பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 692 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
2013 முதல் 52 லட்சத்து 47 ஆயிரம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பினைப் பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில், 177 கேள்விகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக 80 ஆயிரம் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கவும், 742 அடல் டிங்கரிங் லேப் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரிக்குப் பின் ஐஐடியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இணையதளம் மூலம் பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.