தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடந்த மாத ஊதியப் பட்டியலிலிருந்து, இந்த மாத ஊதியப் பட்டியலில் எந்தெந்த இனங்களில், மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்ற விவரத்தை, ஊதியப் பட்டியலுடன் இணைத்துத் தரும் போது, இணைய தளத்தில் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்யும், அலுவலகப் பணியாளர்களுக்கும், ஊதியப் பட்டியலை சரி பார்த்து ஒப்புதல் அளிக்கும் அலுவலர்களுக்கும் எளிதாக இருக்கும்.
இதன் மூலம் ஊதியப் பட்டியலில் கோரப்படும் ஊதியம், எவ்வித வித்தியாசமும் இன்றி உரிய தலைப்புகளில் சரியாக வரவு வைக்கப் படுவதுடன், (உதாரணமாக PF சந்தா, வருமான வரி பிடித்தம் மற்றும் பிற...) ஆசிரியர்களின் வங்கிக் கணக்கிலும், ஊதியப் பட்டியலில் கோரப்பட்ட சரியான நிகரத் தொகை வரவு வைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
கணினி மூலம், தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள், இந்த மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்யப் பட்டுள்ள ஊதியம் மற்றும் பிடித்தம் இனங்களின் விவரங்களை மட்டும் Bold செய்து காண்பிக்கலாம். கடந்த மாத ஊதியம் / பிடித்தம் விவரங்களை Bold செய்ய வேண்டாம்.
கையினால் எழுதப்படும் ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள், கடந்த மாத ஊதியத்தில் பெறப்பட்ட இனங்களின் விவரங்களை ஊதா மையினாலும், இந்த மாத ஊதியப் பட்டியலில், செய்யப் பட்டுள்ள மாற்ற விவரங்களை மட்டும், சிவப்பு வண்ண மை கொண்டு எழுதலாம்.
மாற்றம் செய்யப்பட்ட இனங்களில் கடந்த மாதம் பெற்ற / பிடித்தம் செய்யப் பட்ட தொகையை ஊதா மையினாலும், இந்த மாதம் பெற வேண்டிய ஊதியம் (ஆண்டு ஊதிய உயர்வு, தேர்வு நிலை ஊதியம், சிறப்பு நிலை ஊதியம், ஊக்க ஊதியம், ஊதியமில்லா விடுப்பு நாட்கள், அரைச் சம்பள விடுப்பு ஊதியம் போன்ற மாற்றம் செய்யப் பட்ட விவரங்கள் மட்டும்) பிடித்தம் செய்யப் பட வேண்டிய தொகையையும் (PF சந்தாத் தொகை உயர்த்துதல், வருமான வரி பிடித்தம் உயர்த்துதல் மற்றும் சொசைட்டி பிடித்த மாற்றம் போன்றவை) சிவப்பு நிற மையினாலும் எழுதி, ஊதியப் பட்டியலுடன் இணைத்து ஒப்படைத்தால், சம்பளப் பட்டியல் பதிவேற்றம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.