கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்தறிவித்தல் இயக்கம் தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஷ்...



அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் ட்வீட்டர் பதிவு:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம், கே. கள்ளிக்குடியில் 100% கல்வி என்ற இலக்கை நோக்கி எழுத்தறிவு இயக்கத்தின் தொடக்க விழாவைத் தொடங்கி வைத்தேன். 


ஒவ்வொரு இடத்திலும் கற்பிக்கும் பணியினை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைந்து நடத்த உள்ளனர்.


மணிகண்டம் ஒன்றியத்தில் 2021-யின் மக்கள் தொகையின் கணக்கின்படி 14,89,977 நபர்கள் உள்ளனர். 


அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கே எழுத்தறிவு இல்லாதவர்கள் 4599 நபர்கள் பெண்கள் 3576, ஆண்கள் 913 பேர் உள்ளனர். முதலில் அவர்கள் கையெழுத்துப் போடுவதற்கும் பின்னர் படிக்கவும் 69 நாட்களில் இலக்காகக் கொண்டு செயல்படுத்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சுமார் 1 கோடி நபர்கள் இவ்வியக்கத்தினால் பயன்பெற இருக்கிறார்கள். இதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க ஆவண செய்துள்ளோம். 


இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பள்ளிக் கல்வி அரசு அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.




செய்தி:

திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். 


இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-


பணியிடமாறுதல் கலந்தாய்வு 


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். அதன்படி அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறேன். அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிநிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடைபெற வேண்டிய பணியிட மாறுதல் கலந்தாய்வு இந்தாண்டு நடத்த முடியவில்லை. 


முதல்-அமைச்சரின் ஆலோசனையை பெற்று விரைவில் பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன்பிறகு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ, அது சரி செய்யப்படும். 


கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும், விரிவுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் உயர்தர ஆய்வகங்கள் உள்ளன. கொரோனா பரவலால் பள்ளிகள் செயல்படாமல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் பயன்பாடின்றி உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.


அக்டோபரில் தேர்வு 


பிளஸ்-2 வில் கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வு எழுதலாம். கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.  தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியின்போது, பள்ளியில் சிலம்பம் சுற்றி அசத்திய 2 மாணவிகளை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார்.


எழுத்தறிவித்தல் இயக்கம்


இதையடுத்து திருச்சி மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சியில் 100 சதவீதம் எழுத்தறிவித்தல் இயக்கத்தை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர், அஞ்சலை என்ற பெண்ணுக்கு அவர் எழுத்து பயிற்சி அளித்தார். அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், "கிராமப்புறங்களில் கைரேகை வைக்கும் சூழல் இன்றளவும் உள்ளது. கல்வியறிவு இல்லாத முதியவர்களுக்கு எழுத்தறிவித்தல் திட்டத்தின் கீழ் கையெழுத்திடும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு கல்வியறிவில் 81 சதவீதம் உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் கல்வியறிவில் தமிழகம் 100 சதவீதம் இருக்கும் வகையில் எங்களுடைய செயல்பாடு இருக்கும்.


100 சதவீதம் கல்வியறிவு 


ஏற்கனவே உள்ள இந்த திட்டத்தை மெருகேற்றும் வகையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கையெழுத்து போட தெரியவில்லை. தமிழகம் 100 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் எழுத்தறிவித்தல் இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் கீழ் 69 நாட்களில் எழுத பழக்கி விடுவோம்" என்று கூறினார். 


இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் சிவராசு, பழனியாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...