கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஜனவரி 31 [January 31]....

நிகழ்வுகள்

  • 1606 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
  • 1747 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
  • 1876 - அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
  • 1915 - முதலாம் உலகப் போர்; ஜெர்மனி ரஷ்யாவுக்கெதிராக நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.
  • 1928 - லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.
  • 1937 - சோவியத் ஒன்றியத்தில் 31 த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் ஜப்பான் வசமிருந்த மார்ஷல் தீவுகளில் தரையிறங்கினார்கள்.
  • 1946 - யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாடு பொசுனியா எர்செகோவினா, குரொவேஷியா, மக்கெடோனியா, மொண்டெனேகுரோ, சேர்பியா மற்றும் சிலவேனியா என ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
  • 1953 - வட கடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1958 - ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
  • 1968 - வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் சாய்கொன் நகரில் அமெரிக்க தூதராலயத்தைத் தாக்கினர்.
  • 1968 - நவூறு (Nauru) ஆஸ்திரேலியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1980 - குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1990 - சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மாக்டொனால்ட் உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
  • 1996 - கொழும்பு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
  • 2003 - ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1762 - லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
  • 1797 - பிராண்ஸ் சூபேர்ட், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1828)
  • 1881 - ஏர்விங் லாங்முயர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1957)
  • 1902 - ஆல்வா மீர்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1986)
  • 1929 - ருடொல்ஃப் மொஸ்பாவர், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர்.
  • 1935 - கென்சாபுரோ ஓயீ, நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர்

இறப்புகள்

  • 1933 - ஜோன் கல்ஸ்வோதி, நோபல் பரிசு பெற்ற ஆங்கில எழுத்தாளர் (பி. 1867)
  • 1955 - ஜோன் மொட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
  • 1973 - ராக்னர் ஆண்டன் ஃபிரீஷ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1895)
  • 1987 - எம். பக்தவத்சலம், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1897)
  • 2009 -- நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)

சிறப்பு நாள்

  • நவூறு - விடுதலை நாள் (1968)

>>>சூரிய ஒளி மின்சாரம்....

 
வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும்.
உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவனமே மானியத்தை வாங்கிக் கொள்ளும். அதாவது நீங்கள் 1.1 லட்சத்திற்கு செக் கொடுத்தால் போதும், மற்றபடி மானிய அப்ளிகேசன் பார்மில் கையெழுத்துப் போட்டால், மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எடுத்துக்காட்டாக, டிரைவிங் ஸ்கூலில் சென்று மொத்தமாகப் பணம் கொடுத்தால், அவர்களே எல்லா அப்ளிகேசனையும் நிரப்பிக் கொடுப்பார்கள். நீங்கள் கையெழுத்து மட்டும் போட்டால் போதும். ஆர்.டீ.ஓ. ஆபிசில் யாரையும் பார்த்து நேரடியாக தனித்தனியாக லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. டிரைவிங் லைசன்ஸ் கிடைத்துவிடும். அது போல, சோலாரிலும் மானியம் பற்றிய விவரங்களை உங்களுக்கு விற்பவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

இந்த மானியத் தொகையை மத்திய அரசு கொடுக்கிறது. இது 100 ரூபாய் சிஸ்டத்திற்கு 50 ரூபாய் வரை கிடைக்கும். மானியம் வாங்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதால் இது சுமார் 45 ரூபாயாக மாறும். என்னைக் கேட்டால், இந்த விசயங்களில் நாம் 5 ரூபாய்க்காக தலையைப் பிய்த்துக் கொள்ளாமல் , போனால் போகட்டும் என்று ‘அவுட்சோர்ஸ்' செய்வதுதான் நல்லது.

நியாயமாகப் பார்த்தால், வீட்டிற்கு சோலார் செல் வாங்க, இந்த 1.1 லட்சம் கூட உங்கள் கையில் இருக்க வேண்டியதில்லை. மத்திய அரசின் திட்டப்படி, வங்கிகள் குறைந்த வட்டி (7.5%) கடன் கொடுக்கும். ஆனால், தமிழ்நாட்டில் இது எப்படி வாங்குவது , எந்த வங்கியில் சுலபமாகக் கிடைக்கும் என்ற விவரம் என் நண்பருக்கு தெரியவில்லை. ”மகாராஷ்டிராவில் இதையும் நானே கவனித்துக் கொள்வேன், தமிழகத்தில் சொல்ல முடியாது” என்று சொன்னார். அதனால் இப்போதைக்கு இந்த 1.1 லட்சத்தை உங்கள் கையில் இருந்துதான் போடவேண்டும் அல்லது நீங்களே அலைந்து லோன் வாங்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

வீட்டில் சோலார் செல் மின்சாரம் பயன்படுத்துவதில் இன்னொரு விசயம் இருக்கிறது.. ஏ.சி. மற்றும் வாசிங் மெசின், வாட்டர் ஹீட்டர் மற்றும் போர்வெல் பம்பு, இவை நான்கும் சுவிட்சு பட்டதும் ஆரம்பத்தில் அதிக கரண்டு இழுக்கும். இவற்றை சமாளிக்க இந்த 1 கிலோவாட் சிஸ்டம் பத்தாது.

”எனக்கு எல்லாமே சோலாரில் ஓட வேண்டும்” என்றால் என்ன செய்வது?

இதற்கு குறைந்த பட்சம் 2 கிலோ வாட் சிஸ்டமாவது வேண்டும். இது தவிர, ‘சாஃப்ட் ஸ்டார்ட்” (Soft start) அல்லது ”மெதுவாக தொடங்கும்” சாதனம் தேவைப்படும். இதனால் விலை கொஞ்சம் அதிகமாகும். இதை வைத்து ஏசி, வாசிங் மெசின், வீட்டிற்கு போர்வெல் பம்பு ஓட்டலாம்.

வாட்டர் ஹீட்டருக்கு, நேரடியாக சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதுதான் நல்லது. அது சுமார் ரூபாய் 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ஆகலாம். சோலார் செல்லில் மின்சாரம் எடுத்து, பேட்டரியில் சேர்த்து, அப்புறம் சாப்ட் ஸ்டார்டர் வைத்து எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவது “ரொம்ப ஓவர்” என்று நண்பர் சொன்னார்!

”மொத்தத்தில் நீங்கள் ரெகமண்ட் செய்வது என்ன” என்று கேட்டால், “வீட்டில் இருக்கும் விளக்குகள், மின் விசிறி , ஃப்ரிஜ், கம்ப்யூட்டர், டி.வி. , மிக்சி இதை எல்லாம் சோலாரில் ஓட்டுங்கள். ஏசி, வாசிங் மெசின் இதை எல்லாம் அரசு மின் இணைப்பில் ஓட்டுங்கள், அதுதான் சுலபம், எகனாமிகல்”.

”நாலு நாள் மேக மூட்டமாக இருந்தால் சோலார் கரண்டு வராதே, என்ன செய்வது?”

”உங்கள் வீட்டில் அரசு மின் இணைப்பு இருக்கட்டும், துண்டிக்க வேண்டாம். சோலார் மின்சாரம் இல்லாவிட்டால், தானாகவே (automatic) அரசு மின் இணைப்பு மூலம் மின்சாரம் வரும் வகையில் இணைப்பை கொடுக்கலாம். ”

அதாவது, பேட்டரியில் சார்ஜ் இருக்கும் வரை அரசு மின்சார மீட்டர் ஓடாது. பேட்டரி தீர்ந்து விட்டால், மீட்டர் ஓடும். மறுபடி பேட்டரி சார்ஜ் ஆனால், அரசு மீட்டர் ஓடாது என்ற வகையில் இருக்கும்.

இந்த பேட்டரிகள், ‘லோ மெயிண்டெனன்ஸ் ” (Low Maintenance) என்ற வகையைச் சார்ந்தவை. வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் செலவில் “AMC" (Annual Maintenance Contract) போட்டால், கம்பெனி ஆள் 6 மாதத்திற்கு ஒரு முறை வந்து இவற்றை கிளீன் செய்து செல்வார். இந்த பேட்டரியில் தண்ணீர் அல்லது ஆசிட் சேர்க்க வேண்டிய தேவை இருக்காது.

வியாபாரத்திற்கு: இதையே உங்கள் கடைக்கு சோலார் செல் மின்சாரம் வேண்டும் என்றால், மானியம் வீட்டுக்கு கிடைப்பது போலவே கிடக்கும். ஆனால் கடன் மட்டும் இவ்வளவு குறைந்த வட்டியில் கிடையாது. கமர்சியல் ரேட்டில்தான் கிடைக்கும்.

>>>ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா? - ஓ பக்கங்கள்-ஞாநி

மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்றமுடியுமா? காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப் படவேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதை விட சிறந்த மாற்றாக எதையும்  பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலில் இதர கட்சிகளில் எது பரவாயில்லை என்று பார்க்கும் சூழலே இருக்கிறது.
எண்பதுகளிலிருந்து வலிமை பெறத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சி அடிப்படையிலேயே ஆபத்தான கட்சி என்பது என் தீர்மானமான கருத்து. அதுவும் அதை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் பல்வேறு அவதாரங்களும் எவ்வளவு சாமர்த்தியமாக தங்கள் அசல் முகத்தை மறைக்க விதவிதமான முகமூடிகளை பயன்படுத்தினாலும், என் போன்றோருக்கு அதன் அசல் முகம் நன்றாகவே தெரியும்.
பாரதீய ஜனதா கட்சி அரசியலில் நிலை பெறுவதற்கு முன்னால் நம் சமூகத்தில் அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் இதர வழிபாட்டு முறைகளின் தொகுப்பாக சொல்லபடும் ஹிந்து மதத்தினருக்கும் இடையே கடும் உரசல்கள் இருக்கவில்லை. குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய இணக்கமே எல்லா மதத்தினரிடையிலும் இருந்து வந்தது. பாரதிய ஜனதாவின் வருகைக்குப் பின், அதன் தீவிர ஆயுதங்களான இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரீஷத் போன்றவை தீவிரமாக இங்கே இயங்கத்தொடங்கியபின்னர்தான், முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளும் உருவாகத் தொடங்கின. அன்றாட வாழ்க்கையிலேயே குறிப்பிட்ட மதத்தினரை சில பகுதிகளிலேயே குறுக்கி வாழ வைக்கும் கெட்டொவைசேஷன் என்ப்படும் சேரிப்படுத்தலும், முத்திரை குத்தலும் பலமாகி வருகிறது.
எனவே காங்கிரசுக்கு மாற்றாக பாரதிய ஜனதா வளர்வதை விரும்பவே மாட்டேன். சில வருடங்கள் முன்பு வி.பி.சிங் சொன்னதைப் போல டெல்லி அரசியலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மத சார்பற்ற அணிகளாக இருப்பது அவசியம்.
இன்றைய நிலையில் காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகள், ஊழல்கள், ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து எடுக்கும் தவறான நிலைகள் எதுவும் எனக்கு உடன்பாடானவையல்லதான்.
ஆனால் பாரதீய ஜனதா இதில் காங்கிரசிலிருந்து வேறுபட்டதே அல்ல. ஆட்சிக்கு வந்தால் அதன் அமைச்சர்களும் பெரும் ஊழல் செய்பவர்கள், சுரங்கத் தொழிலதிபர்களின் தயவில் கட்சி நடக்கும் என்பதெல்லாம் அம்பலமாகிவிட்டது. மத்தியில் பிஜேபி ஆட்சி அமைத்தால் அதன் வெளியுறவுக் கொள்கையும் ராஜபக்‌ஷேவை எதற்கும் நிர்ப்பந்தப்படுத்தாத ஒன்றாகத்தான் இருக்கும். தொண்ணூறுகளிலிருந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும் பொருளாதார தாராளமயக் கொள்கை மோடியின் குஜராத் உட்பட பிஜேபி ஆட்சிகளில் எங்கேயும்  மாற்றியமைக்கப்படவில்லை. அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறது.
காங்கிரசுக்கு மாற்றாக பிஜேபிக்கு பதில் உண்மையில் உருவாகவேண்டிய மூன்றாவது அணி என்பது பல்வேறு மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பான ஓர் அணிதான். (காங்கிரசும் பிஜேபியும் கூட கள செல்வாக்கைப் பொறுத்தமட்டில் வட்டாரக் கட்சிகள் போலத்தான் இருக்கின்றன. அனைத்திந்தியாவிலும் தெரியப்படுத்தப்பட்ட பிம்பம் உள்ள தலைவர்கள் இவற்றில் இருப்பதால் அவை பெரிய கட்சிகள் போல தோற்றமளிக்கின்றன.)
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மொழி வாரி தேசிய இனத்தின் பிரதிநிதியான மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் இந்தியாவை நிஜமான கூட்டாட்சி முறையை நோக்கியோ அமெரிக்க பாணி பெடரலிசம் நோக்கியோ அழைத்துச் செல்லவும் முடியும்.
ஆனால் இன்று இருக்கும் முக்கியமான மாநிலக் கட்சிகள் எதுவும் அதற்கான தகுதியுடன் இல்லை. தி.,மு.க, அ.இ.அ.தி.மு.க, தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் எல்லாமே ஊழல், அராஜக சரித்திரம் உடைய கட்சிகளாகவே இருக்கின்றன. மம்தாவின் திரிணமூல் இன்னும் ஊழல் கட்சியாக அறியப்படவில்லை என்றாலும் அதன் தலைவரின் சர்வாதிகார மனப்பான்மை சரியான திசையில் செல்ல உகந்ததே அல்ல.
ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது இருக்கும் மோசமான மாநிலக் கட்சிக்கு மாற்றாக இன்னொரு சரியான மாநிலக் கட்சி உருவாகவேண்டியிருக்கிறது. அப்படி உருவானால்தான் இந்திய அரசியல் சரியான கூட்டாட்சியை நோக்கி செல்வதில் அர்த்தம் இருக்க முடியும்.
இப்படிப்பட்ட அரசியல் சூழலில் பிஜேபி போன்ற மதவாத சக்திகளைத் தடுக்க காங்கிரஸ் தேவைப்படுகிறது. ஆனால் அது பலவீனமாக இருக்கிறது. அதை வலுப்படுத்த கட்சியின் பொறுப்பேற்கவரும் ராகுல் காந்தி என்ன செய்ய முடியும்? என்ன செய்யக் கூடும் ?
ராகுலைப் பற்றிய முக்கியமான விமர்சனம் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலின் இன்னொரு பிரதிநிதி அவர் என்பதாகும். இங்கே நாம் ஜவஹர்லால் நேரு, கருணாநிதியைப் போல வாரிசு அரசியலை ஊக்குவித்தவர் அல்ல என்பதை கவனித்தாகவேண்டும். அவருக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரிதான் பிரதமரானார். இந்திராவை நேரு கொண்டு வரவில்லை. இந்திரா காலத்தில் நெருக்கடி நிலையின்போது அவரால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட சஞ்சய் காந்தி இந்திரா, நேருவின் மதச் சார்பற்ற அரசியல் மனநிலையில் வந்தவர் அல்ல. அவருக்கு நெருக்கடி நிலையின்போது முஸ்லிம்களுக்கு எதிரான  அராஜகங்களைச் செய்ய உதவியாக இருந்தவர் ஜக்மோகன். பின்னாளில் பிஜேபியின் கண்மணிகளில் ஒருவரானார். சஞ்சயின் குடும்பமே மேனகா, வருண் இருவரும் – இன்று பிஜேபியில்தான் இருக்கிறது. திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் இந்திராவின் குடும்பத்தில் ஊடுருவினார்கள் என்றே சந்தேகிக்கலாம்.
ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் நுழைந்தவர்தான். அவர் கொல்லப்பட்ட பிறகு, சோனியாவும் உடனடியாக தீவிர அரசியலுக்கு வரவில்லை. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் காங்கிரசுக்குப் பெரும் களங்கம் கற்பிக்கக்கூடிய இரு பெரும் நிகழ்வுகள் நடந்தன. ஆர்.எஸ்.எஸ்சும் பிஜேபியும் நடத்திய பாபர் மசூதி இடிப்பு நரசிம்மராவின் ஒத்துழைப்பால் தான் சாத்தியமாயிற்று. ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சிபு சோரன் உள்ளிட்ட சில எம்.பிகளுக்கு நரசிம்மராவ் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டது நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு, சிபு சோரன் தண்டனையையும்  அனுபவித்தார்.
நேரு, இந்திரா, ராஜீவ் காலங்களில் ஒருபோதும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததில்லை. ராகுல் காந்தியும் அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் அம்மாவுக்கு உதவுவதற்காக வந்தவர்தான். சோனியாவும் ராகுலும் அரசுப் பதவிகளில் அமர்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருந்தபோதும் இதுவரை அவற்றை தவிர்த்தே வந்திருக்கிறார்கள். எனவே வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முற்றிலுமாகப் பொருந்தாது.
இரண்டாவதாக ராகுல் மீது சொல்லப்படும் விமர்சனம் இதுவரை அவர் காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்து பெரும் பலத்தை எங்கேயும் ஏற்படுத்த முடியவில்லை என்பதாகும். இது முற்றிலும் சரியல்ல. உத்தரப் பிரதேசத்தில் 2009 எம்.பி.தேர்தலின் போது 21 எம்.பி. இடங்களைப் பெற அவர் பிரசாரம் உதவியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் உதவவில்லை. சட்டமன்ற தேர்தல்களைப் பொறுத்த மட்டில் மக்கள் ஆதரவைப் பெற கட்சிகளுக்கு உள்ளூரில் ஒரு செல்வாக்கான கவர்ச்சியான தலைவரும் தேவை. காங்கிரசுக்கு அது உ.பி.யிலும் இல்லை. குஜராத்திலும் இல்லை. உ.பியில் ராகுல்தான் முதல்வர் பதவிக்கான வேட்பாளர் என்று கூறப்பட்டிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.
இப்போது ராகுல் செய்யவேண்டியது என்ன?
மன்மோகன் சிங்கின் அமெரிக்க சார்புப் பொருளாதாரக் கொள்கைகள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. காங்கிரஸ் இந்தக் கொள்கைகளில் சிவற்றையேனும் கைவிட்டு, மீண்டும் தன் சோஷலிசக் கொள்கைகள் சிலவற்றை மீட்டெடுத்துக் கொண்டு வந்தாலொழிய சாதாரண மக்களின் ஆதரவு பெருகும் வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான கட்சிக் கிளையை உருவாக்க ஏற்ற மாநிலத் தலைவர்கள் இல்லை. சிலரையேனும் பழைய காமராஜ் திட்டம் போல டெல்லி பதவிகளிலிருந்து அனுப்பிவைத்தாக வேண்டும். வலுவான மாநிலத் தலைமைகளை இந்திரா ஒழித்தார். அதுதான் இன்று வரை காங்கிரசின் மிகப் பெரிய பல்வீனமாக இருக்கிறது. இதை ராகுல் திருத்த வேண்டும்.
படித்த நகர்ப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் படிப்பும் வேலையுமில்லாத கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் இன்று மிகப் பெரியது. இவர்களுக்கான சமூக, அரசியல் திட்டம் எதுவும் எந்தப் பெரிய கட்சியிடமும் இல்லை. ஆனால் ராகுல் போன்ற இளம் அரசியல்வாதிகள் இதைத்தான் கவனிக்க வேண்டும்.
ராகுலால் இதையெல்லாம் செய்யமுடியுமா?
இதுவரை அவர் செய்து வந்திருப்பதில் எனக்கு முக்கியமாகப்படுவது ஓரிரு அம்சங்கள்தான். என் குடும்பப் பின்னணியால் நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்படி பின்னணி ஏதும் இல்லாதவர்கள் வருவதற்கு ஒரு சிஸ்டம் வேண்டும், அதை உருவாக்க விரும்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் ராகுல். அதன்படி இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களை சேர்த்து முறையான வெளிப்படையான உட்கட்சித் தேர்தல் நடத்தி வருவது நல்ல அம்சம். இது வேறு எந்தக் கட்சியிலும் நடைமுறையில் இல்லை. இதை தாய்க் கட்சிக்கும் ராகுல் விரிவுபடுத்த வேண்டும்.
இளைஞர் காங்கிரசுக்கென்று, அரசியலில் இல்லாத படித்த இளைஞர்களின் திங்க் டேங்க் ஒன்றை ராகுல் வைத்திருக்கிறார்.இவர்களின் கள ஆய்வுகளின் உதவியில்தான் விவசாய விளை நிலங்களை வாங்குவது பற்றிய சட்ட வரைவை ராகுலால் தயாரிக்க முடிந்தது. இது இன்னொரு முக்கிய அணுகுமுறை.
தங்கள் கருத்துக்கும் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானவர்களுடன் உரையாடல் நடத்த முன்வருவது இன்றைய முக்கியமான அரசியல் தேவையாகும். இதை மூத்த அரசியல்வாதிகளிட்ம எதிர்பார்க்கமுடியாது. ஆனால் இளைஞர்கள் பொதுவாக திறந்த மனதுடன் பிரச்சினைகளை அணுகுகிறார்கள். அவர்கள் அரசியலில் நுழையும்போது இது சாத்தியப்படும். அவர்களிலும் கூட உணர்ச்சிவசப்பட்டு உணர்ச்சியை தூண்டி அரசியல் நடத்துவோருக்கு இது சாத்தியமில்லை. ராகுல் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகத் தெரியவில்லை என்பது நல்ல அம்சம்.
எனினும் துணைத் தலைவர் பதவி ஏற்புரையின் போது இந்திராவின் காவலர்களுடன் தனக்கு இருந்த உறவை அவர் சொன்னது நெகிழ்ச்சியானது. தனக்கு பாட் மிண்ட்டன் சொல்லிக் கொடுத்து தன்னுடன் விளையாடி வந்தவர்கள் இந்திராவைக் கொலை செய்தது தன்னை மிக கடுமையாக பாதித்தது என்றார் ராகுல். பேரனுடம் அன்பாக விளையாடியவர்களைப் பாட்டியைக் கொல்பவர்களாக ஆக்கிய அரசியல் என்ன, அந்த அரசியலில் யார் யார் என்னென தப்பு செய்தார்கள் என்றெல்லாம் அடுத்து ராகுல் யோசிக்க முடியுமானால், அவரால் இந்திய அரசியலை ஒரேயடியாக மாற்ற முடியாவிட்டாலும் கொஞ்சம் ஆரோக்கியமான சலனங்களையாவது ஏற்படுத்த முடியும்.
“அதிகாரம் என்பது விஷம்.” என்று அவருக்கு அம்மா சோனியா சொன்னதாகச் சொல்லும் ராகுலுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், அந்த விஷத்துக்கான முறிவு அன்புதான். நம் அரசியலில் அன்புக்கு இடமில்லாமல் இருப்பதால்தான் அதிகாரம் என்பது விஷமாக இருக்கிறது. மக்கள் மீது அன்பு இல்லாத அரசியல் மக்களுக்கே விஷம்தான்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூக்கு மேடையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் தண்டனையைக் குறைக்கும்படி ராகுலால் சொல்ல முடிந்தால், அது அன்பு சார்ந்த ஆரோக்கியமான அரசியலுக்கான ஒரு முதல்படியாக இருக்கும்.
கல்கி 26.1.2013

>>>மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

 
இன்று - ஜன.30 : காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டிய பகிர்வு:

* மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1869-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் என்ற நகரில் பிறந்தார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக லண்டன் சென்றார். 1893-ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய சட்ட நிறுவனம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்தது. அங்கே குடியேறி இருந்த இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளைக் கண்டார். அவர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்த 20 ஆண்டுகளில், இந்தியர் மற்றும் பிற இனத்தவர்களின் உரிமைகளுக்காகப் போராடிப் பலமுறை சிறைக்குச் சென்றார்.

* 1914-ஆம் ஆண்டுக்குப் பிறகு தாயகம் திரும்பிய காந்திஜி, சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். தேசத் விரோதக் குற்றச்சாட்டில் அப்பாவி இந்தியர்களைக் கைது செய்ய வழிவகை செய்த, பிரிட்டிஷாரின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சை முறையில் போராட்டத்தைத் துவக்கினார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல இந்தியத் தலைவர்களின் வழிகாட்டியாக மாறினார்.

* காந்தி வாழ்ந்த 28,835 நாட்களில் 2,338 நாட்கள் சிறையில் கழித்தார். 28 முறை உண்ணாவிரதம் இருந்தார். நடப்பதில் ஆர்வம்கொண்டவர். 'உடற்பயிற்சிகளின் இளவரசன் நடைபயிற்சி’ என்று சொல்வார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே நீண்ட தூரம் நடப்பது காந்திக்கு மிகவும் பிடிக்கும். லண்டனில் சட்டம் படித்துக்கொண்டு இருந்தபோது தினமும் 10 மைல்கள் வரை நடப்பார். 1930-ம் ஆண்டு சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி நோக்கி தனது 60-வது வயதில் யாத்திரை மேற்கொண்டு 241 மைல் தூரத்தை நடந்தே கடந்தார்.

* ஒரு முறை ரயிலில் ஏறும்போது ஒரு கால் செருப்பு கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்துவிட்டது. அடுத்த கணமே தன் மற்றொரு கால் செருப்பையும் கழற்றிப் போட்டுவிட்டார். ஒரு கால் செருப்பை மட்டும் கண்டெடுப்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதால், மற்றொரு கால் செருப்பையும் அப்படிக் கழற்றிப் போட்டார்.

* காலம் தவறாமையைக் கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காகத் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டு இருப்பார். படுகொலை செய்யப்பட்ட 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி காந்திஜி சற்று மனவேதனையுடன் இருந்தார். ஏன் என்று கேட்டபோது, 'அன்றைய இறைவணக்கத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாகப் போனதற்காக வருந்துகிறேன்’ என்றார்.

* குஜராத்தியில் 'ஹரிஜன்’, ஆங்கிலத்தில் 'யங் இண்டியா’, குஜராத்தி மற்றும் இந்தியில் 'நவஜீவன்’ ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஆங்கிலத்திலும் இந்தியிலும் 'இண்டியன் ஒப்பீனியன்’ என்ற நாளிதழை நடத்தினார்.

* 1915-ம் ஆண்டு சாந்தி நிகேதனுக்குச் சென்ற காந்தி, கவிஞர் ரவீந்திரநாத் தாகூரைப் பார்த்து 'நமஸ்தே குருதேவ்’ என்று வணங்கினார். உடனே தாகூர், ''நான் குருதேவ் என்றால், நீங்கள் மகாத்மா'' என்று சொல்லி வணங்கினார். இதுவே, மகாத்மா என்ற அடைமொழி அமையக் காரணமான நிகழ்ச்சி.

* 1921-ம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பு வரை முழு உடையுடன் காட்சி அளித்த தேசத் தந்தை தனது தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தில் ஏழை விவசாயிகள் பெரும்பாலானோர் இடுப்பில் துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அதுவே அவரது எளிமையான ஆடை மாற்றத்துக்குக் காரணம் ஆனது.

* இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தை காந்திஜி கொண்டாடவில்லை. மாறாக, வகுப்புவாதக் கலவரங்களினால் மனம் நொந்து காணப்பட்டார். நோபல் அமைதி விருதுக்கு 1948-ம் ஆண்டு காந்திஜி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டார். நோபல் பரிசுக் குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப்போவது இல்லை என்று அறிவித்தது.

* காந்திஜிக்கு, உலகில் 120-க்கும் மேற்பட்ட நாடுகள், 350-க்கும் அதிகமான அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளன. இது, எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடைத்திடாத அரிய பெருமை. கடந்த 2007-ம் ஆண்டில், காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2- ம் தேதியை 'சர்வதேச அகிம்சை தினம்’ ஆக ஐ.நா. அறிவித்தது.

>>>ஹென்றி டொமினிக் பியர்...

 
சேவையின் அடையாளம் ஹென்றி டொமினிக் பியர்... இவர் பெல்ஜிய நாட்டில் பிறந்தவர்; முதல் உலகப் போரில் ஜெர்மனி ஐரோப்பாவின் யுத்தகளம் என அழைக்கப்படும் இவர் நாட்டை தாக்க இவர் மற்றும் இவர் குடும்பம் நான்கரை ஆண்டுகள் பிரான்ஸ் தேசத்தில் அகதி வாழ்க்கை வாழ்ந்தார்கள். இளம் வயதிலேயே பாதிரியார் ஆனார்; இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். சமூகவியல் மற்றும் தத்துவவியல் பாடங்களை நடத்தும் ஆசிரியர் ஆனார். 1938 இல் போர் மேகங்கள் சூழ்ந்த பொழுது கைவிடப்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அமைப்புகளை தொடங்கினார்.

உலகப்போர் சமயத்தில் தன் நாட்டு வீரர்களை காக்கவும், அதே சமயம் தகவல்களை துப்பறிந்து சொல்லவும் செய்தார். பல சமயங்களில் அவர்களை பதுங்கு குழிகளின் மூலம் காப்பாற்றி வெளியேற்றினார். 1949 இல் அகதிகளின் மீது அவரின் கவனம் திரும்பி அவர்களை பற்றி படித்தார். அதை தொடர்ந்து அவர்களுக்கு உதவும் அமைப்பை உருவாக்கினார். பலரிடம் அலைந்து திரிந்து நிதி திரட்டினார்; கடிதம் போட்டு நன்றி சொல்லி மேலும் மேலும் உதவி செய்யும் எண்ணத்தை ஊக்குவித்தார்.

அகதிகள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதை கண்டார் .அவர்கள் ஒரு வகையான அச்சத்திலேயே வாழ்வதை கண்டார். அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் அவர்கள் பிச்சை எடுக்க கூடாது என யோசித்தார். மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டார். அவர்களை அங்கே குடியேற்றி அவர்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வரலாம் என நம்பினார். ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜெர்மனி என மூன்று நாடுகளில் ஏழு கிராமங்களை அப்படி உருவாக்கி சாதித்து காட்டினார்.

ஐரோப்பாவில் பல்வேறு அகதிகளுக்கு உதவ மிகப்பெரும் அமைப்பு ஒன்றை உருவாக்கி நிதி திரட்டி சாதித்தார். 1959 இல் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 1960 இல் அமைதிக்கான பல்கலைகழகத்தை உருவாக்கினார்; அன்பு மற்றும் அமைதியை விரும்பும் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம். கிடைத்த நோபல் பரிசு பணம் முழுவதையும் நற்காரியங்களுக்கே செலவிட்டார்.

1960 களில் பாகிஸ்தான் போனவர் அங்குள்ள மக்களின் துன்ப நிலையை கண்டார். ஒரு ஊரகப் பகுதியை எடுத்துக்கொண்டு அங்குள்ள எண்ணற்ற கிராமங்களுக்கு வெளியே இருந்து உதவிகள் கிடைக்கும் வண்ணம் பார்த்துக்கொண்டார். அதே சமயம் தங்களுக்க்கான எல்லாவற்றையும் அவர்களே உற்பத்தி செய்வதை உறுதி செய்தார். இதன் மூலம் பல கிராமங்கள் இணைந்து வாழும் கூட்டுறவு வாழ்க்கையை உண்டு பண்ணினார் .தன் வாழ்க்கையை முழுக்க சேவைக்காகவே அர்ப்பணித்த அவர் இதே நாளில் (ஜன.30) ஐம்பத்தெட்டு வயதில் மறைந்தார். ஹென்றி டொமினிக் பியர்... எனும் அன்பு மற்றும் சேவையின் அடையாளம்!

>>>பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்...

 
மாபெரும் அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்... அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார மந்தநிலையை சந்தித்தபொழுது அந்நாட்டின் ஜனாதிபதி ஆனார். எந்த கொண்டாட்டங்களும் இல்லாத நிலையில் பொறுப்பேற்றார் - மக்கள் முகங்களை பார்த்தார். அவர்களிடம் பக்கம் பக்கமாக பேசுவது உதவாது எனத் தெரியும், "நாம் பயங்கொள்ள வேண்டிய ஒரே விஷயம் பயம் மட்டுமே!"என்றார்.

நாட்டை கட்டமைக்க ஆரம்பித்தார். நியூ டீல் என தன் திட்டங்களுக்கு பெயர் கொடுத்தார் - சிக்கன நடவடிக்கைகள் எடுத்தார். நாட்டை படிப்படியாக மீட்டார். இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து முடித்திருந்த அவர் உலகப் போரில் நேரடியாக பங்குகொள்ளாமல் ராஜதந்திரியாக நடந்து கொண்டார்.

நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்களை மட்டும் லெண்ட் லீஸ் முறைப்படி தந்து கொண்டிருந்தார். 1941 இல் ஜப்பான் பியர்ல் ஹார்பரை தாக்கியது; அமெரிக்காவின் பெரும்பாலான ஆயுத பலம் போய் நாடே அவ்வளவு தான் என எல்லாரும் நினைத்தார்கள்; "இனி நாடு எழ முடியாது" என படைத்தளபதிகள் சொன்னார்கள். ரூஸ்வெல்ட் இருபதாண்டுகளுக்கு முன்னர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் தன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தவர். ஒரு ஒரு நிமிடம் எழுந்து நின்று, "என்னால் எழுந்து நிற்க முடியுமென்றால் இந்த தேசத்தாலும் முடியும்!"என்றார்.

உலகப்போரில் அவர் நாடு சொன்னபடியே வெற்றிகளை பெற்றது; ஆனால்,போரின் இறுதி கட்டத்தின்பொழுது அவரே இறந்து போனார் -அவர் இறந்த பொழுது ராணுவ வீரர்கள் அழக்கூடாது என்கிற விதியை மீறி கறுப்பின இசைக்கலைஞர் ஒருவர் கண்ணீர் வடிப்பதே நாட்டின் மனதை சொல்லியது. அவர் இருந்திருந்தால் ஜப்பானின் மீது அணுகுண்டு போடவே அனுமதித்திருக்க மாட்டார் என சொல்வோரும் உண்டு. தைரியம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என உலகுக்கு புரியும்படி தன் வாழ்வால் சொன்ன தன்னிகரற்ற தலைவன். அவர் பிறந்த தினம் இன்று (ஜன.30)

>>>ஜனவரி 30 [January 30]....

நிகழ்வுகள்

  • 1648 - எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் உடன்பாடாகியது.
  • 1649 - முதலாம் சார்ல்ஸ் மன்னன் தூக்கிலிடப்பட்டான். அவனது மனைவி ஹென்றியேட்டா மரீயா பிரான்ஸ் சென்றாள்.
  • 1649 - பொதுநலவாய இங்கிலாந்து என்ற குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1649 - இளவரசர் சார்ல்ஸ் ஸ்டுவேர்ட் இரண்டாம் சார்ல்ஸ் தன்னை இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் மன்னனாக அறிவித்தான். எனினும் எவரும் அவனை அங்கீகரிக்கவில்லை.
  • 1820 - எட்வர்ட் பிரான்ஸ்ஃபீல்ட் அண்டார்டிக்காவில் தரையிறங்கினார்.
  • 1835 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.
  • 1889 - ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
  • 1930 - உலகின் முதலாவது radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.
  • 1933 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.
  • 1945 - இரண்டாம் உலகப் போர்: பால்ட்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1948 - இந்தியத் தலைவர் மகாத்மா காந்தி இந்துத் தீவிரவாதியான நாதுராம் கோட்சேயினால் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
  • 1964 - தென் வியட்நாமில் ஜெனரல் நியுவென் கான் (Nguyen Khanh) இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
  • 1972 - வட அயர்லாந்தில் விடுதலைப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட 14 பேர் ஐக்கிய இராச்சிய துணை இரானுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1972 - பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது.
  • 1976 - தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
  • 1994 - பியோத்தர் லேக்கோ சதுரங்க ஆட்டத்தில் உலகின் முதலாவது வயதில் குறைந்த கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
  • 2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2003 - பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.
  • 2006 - தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 5 பேர் மட்டக்களப்பு, வெலிக்கந்தையில் கடத்தப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1882 - பிராங்கிளின் ரூஸ்வெல்ட், 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1945)
  • 1899 - மாக்ஸ் தெய்லர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)
  • 1910 - சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி (இ. 2000)
  • 1941 - டிக் சேனி, அமெரிக்காவின் 46வது துணைத் தலைவர்
  • 1949 - பீட்டர் ஆகர், நோபல் பரிசு பெற்றவர்.

இறப்புகள்

  • 1832 - ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், கடைசிக் கண்டி அரசன்
  • 1891 - சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல் கிளர்ச்சியாளர் (பி. 1833)
  • 1928 - ஜொஹான்னஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1867)
  • 1948 - மகாத்மா காந்தி, (பி. 1869)
  • 1948 - ஓர்வில் ரைட், ஐக்கிய அமெரிக்காவின் வானூர்தி நிபுணர் (பி. 1871]])
  • 1969 - Georges Pire, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
  • 1981 - வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் முதலாவது சனாதிபதி (பி. 1897)
  • 1991 - ஜோன் பார்டீன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
  • 2007 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1917)
  • 1874 - இராமலிங்க அடிகளார், ஆன்மிகவாதி (பி. 1823)

சிறப்பு நாள்

  • இந்தியா - தியாகிகள் நாள்
  • உலக தொழுநோய் ஒழிப்பு நாள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...