பெற்றதாகக் கருதமுடியும்.

பறவைகள் கூட எத்தனையோ விதைகளின் முளைப்புத் திறனை அதிகரித்து, அவற்றை செடிகளாகக் கிளைவிட உதவி வருகின்றன.

மலர்கள் கூட காற்று மண்டலத்தை நறுமண மயமாக்கிய பின்னர் தாங்கள் உருவாக உதவிய பூமியை முத்தமிட்டு, சருகாகி எருவாகி வளம் சேர்க்கின்றன.

ஆனால் பகுத்தறிவு தமக்கு மட்டுமே உண்டு என்று மார்தட்டிக் கொள்கிற மனிதர்கள் பலர் சுயநலம் மட்டுமே பிரதானம் என்று மண்ணுக்கு பாரமாய் வாழ்கிறார்கள்.

தினமொரு நற்செயல் செய்கிறபோது நம்மையும் அறியாமல் நம் மகிழ்ச்சி வட்டம் விரிவடையும். உடல் முழுவதும் காந்த அலைகள் பரவும். நாம் காணுகிற திசைகளில் அழகும், அன்பும் நர்த்தனமிடும். இரவு படுக்கையில் விழும் முன் அன்று நாம் செய்த நற்காரியத்தை நினைத்தால் உள்ளம் ஆர்ப்பரிக்கும், அமைதி நிலவும், ஆனந்தம் தழுவும்.

'ஒழுக்கம் என்பது சுயநலமில்லாத வாழ்வு' என்றார் சுவாமி விவேகானந்தர். உற்று நோக்கினால் ஒழுக்கமற்ற செயல்கள் அனைத்துமே சுயநலமின்மையால் உருவாவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். நம் தூய்மையை சமூகமல்ல, நாம்தான் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

தாகத்தினால் தவிக்கின்ற கன்றுக்கு நீர்கொடுத்தால் அதுவும் நற்செயல். காயத்தில் தடுமாறும் நாய்க்கு உணவளித் தால் அதுவும் உயர் செயலே.

வழிகேட்டு வந்தவருக்கு, சரியான பாதையை அடையாளம் காட்டுவதும் நற்செயலே. விபத்தில் விழுந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல் வதும் உன்னதச் செயலே.

வகுப்புக்கு வராத நண்பனுக்கு, வகுப்பில் நடந்தவற்றை விளக்கிச் சொல்வதும் மேன்மையான செயலே.

இப்படிப்பட்ட செயல்களை நாம் யாரும் பாராட்டுவார்கள் என்று செய்வதில்லை. நமது திருப்திக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் மேற்கொள்கிற போது, நம் உள்ளம் உவகையடைகிறது.

மாணவப் பருவத்திலே இது போன்ற பண்புகளைப் பதியம் போட்டால், தலைமைப் பண்பு அரும்ப ஆயத்தமாகி விடும். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிற இளைஞர்கள் சமூகத்துக்கு பாரமாக இருக்கிறார்கள். கூடுதல் பொறுப்புகளையும் தாங்குவதற்குத் திறனுடைய இளைஞர்கள், பாலமாக இருக்கிறார்கள்.

நாம் பிறருக்கு நற்செயல் செய்கிற போதெல்லாம் அது நமக்கே திரும்ப வந்து சேருகிறது என்பதை உணர்ந்தால் நம்மைச் சுற்றி எப்போதும் கொண்டாட்டமும் கும்மாளமும்தான் நிலவமுடியும்.

>>>காலும் கை கொடுக்கும்!

 
கேன்சரை உலகத்தை விட்டே விரட்டுவதே டெர்ரி பாக்ஸுடைய இலட்சியமாக இருந்தது !! வரலாற்றில் நாம் படிக்க வேண்டிய பக்கங்கள் !!!

டெர்ரி ஃபாக்ஸுக்கு அப்போது 18 வயது. தனக்கு கேன்சர் என்பதை நம்பவே முடியாமல் இருந்தார். அவரது காலில் தீராத கடுமையான வலி இருந்து வந்தது. அதற்கு காரணம், அவருக்கு நடந்த கார் விபத்து என்று நம்பிக் கொண்டிருந்தார். மருத்துவர்களோ கேன்சர் என்றார்கள். முழங்காலுக்க
ு கீழே காலை எடுத்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு உலை வைத்துவிடும் என்று எச்சரித்தார்கள். விளையாட்டுத் துறையில் எவ்வளவோ சாதிக்க வேண்டிய கனவுகள் அவருக்கு இருந்தது. தன் தாய்நாடான கனடாவுக்கு தடகளத்துறையில் பதக்கங்களை குவிக்கும் லட்சியம் இருந்தது. லட்சியம் வெறும் கனவாகவே முடிந்துவிடுமோ என்று டெர்ரி மனம் வெதும்பினார்.

விளையாட்டுக் காதலரான டெர்ரி சிறுவயதில் கால்பந்து, ரக்பி, பேஸ்பால் மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் செலுத்தினார். பள்ளிப் பருவத்தில் கூடைப்பந்து மீது தீராத வெறி அவருக்கு இருந்தது. அப்போது ஐந்தடி உயரம் மட்டுமே இருந்த டெர்ரி அசாத்தியப் பயிற்சி மூலமாக சிறப்பான வீரராக திகழ்ந்தார். டெர்ரியின் தந்தை ரோலி ஃபாக்ஸ் ஒருமுறை தன் மகனைப் பற்றி குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. “டெர்ரியை விட சிறந்த வீரர்கள் பலர் இருந்திருக்கலாம். அவர்கள் டெர்ரியை விட சிறப்பாக அவனோடு விளையாடியிருக்கலாம். ஆனாலும் வெற்றிக்கனியை சுவைக்கும் வரை டெர்ரி சோர்வடையாமல் விளையாடிக் கொண்டேயிருப்பான். அவன் வெற்றியின் சிகரத்தைத் தொடும் வரை எதிராளியும் அவனோடு விளையாடித்தான் ஆகவேண்டும்”. டீனேஜ் வயதுகளில் டைவிங் விளையாட்டுகளில் டெர்ரி வெற்றி மீது வெற்றி கண்டார்.

நவம்பர் 12, 1976. எதிர்பாராத அந்த கார் விபத்து. அரை டன் எடையை ஏற்றிவைத்திருந்த டிரக் ஒன்றின் மீது அவர் பயணித்த கார் மோதியது. டிரைவர் எந்த சேதாரமுமின்றி வெளியே வர, டெர்ரிக்கு மட்டும் வலது முழங்காலில் நல்ல அடி. ஆயினும் விரைவில் குணம்பெற்று வழக்கமான விளையாட்டுகளை விளையாடி வந்தார். அடுத்த ஆண்டு மீண்டும் அடிப்பட்ட இடத்திலேயே வலி அதிகமாக, மருத்துவர்கள் பரிசோதித்து ‘கேன்சர்’ என்றார்கள். டெர்ரியின் லட்சியங்களில் இடி விழுந்தது. தொடையில் தொடங்கி, முழங்காலுக்கு கீழாக காலை முற்றிலுமாக வெட்டி எறிவதைத்தவிர வேறு வழியே இல்லை.

கேன்சருக்கு போதிய மருத்துவமில்லை என்பதை டெர்ரி அறிந்தார். கேன்சர் ஆராய்ச்சிக்கு ஏராளமான பணம் செலவிடப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். ஒவ்வொரு கனடியரிடமும் ஒரு டாலர் வசூலித்து, கேன்சர் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தொகையை திரட்ட முன்வந்தார். கனடா முழுவதும் தொடர்ச்சியான மாரத்தான் ஓட்டம் ஓடி பணத்தை திரட்ட முடிவெடுத்தார். இந்த ஓட்டத்துக்கு ‘நம்பிக்கை ஓட்டம்’ என்று பெயரும் வைத்தார். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. டெர்ரிக்கு இதயப்பிரச்சினையும் இருந்து வந்தது. அவர் ஓட்டத்தை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக இதயநிபுணர் ஒருவர் டெர்ரியை சந்தித்து, “தயவுசெய்து இந்த விபரீதமுயற்சியை எடுக்க வேண்டாம். இவ்வளவு பெரிய ஓட்டத்தை ஓடுமளவுக்கு உங்கள் இதயம் இடம் கொடுக்காது” என்று வேண்டுகோள் விடுத்தார். டெர்ரி சம்மதிக்கவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

ஒட்டுமொத்தமாக எட்டாயிரம் கிலோ மீட்டர்கள் ஓட வேண்டியிருந்தது. மாரத்தான் மரபுப்படி ஒரு நாளைக்கு நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடுவதின் அடிப்படையில் 185 நாட்களில் நாட்டையே ஓடிக்கடக்க திட்டமிட்டார் டெர்ரி. அதற்கு முன்பாக நியூயார்க் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டம் ஒன்றில் செயற்கைக்காலோடு ஒருவர் ஓடியதை அறிந்தபின்னரே, இந்த சிந்தனை டெர்ரிக்கு வந்திருந்தது.

1980, ஏப்ரல் 12ஆம் நாள் அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் தொடங்கிய அவரது ஓட்டத்தின் இலக்கு நாட்டின் மறுகரையில் இருந்த பசிபிக் கடற்கரை. செயற்கைக்காலோடு மிக நீண்ட, அதே நேரம் தொடர்ச்சியாக ஆறுமாதங்களுக்கு ஒருவர் தன்னலமின்றி, கேன்சர் ஆராய்ச்சிக்கு பணம் திரட்ட ஓடுகிறார் என்பதை கேள்விப்பட்ட கனடிய மக்கள் அவர் ஓடிய நகரங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள். ஒவ்வொரு கனடியரும் தம் பங்காக ஒரு டாலரை கையளித்தார்கள்.

ஒட்டாவா, ஒண்டாரியோ நகரங்களை அவர் கடந்தபோது கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோ மீட்டரை கடந்திருந்தார். மக்களின் வரவேற்பு அவருக்கு மிகுந்த நம்பிக்கையை தந்திருந்தது. “நான் சாலையில் காணும் ஒவ்வொருவருமே எனக்கு நம்பிக்கை தருகிறார்கள். நல்லது நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்ற முயற்சியை யாராவது மேற்கொண்டிருந்தால் கேன்சர் நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவமுறையை ஒருவேளை நாம் இப்போது கண்டறிந்திருக்கலாம்” என்று பேசினார்.

இதற்கிடையே கேன்சர் தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. ஃபாக்ஸின் நுரையீரலை தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. அவரது இடது நுரையீரலில் எலுமிச்சைப்பழ அளவுக்கு கேன்சர் கட்டி உருவெடுத்திருந்தது. செப்டம்பர் 1, 1980ஆம் நாளன்று தனது தொடர்ச்சியான ஓட்டத்தை பாதியில் டெர்ரி பாக்ஸ் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 143 நாட்களில் 5,373 கிலோ மீட்டர்களை அவர் கடந்திருந்தார். டெர்ரி பாக்ஸின் ஓட்டம் தடைப்பட்டதுமே நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் மாரத்தான் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு பெரும் பணம் திரட்டப்பட்டது. டெர்ரி பாக்ஸ் தேசிய நாயகனாக போற்றப்பட்டார். ஒட்டுமொத்தமாக மக்களிடையே இரண்டரைக்கோடி டாலர்கள் திரட்டப்பட்டது. ஒரு கனடியரிடம் ஒரு டாலர் என்ற டெர்ரியின் கனவு நனவானது.

1981 ஜூன் 27ஆம் தேதி மருத்துவ சிகிச்சையில் இருந்த டெர்ரிக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியது. அவர் கோமா நிலைக்கு சென்றார். மறுநாள், மிகச்சரியாக தனது 23வது பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பாக அவர் மரணமடைந்தார். நாட்டின் பிரதமரும், அவைகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தின. அவரது இறுதிமரண ஊர்வலம் நாடெங்கும் நேரலையாக ஒளிபரப்பானது. கோடிக்கணக்கான கனடியர்கள் கண்ணீர் சிந்தினர். அதே ஆண்டு டெர்ரி பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி வருடந்தோறும் ‘டெர்ரி பாக்ஸ் ஓட்டம்’ என்ற பெயரில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டங்களை நடத்தி, கேன்சர் ஆராய்ச்சிகளுக்கு நிதி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்முதலில் நடந்த கனடாவில் நடந்த ஓட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்று பதிவாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ‘டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்’ நடைபெறுகிறது. இந்த ஓட்டம் நடைபெறும் நாடுகளில் எல்லாம் டெர்ரியின் தாய்நாடான கனடாவின் தூதரகங்களை இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

சமீபத்தில் முதன்முறையாக சென்னையில் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் புகையிலைக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தி கலந்துகொண்டார்கள். இனி வருடாவருடம் சென்னையிலும் இந்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், கல்லூரி மாணவர்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு ஓடினர்.

இந்த ஓட்டத்தினை சென்னையில் நடத்த ஐடியா கொடுத்தவர் பதினேழு வயது பள்ளி மாணவர் ஆகாஷ் துபே. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆகாஷ் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். “கேன்சர் சிகிச்சைக்காக எனக்கு ரத்தம் தேவைப்பட்ட போது, முகம் தெரியாத பலரும் தன்னார்வத்தோடு வந்து உதவினார்கள். சென்னையில் இப்படி ஒரு ஓட்டம் நடைபெறுவதே மக்களிடையே கேன்சர் குறித்த விழிப்புணர்வை பரவலாக்குவதற்காகதான்!”“ என்று சொன்னார் ஆகாஷ்.

கனட தூதரக அதிகாரி ஷான் வெட்டிக் கலந்துகொண்டு, இதுவரை டெர்ரி பாக்ஸ் ஓட்டங்கள் மூலமாக 300 மில்லியன் டாலர் அளவுக்கு கேன்சர் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டப்பட்டிருப்பதாக கூறினார். சென்னையில் திரட்டப்பட்ட நிதி டாடா மெமோரியல் சென்டரின் கேன்சர் ஆராய்ச்சிக்க்கு வழங்கப்படுகிறதாம்.

டெர்ரி பாக்ஸின் லட்சியம் வெறுமனே ஓடுவது மட்டுமல்ல. கேன்சரை உலகத்தை விட்டே ஓட்டுவது. அந்நிலை விரைவில் மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக மலரும் என நம்புவோம்.

>>>நட்பு + நலம் = ஹலோ : இன்று உலக ஹலோ தினம்

எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே 1973ல் நடந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, அதனை உலக ஹலோ தினமாக (நவ., 21) கொண்டாடினர். தற்போது 180 நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று 39வது ஹலோ தினம். குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலமாக, இந்த தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்கள் பலர், "ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
என்ன அர்த்தம்
"ஹலோ' என்ற வியப்பிடைச் சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம். ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து "ஹலோ' வந்துள்ளது. இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய ""தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்'' என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது

>>>நவம்பர் 21 [November 21]....

நிகழ்வுகள்

  • 1272 - மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
  • 1789 - வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
  • 1791 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.
  • 1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.
  • 1894 - சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
  • 1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
  • 1916 - பிரித்தானியக் கப்பலான HMHS பிரித்தானிக் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1920 - டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  • 1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
  • 1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
  • 1962 - சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
  • 1963 - பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது.
  • 1969 - முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
  • 1969 - ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
  • 1971 - வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாஹினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடித்தன.
  • 1974 - பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1980 - தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
  • 1980 - நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
  • 1990 - புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
  • 1990 - மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
  • 1996 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2004 - டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.

இறப்புகள்

  • 1970 - சி. வி. இராமன் இந்திய பௌதிகவியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1888)
  • 1996 - அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானியர் (பி. 1926)

சிறப்பு நாள்

  • உலகத் தொலைக்காட்சி நாள்
  • தமிழீழம் - தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்
  • வங்காள தேசம் - இராணுவத்தினர் நாள்

>>>நெட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனிக்க...

வரும் டிசம்பர் 23ம் தேதி சி.எஸ்.ஐ.ஆர்-யு.ஜி.சி நடத்தும் நெட் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வெழுத, நாடு முழுவதிலுமிருந்தும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் விபரங்கள் www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில், நவம்பர் 23ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள், தங்களின் பெயர், நெட் தேர்வுக்கென, முறையாக பதியப்பட்டு விட்டதா என்பதை, இந்த இணையதளத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
அவ்வாறு, தங்களின் பெயர் இடம் பெறாதவர்கள், நவம்பர் 23 முதல் 29ம் தேதிக்குள், தாங்கள் நிரப்பி அனுப்பிய விண்ணப்பத்தின் நகல்கள் மற்றும் அதை முறையான தேதிக்குள் அனுப்பியதற்கான சான்றுகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தொடர்புடைய தேர்வு மையத்தை அணுகலாம். 29ம் தேதிக்குப் பிறகு வரும் வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தேர்வுக்காக பதிவு செய்து அனைவருக்கும், தேர்வு நடைபெறுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னதாக, அனுமதி சான்றிதழ்(Admission certificate) அனுப்பப்பட்டுவிடும். டிசம்பர் 17ம் தேதி வரை, அந்த சான்றிதழ் கிடைக்கப் பெறாதவர்கள், www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லையெனில், 2 கருப்பு-வெள்ளை பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், டிசம்பர் 22ம் தேதி, சம்பந்தப்பட்ட தேர்வு மைய ஒருங்கிணைப்பாளரை அணுக வேண்டும்.
தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர்களின் முகவரிகள், www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில், டிசம்பர் 17 முதல் 23 வரை வெளியிடப்பட்டிருக்கும்.

>>>இசைக்கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் உதவித்தொகை

அரசு இசைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் அரசு இசைக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.250 கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொகையானது இனிமேல் ரூ.500 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் 691 மாணவர்கள் பயனடைவார்கள். அரசுக்கு, ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் கூடுதல் செலவாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teacher stabbed to death in government school near Thanjavur - what is the reason..?

தஞ்சாவூர் : அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை - காரணம் என்ன..? Teacher stabbed to death in government school near Thanjavur - what is t...