கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>மன்னிக்க வேண்டுகிறேன்… - ஓ பக்கங்கள்-ஞாநி
அன்புள்ள…..
உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை.
ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல்
வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற
இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது.
டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும்
தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை
நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட
பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல்
வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான
டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும்
இல்லை.
உன்னைப் பற்றிய முதல் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு 9
மணிக்கு நண்பருடன் ஒரு பஸ்சில் ஏறினாய். அதில் இருந்த டிரைவரும் இன்னும்
ஐந்து பேரும் உன்னை கிண்டல் செய்தார்கள். கண்டித்த உன் நண்பனை இரும்புக்
கம்பியால் அடித்துப் போட்டுவிட்டு, எதிர்த்த உன்னையும் அடித்துப்
போட்டுவிட்டு ஆறு பேரும் மாறி மாறி உன்னைப் பாலியல்
வன்முறைக்குள்ளாக்கினார்கள். உன்னையும் நண்பரையும் சாலையோரம் தூக்கி
எறிந்துவிட்டுப் போனார்கள். இந்த நான்கு வரிகளை எழுதும்போதே, கோபத்திலும்
ஆற்றாமையிலும் என் கண்களில் நீர் பொங்கி வருகிறது . எழுதும் எனக்கே இத்தனை
வேதனையை ஏற்படுத்தும் இந்த நிகழ்வு உன்னை எத்தனை துயரத்துக்கும்
அதிர்ச்சிக்கும் வலிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கும் என்று
நினைக்கும்போது தொடர்ந்து அழுவதை என்னால் நிறுத்தமுடியவில்லை.
உன்னைப் பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகள்தான் என் கண்ணீரைத்
துடைத்துக் கொள்ள வைக்கின்றன. உயிர் பிழைப்பதற்காக மருத்துவமனையில்
போராடிக் கொண்டிருக்கும் உன் மன உறுதியை மருத்துவர்களே வியந்து
பாராட்டுகிறார்கள். இரும்புத் தடியால் சிதைக்கப்பட்ட உன் முழு குடலையும்
அறுவை சிகிச்சை செய்து நீக்கியபின்னரும் நீ தொடர்ந்து போராடுகிறாய்.
நினைவு வரும்போதெல்லாம், குற்றவாளிகள் சிக்கிவிட்டார்களா, அவர்கள்
தண்டிக்கப்படவேண்டும் என்று எழுதிக் காட்டுகிறாய். குடும்பத்தில் முதல்
தலைமுறையாகப் படிக்கப் போயிருக்கும் உன்னை நம்பித் தங்கள் எதிர்காலத்தை
வைத்திருக்கும் சகோதரிகளிடமும், பெற்றோரிடமும் கவலைப்படவேண்டாம், நான்
பிழைத்துக் கொள்வேன் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறாய்.
உன்னிடம் மன்னிப்பு கேட்கவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உனக்கு
நேர்ந்த நிலைக்குக் காரணமான ஒவ்வொன்றின் சார்பாகவும் நான் மன்னிப்பைக்
கோருகிறேன்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த பஸ்சை
விடுமுறை நாளன்று அதன் டிரைவர் மது குடித்துவிட்டு தன் நண்பர்களுடன்
உல்லாசமாக சுற்றித் திரிய எடுத்துச் செல்ல அனுமதிக்கும் பஸ் முதலாளிகளை,
நம் சமூகத்தில் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன் மன்னிப்பைக் கோருகிறேன்.
ஒரு விபத்துக்குப் பின் டிரைவர் வேலைக்கான உடல் தகுதி இல்லையென்று
அறியப்பட்ட ஒருவரை தொடர்ந்து டிரைவராக வைத்திருந்த அந்த முதலாளியின்
குற்றத்தினால் இத்தனை நாட்களாக தம்மையறியாமலே ஆபத்தை சந்தித்து மயிரிழையில்
தப்பி வந்த பள்ளிக் குழந்தைகளிடமும் தப்ப முடியாமல் சிக்கிய உன்னிடமும்
மன்னிப்பைக் கோருகிறேன்.
மக்கள் தேவைக்கான போதுமான அரசு பஸ்களை இயக்காமல், எந்த தனியாரும்
எப்படிப்பட்ட பஸ்சையும் பொது தடங்களில் இயக்க அனுமதித்திருக்கும் லாயக்கற்ற
டெல்லி பஸ் நிர்வாகத்தை நாங்கள் சகித்துக் கொண்டிருப்பதற்காக உன்
மன்னிப்பைக் கோருகிறேன். அதனால்தான் நீயும் உன் நண்பரும் இந்த பஸ்சையும்
அப்படிப்பட்ட ஒரு பஸ் என்று நம்பி ஏறும் நிலை வந்தது.
படிப்பறிவில்லாத அந்த டிரைவரும் அவன் நண்பர்களும் குடித்துவிட்டு ஒரு
பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட என்ன காரணம் என்று யோசித்துப்
பார்க்கிறேன்.
நாங்கள்தான் – we the people of Indiaதான். காரணம். முதலில்
எல்லாருக்கும் படிப்பு, எல்லாருக்கும் சமமான படிப்பு என்பதை நாங்கள்
கொடுக்கத் தவறிவிட்டோம்.
படிப்பு கிடைத்தவர்களுக்கும் எப்படிப்பட்ட படிப்பை வழங்கினோம் ?
வேலைக்குப் போய் கணிசமான சம்பளம் வாங்குவதற்கான திறமைகளை மட்டுமே தரும்
படிப்பை வழங்கினோமே தவிர, சக மனிதர்களுடன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு
எதையும் எங்கள் பள்ளிகளும் கல்லூரிகளும் சொல்லித் தந்ததில்லை.
அதையெல்லாம் குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டோம்.
குடும்பம் என்ன பார்த்தது ? சாதி பார்த்தது. மதம் பார்த்தது. ஆணுக்கு
அடிமையாக வேலை செய்யவே பெண் பிறந்திருக்கிறாள் என்ற கருத்தைக்
குழந்தையிலிருந்தே என்னைப் போன்ற ஆண்களுக்கு ஊட்டி வளர்த்தது.
உன்னைப் போன்ற பெண்கள் படித்து வேலைக்கு சென்றபின்னரும் கூட,
திருமணமாகிவிட்டால், கணவன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்பதைத்தான்
குடும்பம் இன்று வரைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேஇருக்கிறது. இருவரும்
வேலையில் இருப்பீர்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டால், தொடர்ந்து வேலைக்குப்
போவாயா என்று ஒரு போதும் எந்த ஆணிடமும் எந்தக் குடும்பமும் கேட்டதே இல்லை.
கணவனுக்கு சரியென்றால் மட்டுமே தொடர்ந்து வேலைக்குப் போகலாம் என்று
பெண்ணுக்கு சொல்லத் தவறியதும் இல்லை.
உன் உடல் உனக்குச் சொந்தமில்லை என்றுதான் நாங்கள் உன்னைப் போன்ற
பெண்களிடம் காலம் காலமாக கற்றுத் தந்திருக்கிறோம். அது ஆணுக்கானது.
அதற்குரிய ஆண் வரும்வரை பத்திரமாக வைத்திருந்து அவனிடம் ஒப்படைப்பதையே
பெற்றோரின் மகத்தான கடமையாக குடும்பம் சொல்லித் தந்திருக்கிறது. அதனால்தான்
என்ன உடை அணியவேண்டும், எங்கே எந்த நேரத்தில் போக வேண்டும், எப்படி
ஆணுக்குள் எப்போதும் காத்திருக்கும் காமப் பிசாசை உசுப்பிவிட்டுவிடக்
கூடாது என்றெல்லாம் உனக்கு - உங்களுக்கு கட்டளைகள் போட்டு
வந்திருக்கிறோம். ஆண் குடிக்கலாம். ஆண் சிகரெட் பிடிக்கலாம். ஆண் எது
வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நீ — நீ ஒரு பெண் – செய்யக்கூடாது என்று
மிரட்டி வந்திருக்கிறோம்.
நியாயப்படி பெண்ணை சக மனுஷியாக, தன்னைப் போலவே சிந்திக்கக் கூடிய,
செயல்படக் கூடிய ஆற்றல் உடைய இன்னொரு உயிராகப் பார்க்கவும் மதிக்கவும்
எங்கள் ஆண்களுக்கு எங்கள் குடும்பங்கள் சொல்லித் தந்ததே இல்லை. அப்பா
எதிரிலே பேசவே மாட்டோம் என்றால் அது ‘மரியாதை’ தெரிந்த குடும்பம்.
பெண் காமத்துக்கானவள். பெண் குழந்தை வளர்ப்பதற்கானவள். பெண் ஆணின்
இச்சைகளை பூர்த்தி செய்வதற்கானவள். இதைத் தவிரவும் ஒரு பெண் வேறு ஏதாவது
அவள் விருப்பப்படி செய்ய முடிந்தால், அது அவளின் உரிமையாளனாகிய ஆணின்
பெருந்தன்மையையே காட்டும் என்றே நாங்கள் உங்களை நம்பவைத்தோம்.
குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு
வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா,
தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின்
உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை, சீட்டுக்கட்டு முதல் சினிமா
வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக
வரையறுக்கப்பட்டு விட்டது. பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன்.
அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு
தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.
இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி.
படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும்
வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண்
என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது.
பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது….
படிக்காதவன் தன்னைக் காதலிக்க மறுக்கும் பெண்ணாயிருந்தால் முகத்தில்
ஆசிட் ஊற்றுவான். எனக்கு கிடைக்காத உடல் வேறு எவனுக்கும் கிடைக்க வேண்டாம்
என்ற ஆணாதிக்க மனநிலை அது.
இந்த சூழலில் படித்தவனாக இருந்தால் அந்த ஆண் எப்படிப்பட்டவனாக வருவான்
? வரதட்சிணை பிரச்சினைக்காக மனைவியை வீட்டை விட்டுத் துரத்துவான்.அல்லது
தன் பேச்சைக் கேட்காமல் கருவுற்ற குழந்தையை அபார்ஷன் செய்ய மறுத்த மனைவியை
தண்டிக்க, பெற்ற குழந்தையை சுவரில் அடித்துக் கொல்வான். இதையெல்லாம் உன்
நண்பனைப் போன்ற ஐ.டி படித்த எஞ்சினீயர்கள்தான் இதே நாட்டில் செய்தார்கள்.
கொஞ்சம் நாசூக்கு தெரிந்தவனாக இருந்தால், உடன் வேலை பார்க்கும் பெண்ணை
கண்ணியமான ரேப்புக்கு அழைப்பான். உடன்படுத்தால் வேலை ஏணியில் அவள் அடுத்த
படி ஏறிப் போகலாம்.
மாறுபட்ட எல்லா அணுகுமுறைகளுக்கும் ஒரே அடிப்படைதான். பெண்ணின் உடல்
ஆணுக்கானது. மனம், சிந்தனை, அறிவு அதெல்லாம் ஆம்பளைங்க சமாச்சாரம்.
ஒவ்வொரு ஆணும் இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட் என்ற நிலையை
உருவாக்குவதையே நாங்கள் குடும்பம் தொடங்கி மீடியா வரை முயற்சித்துக்
கொண்டிருக்கிறோம்.
இந்தப் பார்வையைத் தொடர்ந்து பரப்பி வரும் நாங்கள் எல்லாரும்தான்
குற்றவாளிகள். அந்த ஆறு பேர் மட்டுமல்ல. அவர்களை தண்டிக்க சில சட்ட
வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால் எங்களை தண்டிக்க சட்டத்தில் இதுவரை
இடமில்லை.
அதனால்தான் உன் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு
பெண்ணிடமும் மன்னிப்பைக் கோருகிறேன். அவர்கள் எல்லாரும் இன்னமும் பாலியல்
வன்முறைக்கு உட்படாமல் இருப்பது அதிர்ஷ்டம்தான். நேற்று நீ. நாளை
இன்னொருத்தி. இந்த நிலை மாறவேண்டுமானால், அந்த ஆறு பேரை தூக்கில் போட்டால்
மாறிவிடாது. அல்லது ஆறு பேரையும் காயடித்தாலும் மாறிவிடாது. நம் குடும்பம்
மாற வேண்டும் நம் கல்வி மாற வேண்டும். நம் அரசியல் மாற வேண்டும். நம்
‘பண்பாடு’ மாறவேண்டும்.
இதையெல்லாம் மாற்ற உன்னைப் போன்ற பெண்கள் வேண்டும். உனக்கு நேர்ந்த
கொடூரத்துக்குப் பின்னும் இந்த வாழ்க்கை மேல் நம்பிக்கையுடன் போராடிக்
கொண்டிருக்கிறாய். நீ பிழைத்து வந்து மீடியாவில் தோன்ற வேண்டும். எவனோ
ஒருவன் லவ் லெட்டர் கொடுத்தாலே தன் மானம் போய்விட்டதாகப் பதறும் கோழைப்
பெண்களை மாற்ற நீ வர வேண்டும். தன்னைச் சுற்றிலும் இருக்கும் அத்தனை
அம்சங்களும் தன் திமிரையும் காமத்தையும் மட்டுமே ஊக்குவிக்கும்
ஆபத்திலிருந்து, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பும் ஆண்களை ஊக்குவிக்க
நீ வரவேண்டும்.
அப்படி வரும்போது எங்களை மன்னித்துவிட்டு நம்பிக்கையுடன் வா. உன் மன்னிப்புதான் இனியேனும் எங்களை நல்லவர்களாக்கும்.
அன்புடன்
ஞாநி
சக இந்தியர்கள் சார்பாக.
குமுதம் 26.12.2012
>>>காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் ! - ஓ பக்கங்கள்-ஞாநி
தர்மபுரியில் தலித் குடியிருப்புகள் தலித்தல்லாத சாதியினரால் தாக்கி
அழிக்கப்பட்ட சம்பவத்துக்கு காதல் காரணமா இல்லையா என்ற ஆராய்ச்சி அரசியல்
களத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாத ஒரே
அம்சம், நடந்தது வன்முறையா இல்லையா என்ற அபத்தமான தலைப்பு மட்டும்தான்.
தலித் இளைஞனும் வன்னியப் பென்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாலும்
அதில் விரக்தியடைந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதாலும்தான் இந்த
தாக்குதல் நடந்தது என்று நானும் கருதவில்லை.தாக்குதல் நடத்துவதற்கான மனநிலை
ஏற்கனவே கனன்றுகொண்டிருந்தது. அதற்கு ஒரு சாக்காக இந்த காதல் திருமணம்
அமைந்தது என்றே தோன்றுகிறது. இது இல்லாவிட்டால், இன்னொரு சாக்கு
கிடைத்திருக்கக்கூடும்.
காதல் திருமணம்தான் உண்மையான பிரச்சினை என்றால், நடந்த வன்முறையில்
காதலர்கள் தாககப்படவில்லை. அவ்வளவு ஏன், எந்த வீட்டிலும் எந்த நபரும்
தாக்கப்படவில்லை. தாக்கிய கும்பல்கள் வீடுகளிலிருந்து ஆட்களை
விரட்டிவிட்டு, வீடுகளையே தாககி அழித்திருக்கிறார்கள் தங்களை விட மோசமான
நிலையில் இருந்த தலித்துகளின் குடும்பங்களிலிருந்து பலர் படித்து வேலை
வாய்ப்புகளை அடைந்து நகரங்களில் குடியேறி பொருள் சம்பாதித்து, கிராமத்தில்
இருக்கும் குடும்பத்தின் நிலையை மேம்படுத்தி, தங்களை விட வசதியாக தங்கள்
கண்ணெதிரே வாழ்வது பற்றிய பொறாமையும் எரிச்சலுமே தாக்குதலின் பின்னால்
இருப்பதாகவே தெரிகிறது. அந்தப் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் பின்னால்
இருப்பது சுயசாதிப் பெருமையும் சாதிவெறியும்தான். பொருளாதாரத்தில் முன்னேறி
சமூக அந்தஸ்தில் அடுத்த படிக்குச் சென்றால் தங்கள் சாதி மேலாண்மை
பாதிக்க்ப்படும் என்ற கவலையில் தலித்துகளின் செல்வத்தை, வளத்தை
அழித்திருப்பதாகவே தெரிகிறது.
நடந்த தாக்குதல் காதல் திருமணப் பிரச்சினையால் நடக்கவில்லை என்று
வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு சாதியினர் சொன்னபோதும், இந்த
தாக்குதலையொட்டி, சமூக அரசியல் களத்தில், இன்று காதல் திருமணம் என்பது
விவாதத்துக்குரிய விஷயமாக மாறியிருக்கிறது. இது இப்படி விவாதத்துக்கு
உட்படுவது எனக்கு நல்லதாகவே படுகிறது. எது காதல், எப்படி காதலிப்பது,
எப்போது காதலிக்கலாம், எந்தக் காதலை ஏற்கலாம், நிராகரிக்கலாம் என்றெல்லாம்
அரசியல் தலைவர்களே பேசவேண்டிய கட்டாயம் வந்திருப்பது நல்லது.
மாற்று சாதிப் பெண்களை மயக்கி தங்களைக் காதலிக்க வைத்து பின்னர் ஏமாற்றி
பணம் பறிக்கும் வேலையில் தலித் இளைஞர்கள் ஈடுபடுவதாக டாக்டர் ராமதாஸ்
பகிரங்கமாகவே புகார் சொல்கிறார். திட்டமிட்டு ஒரு பெண்ணை மயக்கிக்
கவிழ்த்து பணம் பறிக்கும் கயமையுடையவர்கள் எல்லா சாதிகளிலும்
இருக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுவது மறு சாதிப் பெண்ணை மட்டும் அல்ல, தன்
சுய சாதிப் பெண்ணையும்தான். வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெண்ணை ஏமாற்றி
திருமணம் செய்து கொண்டு சிக்கியவர்களைப் பற்றி ஏராளமான செய்திகளை காலம்
காலமாகப் படித்து வருகிறோம்.அவர்களை அம்பலப்படுத்தி வழக்கமான கிரிமினல்
சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை யாரும் எதிர்க்கமாட்டார்கள். அப்படி பெண்ணை
ஏமாற்றுவோர் இந்தக் குறிப்பிட்ட சாதியில்தான் இருக்கிறார்கள் என்று
குறிப்பிட்டுச் சொல்வதுதான் சாதிவெறி. இந்த சாதியினரெல்லாம் குற்றம்
செய்யக்கூடியவர்கள் என்று சில சாதிகளை ஆங்கில ஆட்சியில் வரையறுத்தது போல,
இந்த சாதியினர் போலிக் காதலர்கள் என்று புதிய வரையறையை ராமதாசும அவருடன்
அணி சேர்ந்திருக்கும் இதர சாதித்தலைவர்களும் உருவாக்குகிறார்கள்.
ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கூலிங் கிளாஸ் மாட்டிக் கொண்டுப் பெண்களை
மயக்கிவிடுகிறார்கள் என்று ராமதாஸ் சொல்கிறார். காதல் இவ்வளவு ஈசியானதென்று
எனக்குத்தெரியாமல் போய்விட்டது. நானும் வயசுக் காலத்தில் ஜீன்ஸ் போட்டுத்
திரிந்திருக்கிறேன். அதைப் பார்த்து ஒருத்தியும் என்னைக் காதலிககவில்லை.
கூலிங் கிளாஸ் போடமுடியாமல் திக் கண்ணாடி போட்டிருந்ததுதான் தப்போ என்னவோ
?! இன்று ஜீன்ஸ், கூலிங் கிளாசைப் பார்த்தே மயங்கிவிடும் நிலையில் தங்கள்
சாதிப் பெண்கள் இருக்கிறார்கள் என்றால் அது ஏன்அப்படி என்றும், அதை சரி
செய்ய என்ன வழி என்றும்தான் ராமதாசும் இதர சாதித் தலைவர்களும்
கவலைப்படவேண்டும்.
எந்தப் புரிதலும் இல்லாமல், கண்டதும் காதல் என்று வெறும் பாலியல்
கவர்ச்சியைக் காதல் என்று இன்று பல யுவன்களும் யுவதிகளும் குழப்பிக்
கொள்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது ராமதாஸ் சொல்வது போல தலித்
இளைஞர்கள் மத்தியில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. எல்லா சாதிகளிலும்
இருக்கும் ஆண்கள், பெண்கள் மத்தியில் காதலைப் பற்றிய சரியான புரிதலே
இல்லாத விடலைத்தனம் இருக்கிறது.
காதல் பற்றிய அந்த விடலைத்தனத்துக்கு உரம் போட்டு நீர் ஊற்றி வளர்ப்பது
யாரென்று அடையாளம் காணவேண்டும். அது சினிமாதான். ”அறியாத வயசு. புரியாத
மனசு . ரெண்டும் சேர்ந்து காதல் செய்யும் நேரம்” என்று ‘காதலை’
கிண்டர்கார்டனுக்கே கொண்டு போனது தமிழ் சினிமாதான். அது காட்டி வருவது
காதலே அல்ல. காமப் பசியைத் தான் காதல் என்று சித்திரித்துக்
கொண்டிருக்கிறது. விடலை மனங்களுக்கு சினிமா கற்றுக் கொடுத்திருக்கும் ஈவ்
டீசிங் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளிக் கூடத்துக்கு படிக்கப் போகும் மாணவியின்
சைக்கிளை மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு என்னை லவ் பண்ணாதான் விடுவேன்
என்று மிரட்டும் பொறுக்கியை தமிழ் சினிமா ஹீரோவாகக் காட்டுகிறது சினிமாவில்
அந்தப் பெண் ஏழெட்டு முறை மிரட்டலுக்குப் பின் அந்தக் ‘காதலை’ ஏற்றுக்
கொண்டு விடுவாள். வாழ்க்கையில் என்ன நடக்கும்? ஒரே சாதிக்காரராயிருந்தால்,
முதல்முறை டீசிங்குக்குப் பிறகு அந்தப் பெண்ணை ஸ்கூலுக்குப் போகாதே என்று
நிறுத்திவிடுவார்கள் .எதிரெதிர் சாதியானால் இது சாதிக் கலவரமாக மாறிவிடும்.
அடுத்த சினிமாவில் குழந்தை உழைப்பை நிறுத்தி கல்வி தரவேண்டிய அவசியம்
பற்றி உபதேசிக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில் வந்திருக்கும் தமிழ்ப்படங்களில் பெரும்பாலானவை,
மீடியாவால், பத்திரிகைகளால் கொண்டாடப்பட்டவை, விருதுகள் பெற்றவை
பொறுக்கிகள், பொறுக்கித்தனம், பெண்ணை வலுக்கட்டாயமாகக் காதலிக்கவைத்தல்
போன்ற அம்சங்களையே கதாநாயக அம்சங்களாக உயர்த்திப் பிடித்தவை. விதிவிலக்கான
நல்ல படங்கள் மிகச் சில. பெண் உடலுக்கு ஆணும் ஆண் உடலுக்குப் பெண்ணும்
ஆசைப்பட்டு ஏங்குவதும் அதை அடைய விதவிதமான வன்முறையில் ஈடுபடுவதையுமே காதல்
என்று வணிகப் படங்கள் நம்மை நம்பவைத்து வருகின்றன. இவற்றின் ஒட்டு மொத்த
விளைவு என்ன ? காம உணர்ச்சியால் மட்டும் உந்தப்பட்ட இளைஞர்கள் தன்னை
காதலிக்காத, தனக்குக் கிடைக்காத பெண்ணை அழித்துவிடும் வெறியுடன் ஆசிட்
ஊற்றும் வரை போகிறது. நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்
சென்னையில் ஒரு மருத்துவமனையில் இருக்கிறாள் காரைக்கால் விநோதினி.
ஏழைப்பெண். படித்து வேலைக்குப் போய் தன் குடும்பத்தைக் காப்பாற்றும்
கட்டத்துக்கு வந்த சமயத்தில் விடலை இளைஞன் செய்த ஆசிட் தாககுதலினால் இரு
கண்பார்வையையும் இழந்து அவள் உயிருக்குப் போராட, அவளைக் காப்பாற்றத்
தேவையான சிகிச்சைக்கே பல லட்சங்களையும் திரட்ட அவளுடைய ஏழைப் பெற்றோர்
கடுமையாகப் போராடிக் கொண்டிருகிறார்கள்.
இந்த விடலை வக்கிரங்களின் ஊற்றுக் கண்ணான படங்களை எடுத்தவர்கள்- பணம்
போட்டவர் முதல் எழுதி இயக்கி நடித்தவர் வரை – பல சாதிகளையும்
சேர்ந்தவர்கள். இந்தப் படங்களால் மனம் பேதலிக்கும் விடலைகளும் பல
சாதிகளிலும் இருப்பவர்கள்தான். இப்படிப்பட்ட படங்களுக்கெதிராக அனைத்து
சாதியினரும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்க வேண்டுமே தவிர, உங்க சாதிப்
பையன்கதான் மோசம், எங்க சாதிப் பொண்ணுங்க அப்பாவி என்றெல்லாம் பேசிக்
கொண்டிருப்பது அர்த்தமற்றது.
சிறு வயதிலிருந்தே ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகி ஒருவரையொருவர்
புரிந்துகொள்ள விடாமல் தடுக்கும் சமூகத்தில், எது காதல் என்ற குழப்பம்
ஏற்படுவதே இயற்கை. தன் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனதில் ஏற்படும்
மாற்றங்கள் பற்றியெல்லாம் விடலை வயதில் அறிவுப்பூர்வமாக தெரிந்துகொள்ள
வழியில்லாமல் வளரும் சிறுவரும் சிறுமியும் காம ஈர்ப்பை காதல் என்று
மயங்குவதுதான் நடக்கும். படிப்பு, சொந்தக் காலில் நிற்பதற்கான
வேலைவாய்ப்பு, சம்பளம் இவற்றையெல்லாம் இருவரும் அடைந்தபின்னர்தான் நாம்
சேர்ந்து நமக்கான குடும்பத்தை உருவாக்கமுடியும், ஒன்று சேர்ந்து
வாழ்வதற்கான பரஸ்பர மதிப்பும் அன்பும் நம்மிடையே இருக்கிறதா என்ற அறிவு
முதிர்ச்சி இல்லாமல் உருவாகும் எந்தக் காதலும் உடல்களைத் தாண்டி
நீடிக்காது.
நம் சமூகப் பிணிகளில் ஒன்றான சாதியை ஒழிக்க காதல் திருமணங்கள் நிச்சயம்
உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் சாதி கடந்த திருமணங்கள்
எளிதானவை அல்ல. பாரதி தன் சந்திரிகை என்ற நாவலிலே, கோபால
அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய
மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை
வருணித்திருக்கிறார். அது பாரதியின் லட்சியங்களில் ஒன்று. ஆனால் பாரதிக்கு
அடுத்த தலைமுறையான புதுமைப்பித்தன் காலத்திலும் சாதி கடந்த கலப்பு மணம்
எளிதாகிவிடவில்லை. பாரதியின் லட்சியத்தை புதுமைப்பித்தன் பகடி செய்து ஒரு
கதையே எழுதியிருக்கிறார். கதைக்கு ஒரு முன்குறிப்பு எழுதும்
புதுமைப்பித்தன், “கதையின் போக்கு ‘கண்டதும் காதல்’ என்ற கோபால
அய்யங்காரின் இலட்சியத்துடன் – ஏன் பிரமை என்றும் கூறலாம் – முடிவடைகிறது.
முடிவு பெறாத இரண்டாவது பாகத்தில் வருணிப்பாரோ, என்னவோ? மனிதன், ‘காதல்
பெண்ணின் கடைக்கண் பணியிலே’ அனலை விழுங்கலாம், புளித்த குழம்பையும் குழைந்த
சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில்
எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்
என்பதில்லை” என்று ஆரம்பிக்கிறார். அவர் கதையில் மீனாட்சியால்
கோபாலய்யங்காரின் சைவ உணவுமுறைக்கு மாற முடியாத கஷ்டம்
சித்திரிக்கப்படுகிறது. புதுமைப்பித்தன் சொல்லும் தீர்வு தம்பதிகள் மது
அருந்துவதும், கோபாலய்யங்கார் அசைவ உணவுக்கு மாறுவதும்தான் !.
சாதி, மதம் கடந்த கலப்புத் திருமணங்கள் வெற்றி பெற பல அம்சங்கள்
முக்கியமானவை. உணவுப் பழக்கத்தில் அவரவர் விருப்பத்தை மற்றவர் மதிக்கும்
அம்சம் அதில் ஒன்று. சாதி மதம் சார்ந்த குடும்பப் பழக்க வழக்கங்கள்
அடுத்தவை. இருவருமே தங்கள் வாழ்க்கையின் இனிமைக்கு சாதியோ மதமோ
பிரதானமானதல்லல /தேவையில்லை என்ற அறிவுடன் இருப்பது முக்கியம். இருபக்க
உறவினர்களும் இழுக்கும் இழுப்புகளுக்கெல்லாம் ஆட்படாமல் சுயமாக
சிந்திக்கவும் அதன்படி செயல்படுவதற்குமான ஆற்றல் தேவை. இதையெல்லாம்
அவர்களுக்கு எது தரும் ? சுயசார்பு இருக்க வேண்டும். அறிவு முதிர்ச்சி
இருக்க வேண்டும்.இருவருக்கும் ஒருவர் மீது மற்றவருக்கு அன்பும் மதிப்பும்
இருக்க வேண்டும். அப்படிப்பட்ட காதல் விடலை வயதில் எப்படி சாத்தியம் ?
அதுவும் காதல் என்றால் காமம் என்றே நமபவைக்கும் சினிமா சூழலில் ? ஒரு
சிறுவனும் சிறுமியும் பேசினாலே கற்பு பறிபோய்விடும் என்று அஞ்சும் சமூக
சூழலில் ? தன் உடலைத் தானே புரிந்து வசப்படுத்த இயலாத வாழ்க்கை முறையில் ?
இந்தச் சூழலை மாற்றினால்தான் மெய்யான காதல் தழைக்க முடியும். மெய்யான
காதலே சாதி மதங்களைக் கடக்கும் வல்லமையுடையது. அப்படிப்பட்ட காதலர்களை எந்த
வயதில் பார்த்தாலும் நம் மனதிலும் காதல் ஊறும் என்பது என் அனுபவம். என்
கண்ணெதிரே நான் பார்த்தவர்கள் பாப்பாவும் உமாநாத்தும். கிருஷ்ணம்மாளும்
ஜெகந்நாதனும் !
இந்த வருடத்துப் பொய்:
புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.சமாதியில் வைக்கப்பட்டிருக்கும் வடிவம்
இரட்டை இலை சின்னத்தின் வடிவம் அல்ல என்று உயர் நீதிமன்றத்தில் அரசு
வழக்கறிஞர் தெரிவித்திருப்பதுதான் இந்த வருடத்தின் மிகப் பெரிய பொய் ஆக
இருக்க முடியும். அது வெற்றியின் சின்னமாம். கிண்டர்கார்டன் குழந்தை கூட
அதைப் பார்த்ததும் அது இரட்டை இலை என்று சொல்லிவிடும். அப்படி சொல்லும்
குழந்தையை குண்டர் சட்டத்தில் கைது செய்தாலும் இப்படிப்பட்ட் வழக்கறிஞர்கள்
நியாயப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதே ரீதியில் போனால்,
டாஸ்மாக்கில் விற்கப்படுவது மதுவே அல்ல என்றும் அது உற்சாக பானம் என்றும்
அரசு தரப்பில் வாதாடும் நிலைக்குப் போய்விடக் கூடும். ஆட்சியாளர்கள்
விரும்புவதற்கேற்ப சட்ட வியாக்கியானங்களை படித்தவ்ர்கள் செய்யும்
அவலத்தைத்தான் பாரதி ’பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’
என்று சொன்னான்.
இந்த வருட அதிர்ச்சி
கழிப்பறை இல்லாத வீடு
புத்தம் புதிதாகக் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் வீடு கட்டுகிறவர் அந்த
வீட்டில் கழிப்பறையே வைத்துக் கட்டாமல் அதில் குடியேறினால், அவரை
அதிபுத்திசாலி என்போமா? படுமுட்டாள் என்போமா?
இந்திய அரசாங்கம் கூடங்குளத்தில் அதைத்தான் செய்திருக்கிறது. சுமார் 13
ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து கட்டியிருக்கும் அணு உலையில் வரப் போகும்
அணுக்கழிவுகளை எங்கே வைப்பதென்றே இன்னும் முடிவு செய்யவில்லை என்று
நீதிமன்றத்தின் முன்பு ஒப்புக் கொண்டிருக்கிறது. அணுக்கழிவுகளுக்கான
ஏற்பாடு என்ன என்ன என்று திரும்பத் திரும்ப எதிர்ப்பாளர்களும்
நீதிபதிகளும் கேட்டதையடுத்து இந்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்திருக்கிறது.
கைவிடப்பட்ட கோலார் தங்கச் சுரங்கத்துக்குள் வைக்கப்போவதாக முதலில் செய்தி
வந்தது. கோலார் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதும் அப்படி ஒரு திட்டமே
இல்லை என்று அரசு மறுத்தது. அப்படியானால் எங்கேதான் அணுக் கழிவை வைக்கப்
போகிறீர்கள் என்று நீதிமன்றம் கடைசியாகக் கேட்டதும் இன்னும் எதுவும் முடிவு
செய்யவில்லை என்று அரசு பதில் சொல்கிறது. அடுத்து தற்போது அணுஉலை
கழிவுகளில் 3 சதவீதம் 7 ஆண்டுகளுக்கு கூடன்குளத்திலேயே வைக்கப்படும் என்று
அரசு அறிவித்துள்ளது, 7 ஆண்டுகளுக்கு பின்னர் அணு கழிவுகளை எங்கே எடுத்து
செல்வீர்கள்? என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆபத்தான அணுக் கழிவுகளை எங்கே எப்படி வைப்பது என்றே முடிவெடுக்காமல்
உலையைக் கட்டி முடித்து இயக்குவதற்கு அவசரப்படும் மன்மோகன் அரசையும் அதன்
அணுசக்தித் துறையையும் சுமார் ஒன்றரை வருடங்களாகப் பல முறை எதிர்ப்பாளர்கள்
இது பற்றிக் கேள்வி கேட்டபோதெல்லாம், ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாகவும்
பத்திரமாகவும் இருப்பதாகத் திரும்பத் திரும்பச் சொன்னதெல்லாம் பொய் என்று
இப்போது தெளிவாகிவிட்டது. மன்மோகன் அரசு பொய் சொன்னது மட்டுமல்ல,
கேள்விகள் கேட்டு அமைதியான வழியில் போராடிய ஆயிரக்கணக்கான மக்கள் மீது
நூற்றுக்கணக்கான வழக்குகளை ஜெயலலிதா அரசு போட்டிருக்கிறது. பத்தடி
நடப்பதற்கே தள்ளாடக் கூடிய முதியவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது
செய்திருக்கிறது. அணுக் கழிவை என்ன செய்வது என்று முடிவெடுக்காமலே ஆபத்தான
திட்டத்தை மக்கள் மீது திணிக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மீதெல்லாமல்லவா
குண்டர் சட்டம் நியாயப்படி பாயவேண்டும் ?
கூடங்குளம் அணுக்கழிவை எங்கே வைப்பதென்று இன்னும் தெரியாமலிருக்கும்
அரசு, இதுவரை கல்பாக்கத்திலும் இதர அணு உலைகளிலும் உருவாக்கிய
அணுக்கழிவுகளை எங்கே எப்படி வைத்திருக்கிறது என்ற உண்மைகளை உடனடியாக
மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த வாரக் கேள்வி:
ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்குவதை எதற்காக அரசு விழாவாகக்
கொண்டாடவேண்டும் ? அடுத்து சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பையை அள்ள
துப்புரவாளர்களை நியமித்தால் அத்ற்கொரு விழா கொண்டாடுமா ? கடும் மின்
பற்றாக்குறை இருக்கும் நிலையில் எதற்காக இந்த விழாக்கள்- வீண் செலவுகள் ?
கல்கி 22.12.2012
>>>1,870 வி.ஏ.ஓ.,க்கள் கலந்தாய்வு ஜனவரி 3,4 தேதிகளில் நடக்கிறது
சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில், 1,870
வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில்,
டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது. வி.ஏ.ஓ., காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான போட்டித்தேர்வு, கடந்த செப்டம்பர், 30ல் நடந்தது; 10 லட்சம்
பேர், தேர்வை எழுதினர். இதன் முடிவுகள், நவம்பர், 30ல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 1,870 வி.ஏ.ஓ.,க்களை, பணி நியமனம் செய்வதற்கான
கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு வருபவர்கள், உரிய அசல் சான்றிதழ்களுடன் வர
வேண்டும் என, தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்வு பெற்றவர்களுக்கு,
விரைவு தபால் வழியாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், தேர்வாணையம்
தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 123, கடலூர்-88, கிருஷ்ணகிரி-73, திருவள்ளூர்-100, திருவண்ணாமலை-115, வேலூர்-112, விழுப்புரம்-167 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மாவட்ட வாரியாக, காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களில், காலி பணியிடங்கள் இல்லை. இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களும், பணி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆசிரியர் காலி இடங்களைப்போல், வி.ஏ.ஓ.,க்கள் இடங்களும், வட மாவட்டங்களில் தான், அதிகளவில் காலியாக உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 123, கடலூர்-88, கிருஷ்ணகிரி-73, திருவள்ளூர்-100, திருவண்ணாமலை-115, வேலூர்-112, விழுப்புரம்-167 பணியிடங்கள் காலியாக உள்ளன.
>>>தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப்
பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை
நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். துவக்கப்பள்ளிகளில்,
ஆசிரியர்கள், மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பு போன்ற, நீண்ட கால
விடுப்பில் செல்லும் போது, அப்பணியிடங்களில், வேறு பள்ளிகளிலிருந்து,
மாற்று ஆசிரியர்கள் வந்து, வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், இரு
பள்ளிகளிலும் முழுமையாக வகுப்புகள் நடத்த முடியாமல், மாணவர்களின்
கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. கடந்த, 1997க்கு முன், நீண்ட கால விடுப்பு
பணியிடங்களில் பணியாற்ற, தற்காலிக ஆசிரியர்கள் இருந்தனர். இதனால்,
மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் வகுப்புகள் நடந்தன. தற்போதும்,
அதுபோன்று, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறையை, அரசு மேற்கொள்ள,
துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அரசு பள்ளிகளில் தற்போது,
காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்போதே,
மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டால், விடுமுறை
பணியிடங்களில், வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வசதியாக இருக்கும். இது
குறித்து, பல பள்ளிகளின் மேலாண்மைக் குழுச் சிறப்புக் கூட்டங்களில்,
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
>>>புதிய முதுகலை ஆசிரியர் பணி நியமனம் எப்போது?
"புதிய முதுகலை ஆசிரியர்கள், ஜன., 10க்குள், பணி நியமனம்
செய்யப்படுவர்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சமீபத்தில்
தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும்
ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி,
தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி.,
வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில்
இருந்து, நீக்கப்பட்டுள்ளனர். 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த
பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும்.
இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது. அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்' கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
>>>அரசு தகவல் தொகுப்பு விபர மையத்தில் பதிவு மேற்கொள்ள பணியாளர் நியமனம்
சென்னையில் உள்ள, "டேட்டா சென்டர்' அலுவலகத்தில், "டேட்டா என்ட்ரி
ஆபரேட்டர்' பணியிடங்கள் அதிகளவில் காலியாக இருப்பதால், வேலைவாய்ப்பு அலுவலக
பதிவுமூப்பு அடிப்படையில், 20 பேர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
சென்னை, கோட்டூர்புரத்தில், அரசு தகவல் தொகுப்பு விவர மையம் - டேட்டா
சென்டர், இயங்கி வருகிறது. நிதித்துறையின் கட்டுப்பாட்டில் இந்த மையம்
இருந்தாலும், முழுக்க முழுக்க, கல்வித்துறை தொடர்பான பணிகள் தான் நடந்து
வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் மதிப்பெண்களை,
கம்ப்யூட்டரில் தொகுத்து, தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணி, இந்த
மையத்தில் தான் நடக்கிறது. இந்தப் பணிகளுக்காக, 40, டேட்டா என்ட்ரி
ஆபரேட்டர்கள் பணியிடம் ஒதுக்கியும், தற்போது, ஐந்து பேர் மட்டுமே
பணிபுரிந்து வருகின்றனர். மற்ற நிலைகளிலும், ஏராளமான பணியிடங்கள் காலியாக
உள்ளன. டேட்டா சென்டரின் நிலைமை, நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக, துறை
வட்டாரத்தினர், வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், 20 டேட்டா என்ட்ரி
ஆபரேட்டர் பணியிடங்களை, தற்காலிக அடிப்படையில், பணி நியமனம் செய்து கொள்ள,
அரசு அனுமதி வழங்கியுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில்,
பிளஸ் 2 தேர்ச்சியுடன், தட்டச்சு தகுதி பெற்றவர்களுக்கு, வேலை வாய்ப்பு
வழங்கப்படும்; இவர்களுக்கு, மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்கப்படும் என,
துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Attention Sabarimala Devotees - Devasam Board Notice
சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...