கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 22 [November 22]....

நிகழ்வுகள்

  • 1574 - சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • 1908 - அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1922 - துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோ வின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1935 - பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.)
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தனர்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனிய தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக ஹிட்லருக்கு தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், சீனத் தலைவர் சியாங் காய்-செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
  • 1943 - லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
  • 1956 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்பேர்ணில் ஆரம்பமாயின.
  • 1963 - அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி டெக்சாசில் லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். டெக்சாஸ் மாநில ஆளுநர் "ஜோன் கொனலி" படுகாயமடைந்தார். அதே நாளில் உதவி-ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் அமெரிக்காவின் 36வது அதிபராக ஆனார்.
  • 1965 - இந்தோனீசியாவின் கம்யூனிசத் தலைவர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1974 - ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.
  • 1975 - பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து ஜுவான் கார்லொஸ் ஸ்பெயின் மன்னனானார்.
  • 1989 - மேற்கு பெய்ரூட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
  • 1990 - மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார்.
  • 2002 - நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
  • 2003 - ஜோர்ஜியாவில் அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்சேயின் எதிராளிகள் நாடாளுமன்றத்தைத் தம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து அதிபரைப் பதவி விலகுமாறு கோரினர்.
  • 2005 - ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார்.
  • 2005 - எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது.
  • 2007 - இலங்கை அரசாங்கம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.

பிறப்புக்கள்

  • 1830-ஜல்காரிபாய், இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1890)
  • 1890 - சார்லஸ் டி கோல், பிரெஞ்சுத் தளபதியும், அரசியலாளரும் (இ. 1970)
  • 1939 - முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி
  • 1970 - மாவன் அத்தப்பத்து, இலங்கையின் துடுப்பாளர்.

இறப்புகள்

  • 1963 - ஜோன் எப். கென்னடி, 35-வது அமெரிக்க ஜனாதிபதி, (பி. 1917)
  • 1976 - மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் (பி. 1907)

சிறப்பு நாள்

  • லெபனான் - விடுதலை நாள் (1943)

>>>“அன்பு என்றால் இதுதான்”

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியர்.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது'

. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

. மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

.கேட்டபோது சொன்னாள்

, “நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

. குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

, “அன்பு என்றால் இதுதான்”.

>>>2013 - பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

வரும், 2013ம் ஆண்டில், 24 நாட்கள், பொது விடுமுறை நாட்களாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:

விடுமுறை நாள் தேதி கிழமை 
ஆங்கில புத்தாண்டு ஜன.1 செவ்வாய்
பொங்கல் ஜன.14 திங்கள்
திருவள்ளுவர் தினம் ஜன.15 செவ்வாய்
உழவர் திருநாள் ஜன.16 புதன்
மிலாது நபி ஜன.25 வெள்ளி
குடியரசு தினம் ஜன.26 சனி
புனித வெள்ளி மார்ச் 29 வெள்ளி
ஆண்டு வங்கிக்கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்) ஏப்.1 திங்கள்
தெலுங்கு புத்தாண்டு ஏப்.11 வியாழன்
தமிழ் புத்தாண்டு/அம்பேத்கர் பிறந்த நாள் ஏப்.14 ஞாயிறு
மகாவீர் ஜெயந்தி ஏப்.24 புதன்
மே தினம் மே 1 புதன்
ரம்ஜான் ஆக.9 வெள்ளி
சுதந்திர தினம் ஆக.15 வியாழன்
கிருஷ்ண ஜெயந்தி ஆக.28 புதன்
விநாயகர் சதுர்த்தி செப்.9 திங்கள்
அரையாண்டு வங்கி கணக்கு முடிவு (வங்கிகளுக்கு மட்டும்) செப்.30 திங்கள்
காந்தி ஜெயந்தி அக்.2 புதன்
ஆயுதபூஜை அக்.13 ஞாயிறு
விஜயதசமி அக்.14 திங்கள்
பக்ரீத் அக்.16 புதன்
தீபாவளி நவ.2 சனி
மொகரம் நவ.14 வியாழன்
கிறிஸ்துமஸ் டிச.25 புதன்

மொத்தம், 24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் விடுமுறை, வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், அரசு தெரிவித்துள்ளது.

>>>தகுதிதான் அடிப்படை!

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.

இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.

மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.

இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.

மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?
நன்றி - தினமணி

>>>பல்கலை மானியக்குழு "கிடுக்கி' : "காப்பி' அடித்த ஆசிரியர்கள் அதிர்ச்சி

அனைத்துப் பல்கலையிலும் இதுவரை வழங்கிய, பிஎச்.டி., ஆய்வுக் கட்டுரைகளையும், "சாப்ட்' காப்பியாக மாற்றி அனுப்பி வைக்க, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது. இவற்றை ஆன்-லைனில் வெளியிட உள்ளதால், "காப்பி' அடித்து ஆய்வுக்கட்டுரை தயாரித்து பட்டம் பெற்ற, ஒரு சில பேராசிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஆசிரியர் பணியில் அனுபவம் வாய்ந்தவர்கள், மூன்று ஆண்டுகள் முதல், ஆறு ஆண்டுகள் வரை, குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வு செய்து, அதன் தொகுப்பை, ஆய்வுக் கட்டுரையாக, பல்கலை தேர்வாணையத்தில் தாக்கல் செய்வர். அதில் உள்ள ஆய்வுத் தகவல்கள் குறித்து, கைடு நடத்தும், "வைவா' தேர்வுக்குப் பின், பிஎச்.டி.,பட்டத்தைப் பல்கலை வழங்குகிறது. இதில் பிஎச்.டி., படிப்புக்கு, "கைடாக' உள்ள பல பேராசிரியர்கள், பணத்துக்காக விலை போகின்றனர். இதனால், இன்டர்நெட்டில் உள்ள தகவல்கள், மற்ற ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் என, காப்பி அடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை களுக்கும், பிஎச்.டி., பட்டம் வழங்கப்படுகிறது. இதைத் தடுக்க, பல்கலை மானியக்குழு, புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இனி பல்கலையில், பிஎச்.டி., ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்யும் போதே, அதன், "சாப்ட் காப்பி'யை பல்கலை மானியக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், இதுவரை பல்கலைகளில் வழங்கப்பட்ட பிஎச்.டி., பட்டத்துக்கான அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும், "இ-புக்'காக மாற்றி, அனுப்பி வைக்கவும், பல்கலைகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான செலவினத் தொகையாக, ஒவ்வொரு பல்கலைக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரைகளை, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பட்சத்தில், அனைவராலும் படிக்க முடியும் என்பதாலும், காப்பி தகவல்களை கண்டறிய பல்வேறு நவீன சாப்ட்வேர் வந்துவிட்டதாலும், காப்பி அடித்து, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து, துணைவேந்தர் முத்துச்செழியன் கூறியதாவது: கல்வியாளர்கள் பல நாட்களாக வலியுறுத்தி வந்ததை, தற்போது பல்கலை மானியக் குழு அமல்படுத்தி உள்ளது. இதன் மூலம், அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுமையாகப் படித்துப் பயன் பெற முடியும். மேலும், இனி ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் தரமானதாக இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தையும் உருவாக்கி உள்ளது.

>>>பள்ளிகளில் ஆய்வு நடத்த வருகிறது "அன்னையர் குழு'

"அனைத்து பள்ளிகளிலும், "அன்னையர் பள்ளி பார்வை குழு' ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும்' என, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அன்னையரை, ஐந்து பேர் கொண்ட குழுவாக அமைக்க வேண்டும். இந்த குழு, வாரம் ஒரு நாள், பள்ளி வேலை நாட்களில் ஆய்வு மேற்கொள்வர். வாரந்தோறும் இக்குழுவினர் மாறிக் கொண்டே இருப்பர். பள்ளியில் வகுப்பறை வசதி உள்ளதா, போதிய ஆசிரியர்கள் உள்ளனரா, நூலகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா என, ஆய்வு செய்வர். இதுகுறித்து தலைமையாசிரியரிடம் தகவல் தெரிவிப்பர். அன்னையர் கூறும் குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். இக்குழுவில், அனைத்து மாணவர்களின் அன்னையரும், இடம்பெற வகை செய்யப்பட்டுள்ளது. குறைகளை சரி செய்தது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு இவர்களே தகவல் தெரிவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.

>>>முதுகலை ஆசிரியர்களாகும் கல்வித்துறை பணியாளர்கள் : இன்று ஆன்லைன் கவுன்சிலிங்

முதுகலையுடன் பி.எட்., முடித்த கல்வித்துறை பணியாளர்களை, ஆசிரியர்களாக நியமிக்கும் "ஆன் லைன் கவுன்சிலிங்' இன்று நடக்கிறது. பட்டதாரி, முதுகலை பி.எட்., முடித்து, கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, சர்வீஸ் அடிப்படையில் 2 சதவீதம் பேர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் அரசு உத்தரவு 6 மாதத்திற்கு முன்பு அமலானது. இதன்மூலம் ஓய்வு பெற 5, 7 ஆண்டுகளே உள்ள நிலையில், சிலருக்கு பள்ளியில் பாடமெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், தகுதியுள்ள முதுகலை பி.எட்., பட்டதாரிகளுக்கு சீனியாரிட்டிப்படி அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆன்லைனில் இன்று (நவ.,21) நியமன கவுன்சிலிங் நடக்கிறது. ஒருசில மாவட்டங்களில் இரு சதவீத ஒதுக்கீட்டிற்கு ஆட்கள் இல்லாத நிலையில், சிவகங்கையில் இருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ""கல்வித்துறை பணியாளர் சங்கம் சார்பில், போராடி 2 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றோம்.100 காலியிடத்தில் 2 என்பது குறைவு. 5 ஆக அதிகரித்தால் ஆசிரியராகும் வாய்ப்பு பலருக்கு கிட்டும்,'' என்றார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Magizh Mutram - House System Handbook Manual - Tamil Nadu Government School Education Department Released

மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...