ஊதிய உயர்வு, தற்காலிகப் பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
முன்னதாக, போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வில் கால தாமதத்தை சரி செய்ய வேண்டும், தற்காலிகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, பிப்.25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தொமுச, சிஐடியு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளன.
தேர்தல் அறிவிப்பு வரவிருக்கும் வேளையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தொழிற்சங்கங்களின் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.