கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க திட்டம்: 50 பேராசிரியர்ளுக்கு நிதியுதவி

அரசு கல்லூரி பேராசிரியர்களிடம், ஆராய்ச்சி திறனை வளர்க்கும் வகையில், "சிறிய ஆய்வு திட்டத்தை" அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மூலம், 50 பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆய்வுக்கு, 1 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள, அரசு கல்லூரி பேராசிரியர்கள், புதிய ஆய்வுகளை மேற்கொண்டு, கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர, சிறிய ஆய்வு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில், சேர விரும்பும் ஆசிரியர்கள் குறித்து, தகவல்களை அனுப்ப, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதில், பேராசிரியர்கள் மேற்கொள்ளும் ஆய்வு தலைப்பு மற்றும் விவரங்கள், ஆய்வினால் சமுதாயத்திற்கு ஏற்படும் பயன் உள்ளிட்ட, தகவல்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களின், எம்.பில்.,-பி.எச்டி., படிப்பின் ஆய்வு தலைப்புகளை, இத்திட்டத்தில் பயன்படுத்த கூடாது. ஒரு ஆண்டிற்குள் ஆய்வை முடிக்க வேண்டும். ஆய்வுக்காக, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
முடிக்காத நிலையில், ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படும். அதிலும் முடிக்கவில்லையெனில், சம்பளத்தில் இருந்து, ஆய்வு தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும், கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அரசு கல்லூரி பேராசிரியர், தங்கள் ஆய்வு தகவல்களை அனுப்பி வருகின்றனர். இதுவரை, 100க்கும் மேற்பட்ட, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மூவர் குழு இந்த விண்ணப்பங்களிலிருந்து, சிறந்த ஆய்வு தலைப்பை தேர்ந்தெடுக்க, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, இத்தலைப்பில் ஆய்வுகள் வந்துள்ளதா, ஆய்வு மக்களுக்கு உதவுமா உள்ளிட்டவை குறித்து, ஆராய்ந்து தேர்ந்தெடுக்கிறது.இதுகுறித்து, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணை தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:
அரசு கல்லூரி ஆசிரியர்களிடம், ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு கல்லூரிகளின் கல்வி, ஆராய்ச்சி தரம் உயரும்; தனியார், அரசு உதவி பெறும் கல்லூரிகளை போல, அரசு கல்லூரிகளும் மேம்படும். இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.

>>>ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன்: அப்துல் கலாம்

"மனித சமுதாயம், மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
ராமநாதபுரத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் பேசியதாவது: நான் விளக்காக இருப்பேன், படகாக இருப்பேன், ஏணியாக இருப்பேன், அடுத்தவர் துன்பத்தை துடைப்பதின் மூலம் மனநிறைவோடு வாழலாம்.
மகாத்மா காந்திக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, அவரது தாயார், "மகனே, உன் வாழ்வில் அடுத்தவரின் துன்பத்தை துடைத்து, அவரது வாழ்வில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், நீ மனிதனாக பிறந்ததற்கான பலனை அடைந்து விடுவாய்" என்றார்.
எனவே, அந்த அறிவுரையை பின்பற்றி, நீங்கள் அடுத்தவர் துன்பப்படும் வேளையில், அவர்களது துன்பங்களை துடைத்து, துணையாக இருக்க வேண்டும். உலகில் யாராக இருந்தாலும் சாதிக்க முடியும், அதற்கு நான்கு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி இவைகள் இருந்தால் சாதனை எளிது, என்றார்.
அணு மின்சாரத்தை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என, கலாமிடம் சிலர் கேட்டதற்கு, அவர், "நீர் மின்சாரம், அணு மின்சாரம் தூய்மையானது, மற்றவை சுற்றுசூழலை பாதிக்கக்கூடியது. இதனால், அணுமின்சாரத்தை வரவேற்கிறேன்,&'&' என்றார். 
மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தால் ஏற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இல்லை, நான் ஆசிரியராக இருப்பதையே விரும்புகிறேன், இதுதான் எனக்கு மனநிறைவை தருகிறது என்றார்.
எல்லையில் ராணுவ வீரர்கள் தலையை வெட்டி எடுத்த சென்ற சம்பவம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, மனித சமுதாயம் மனித சமுதாயமாக நடந்து கொள்ள வேண்டும், என்று கலாம் தெரிவித்தார்.

>>>மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்கும் விண்ணப்பம்: ஐகோர்ட் உத்தரவு

"மருத்துவப் படிப்புக்கான இடங்களை, 150 ஆக அதிகரிக்க, அனுமதி கோரி, தனியார் கல்லூரி அளித்த விண்ணப்பத்தை, எட்டு வாரங்களில் பரிசீலித்து, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, குரோம்பேட்டையில், பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான இடங்களை, 100ல் இருந்து, 150 ஆக, உயர்த்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என, விண்ணப்பித்தது. மாநில அரசு ஆய்வு செய்து, அத்தியாவசிய சான்றிதழை, 2007ம் ஆண்டு வழங்கியது.
ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த மறுத்து விட்டது. சில குறைபாடுகளை, இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக் காட்டியது. அவற்றை நிவர்த்தி செய்து, கல்லூரி தரப்பில் மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநில அரசிடம் இருந்து, புதிதாக அத்யாவசிய சான்றிதழை பெற வேண்டும் என, கவுன்சில் வலியுறுத்தியது. அதை எதிர்த்து, ஐகோர்ட்டில், பாலாஜி மருத்துவக் கல்லூரி சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு, அக்டோபரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், அப்பீல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கல்லூரி சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார்.
மனுவை விசாரித்த, தற்காலிக தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் அடங்கிய, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ கவுன்சிலின் கடமைகள், பணிகளை ஆற்ற, அந்த கவுன்சிலின் இயக்குனர்கள் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், சட்டத்தில் புதிய பிரிவுகளை கொண்டு வர, எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை.
அத்தியாவசிய சான்றிதழ், எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும் என, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் மற்றும் விதிமுறைகளில், வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, புதிதாக அத்தியாவசிய சான்றிதழ் வேண்டும் என, வலியுறுத்தாமல், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தக் கோரிய விண்ணப்பத்தை, தகுதி அடிப்படையில், எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

>>>172 கல்வி நிறுவனங்கள் கதி என்ன ஆகும்?

சென்னை பெருநகரப் பகுதியில், விதிமீறல் கட்டடங்களோடு செயல்படுவதாகக் கருதப்படும், 172 கல்வி நிறுவனங்களுக்கு சி.எம்.டி.ஏ., அனுப்பிய நோட்டீஸ்கள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள அடுக்கு மாடி கட்டடங்கள் அனைத்தும், சி.எம்.டி.ஏ.,விடம், முறையான அனுமதி பெற்றுள்ளனவா என்பதற்கான ஆவணங்கள் நிறைவு பெற்றதாக தெரியவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள, தனியார் கல்வி நிறுவன வளாகங்களை ஆய்வு செய்ததில், ஏறத்தாழ, 500 கல்லூரிகளில் விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விதிமீறல்களின் பரப்பளவு, 75 லட்சம் சதுர அடியைத் தாண்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. நடவடிக்கைஇது தவிர, தமிழகம் முழுவதும், ஏறத்தாழ, 300 தனியார் பள்ளி வளாகங்களிலும், அனுமதியின்றி அடுக்கு மாடி கட்டடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி, 2007ம் ஆண்டுக்கு பின், கட்டப்பட்ட கட்டடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில், 500 கல்லூரிகளுக்கும், 200 பள்ளிகளுக்கும் நகரமைப்புத் துறை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில், ஓரளவுக்கு விதிமீறல் உள்ள கட்டடங்களை வரன்முறை செய்வது குறித்தும், அரசு தரப்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை பெருநகரப் பகுதிகளில் உள்ள, கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள, விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் முடிவு செய்தனர். முதல் கட்டமாக, 65 கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதன் பின், மேலும் பல கல்வி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 172 நிறுவனங்கள் இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பெருநகர் பகுதியில், 62 பொறியியல் கல்லூரிகள், 46 கலை, அறிவியல் கல்லூரிகள், 41 பாலிடெக்னிக் கல்லூரிகள், 23 கல்வியியல் கல்லூரிகள் என, மொத்தம் 172 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டன. நகரமைப்பு சட்டப் பிரிவுகள், 56, 57ன் கீழ், விளக்கம் மற்றும் திட்ட அனுமதி பெற்றதற்கான ஆவணங்களை, 15 நாட்களுக்குள் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு அனுப்ப வேண்டும் என, இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. பதில் இல்லை இதற்கு, இதுவரை, 30 சதவீதத்துக்கும் குறைவான நிறுவனங்களே பதில் அளித்துள்ளன. இந்த பதில்கள் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். பதில் அளிக்காத நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள விதிமீறல் கட்டடங்களை இடிப்பதற்கான உத்தரவுகளை தனித்தனியாக பிறப்பிக்க, நகரமைப்பு சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த நிறுவனங்கள் மீது எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

>>>64 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

மாநிலம் முழுவதும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான, போலியோ சொட்டு மருந்து வழங்கும், சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 64 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. சென்னை உட்பட, தமிழகம் முழுவதும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான, போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம், நேற்று நடந்தது. இந்த முகாமில், ஐந்து வயதிற்குட்பட்ட, 70 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட இடங்களில், 40 ஆயிரம் சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக, முக்கிய பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்களில், 1,013 நகரும் மையங்களும்; தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத, பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக, 771 நடமாடும் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன. நேற்று காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடந்த முகாமில், மாநிலம் முழுவதும், 64 லட்சம் குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கடந்தாண்டு, 68 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, வீடு களுக்கே சென்று, சொட்டு மருந்து வழங்கப்படும்; இரண்டாவது தவணை போலியோ சொட்டு மருந்து, பிப்., 24ம் தேதி, வழங்கப்படும் என்றும், சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

>>>124 மாணவர்களை பேருந்தில் ஏற்றி வந்த தனியார் பள்ளிக்கு அபராதம்

பழநியில் 124 மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பள்ளி பேருந்தை பறிமுதல் செய்து,  போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று மாலை 5.40 மணிக்கு இடும்பன்கோயில் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த, பள்ளி பேருந்தில் ஏராளமான மாணவர்கள் இருப்பதை கண்டு நிறுத்தினர்.
சோதனையில் 60 மாணவர்கள் ஏற்ற வேண்டிய பேருந்தில், இரு மடங்காக 124 மாணவர்களை ஏற்றி வந்தது தெரிந்தது. பள்ளி பேருந்து மூலமே மாணவர்களை, போக்குவரத்து போலீசார் பாதுகாப்புடன் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பேருந்தை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினர்.
ஓட்டுனர் முத்தையாவை எச்சரிக்கை செய்து, ரூ. 2500 அபராதம் விதித்தனர். மீண்டும் இதுபோல் நடந்ததால் பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் கண்ணன் எச்சரித்தார்.

>>>ஜனவரி 21 [January 21]....

நிகழ்வுகள்

  • 1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.
  • 1793 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.
  • 1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.
  • 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
  • 1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.
  • 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
  • 1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
  • 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
  • 2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.
  • 2008 - அலாஸ்காவின் இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.

பிறப்புகள்

  • 1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)
  • 1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.

இறப்புகள்

  • 1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...