ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை எப்படித்தான் தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? - ஆசிரியர் கூட்டணி...



ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? -  தமிழக ஆசிரியர் கூட்டணி...


 *எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை?..*


*AIFETO..16.12.2023*


*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*


📕📗📘📙📕📗📘📙📕📗📘📙



*12.12.2023 அன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்ட தீர்மானங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் ஊதியத்தினை ஜாக்டோ ஜியோ சார்பாக  சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வழங்குவதாக   கூட்டத்தில் அறிவித்துள்ளார்கள்.*


 *பிற மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமி, கஜா புயல், மழை வெள்ளம், கொரனா பெருந்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஒரு நாள் ஊதியத்தினை மனமுவந்து அளித்துவந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ இந்த ஒரு நாள் ஊதியம் வழங்கும் முடிவிற்கு எதிர்ப்புணர்வினை பல்வேறு முனைத் தாக்குதலுடன் புலனங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது கண்டு கவலையுறுகிறோம்.*


 *எனது 51 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இல்லாத அதிர்ச்சியினை கண்டு நிலை குலைந்து நிற்கிறேன்.*


 *ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மனிதநேயம் இல்லாதவர்களா?.. இல்லவே இல்லை... புலனப் பதிவு சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டு போகும்  இவர்கள்...,  'ஜாக்டோ ஜியோ தலைவர்களே!.. இதுவரையில்  இழந்துள்ள பணப்பயன்கள் எதையும்  பெற்றுத் தர முடியாத உங்களால் எங்களின் ஒரு நாள் ஊதியத்தினை அரசுக்கு வழங்க சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்காக பாடுபட்ட சங்கத் தலைவர்கள் காலம் போய், உங்களுடைய சுய விளம்பரத்திற்கும், சுய லாபத்திற்காகவும் அரசிடம் உங்களை நிபந்தனையில்லாமல் ஒப்படைத்துக் கொண்டு, உங்களிடம் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்ற ஒரு காரணத்திற்காக  எங்கள் உரிமைகளை அடகு வைப்பதா?..'*


 *'கோரிக்கை மாநாடு  என்று  பெயரிட்டால் முதல்வர் வரமாட்டார் என்று வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு என்று பெயர் மாற்றினீர்கள்!.. சென்னைக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து  கலந்து கொண்டார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையுடன் வந்தார்கள். ஆனால் பணப்பலன் சார்ந்து ஒரு சிறு அறிவிப்பாவது அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது உண்டா?..  இல்லை நடந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நிகழ்வுகளிலாவது  பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்... கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டியவிடுப்பு சரண் செய்ய அனுமதி வழங்கப்படும்... ஊதிய முரண்பாடுகள் களையப்படும்... என்று  ஒரு அறிவிப்பையாவது வெளியிட்டிருப்பார்களா?...'* 



*முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள், நம்பக்கம் மக்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் செல்வாக்கு நமக்கு தேவையில்லை என்று முடிவெடுத்தார்கள். அவர் எடுத்தது தவறான முடிவு என்று அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழுதும் பிரதிபலித்தது என்பதை வரலாறு இன்னமும் சொல்லிக் கொண்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது என்னதான் நாம் இதயப் பற்றுதலுடன் நெருங்கி நெருங்கி சென்றாலும், அவர் நம்மீது அன்பு மழை பொழிந்தாலும், நம் கோரிக்கைகள் எதையும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அவர்களும் நலத்திட்டங்களால் மக்கள் செல்வாக்கு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகி வருகிறது என்று செயல்பட்டு வருகிறார். நாம் இவர்களை நம்பி கெட்டது போதும்!. நம்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காக களத்தில் நின்று போராடுவதை தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் கைகோர்த்து களத்தில் தொடர்ந்து நின்று இழந்த உரிமைகளை மீட்டெடுப்பொம்!..*



*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட 12 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கைக்காவது அரசாணை வெளியிட்டு இருப்பார்களா?...*



 *நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் பெரும்பான்மையான 14 ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், 'இன்னமும் தலைநகரம் சென்னை வெள்ளப் பாதிப்பில் இருந்து முழுவதுமாக  மீளவில்லை!.. அதனால் 28ஆம் தேதி கோட்டை நோக்கி  மறியல்  முற்றுகைப் போராட்டத்தினை தவிர்த்து விட்டு, 28ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சிமிக்க மறியல் போராட்டத்தினை நடத்தலாம்' என்ற கருத்தினை பதிவு செய்த போதும்...  அதை  செவிமடுக்காதவர்கள் யார்?..யார்?.. கண்டு கொள்ளாமல் இருந்த சங்கத் தலைவர்கள் யார்?.. யார்?.. அந்த வீட்டோ பவர் உள்ள சங்கத் தலைவர்கள் யார்?.. யார்?..*


 *ஜனவரி மாதத்தில் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தினை வைத்துக் கொள்ளலாம் என்று ஆசிரிய சங்க தலைவர்கள் சொன்னதை, கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே ஒரு முடிவினை எடுத்துக் கொண்டு வருகை தந்து  திட்டமிட்டபடி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது ஏன்?..*


 *இவர்கள் எடுத்துள்ள  முடிவுகள் பற்றி பலரின் புலனப் பதிவில் வெளிவந்துள்ள விகடகவி வார்த்தைகள். நெருப்புகள்... "நடக்கும் என்பார் நடக்காது... அப்படி எதுவும் நடக்காது இவர்கள் மீது சத்தியம்" என்ற பாடல் வரிகளோடு புலனப் பதிவுகள்  உலா வந்து கொண்டுள்ளது.*


 *நடந்தது என்னவென்றால் இரண்டு சங்கத் தலைவர்கள் ஒரு நாள் ஊதியத்தை நாங்கள் வழங்கி விடுகிறோம் என்று முன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.  அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக  உடனே ஜாக்டோ ஜியோ கூட்டத்தினை கூட்டி 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தினை  தருவதற்கான நெருக்கடியினை கூட்டத்தில் மூலமாக ஏற்படுத்தியுள்ளார்கள். கூட்டம் கூடுவதற்கு முன்னர் இரண்டு தலைவர்கள் முதலமைச்சர் அவர்களை தனித்தனியே சந்தித்து எடுக்கப் போகும் முடிவினை தெரிவித்து வந்த ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.*



 *தனிப்பட்ட என்னுடைய 51 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 1985ல் நடைபெற்ற ஜாக்டீ போராட்டம், 1988ல் நடைபெற்ற ஜாக்டீ- ஜியோ போராட்டம், 2003 இல் நடைபெற்ற டெஸ்மா, எஸ்மா  ஜாக்டோ ஜியோ போராட்டத்தினை முன்னின்று நடத்தி மூன்று போராட்டங்களிலும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு  வெளியில் வந்திருக்கிறோம். நிரந்தரப் பணி நீக்கத்தில் இருந்த 999 பேரில் 998 பேரையும் ஏழு மாதத்திற்கு பிறகு பணியில் அமர்த்திய பிறகு நாம் பணியில் கடைசியாக சேர்ந்தோம் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*


 


 *ஆசிரியர்,  அரசு ஊழியர், பணியாளர்கள், கல்லூரி ஆசிரியர் சங்கங்கத் தலைவர்களுடன் களத்தில் நின்று பணியாற்றிய அனுபவக் கொள்முதலை இன்னமும் நாம் பாதுக்காத்து வைத்துள்ளோம்!. தோழர்கள் போராளிகள்  எம்.ஆர்.அப்பன், கே.ஜி என்று அழைக்கப்பட்ட கங்காதரன்,  தோழர் ஸ்ரீதரன்,  என்றும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டுள்ள போராளி தோழர் முத்துசுந்தரம், பெரியவர் நாராயணராவ், கு.பா, செளந்தரபாண்டியன், அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த சகோதரர் சூரியமூர்த்தி,  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்கத்தினுடைய தலைவராக இருந்த சகோதரர் பாண்டுரங்கன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆத்ரேயா அவர்களுடனும், தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பலமுறை கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளான பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் அவர்களுடனும் களப்பணி ஆற்றிய நினைவுகள் எல்லாம் இன்னமும் கூட்டமைப்புகளுக்கு பெருமையினை சேர்த்து வருகின்றது என்றால் மிகையாகாது.*


 *தனிநபர் கருத்தினை கூட கேட்டு மதித்து போராட்ட திட்டத்தை வகுத்த இயக்கம் தான் அன்றைய  ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாகும். என்ற வரலாற்றுப் பதிவு இன்றும் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளது.... என்பதை மறக்கத்தான் முடியுமா?..*



*தொடர்ந்து வெளிவரும் புலனப் பதிவுகளை தவறாமல் படித்து  சங்கத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்து கொண்டு கூட்டமைப்புகளை நடத்துங்கள்!.. ஒருவேளை அரசே ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் ஊதியத்திற்கு அரசாணை வெளியிடுவார்களேயானால் பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்பினை தெரிவிப்பார்கள் என்பதை உணர முடிகிறது.  அரசின் மீது உள்ள கோபத்தை விட... சங்கத் தலைவர்கள் மீது வெறுப்புணர்வு தீப்பிழம்பாய் வெளிவந்து கொண்டிருக்கிறது.*




 *இன்னும் சென்னையில் வெள்ளம் வடியாத சில  பகுதிகள் இருக்கத்தான் செய்கிறது.  என்பதை மக்கள் ஊடகங்கள் வழியாக பார்த்து வருகிறார்கள்.  மத்திய அரசு கண்காணிப்பு குழுவினை அனுப்பி பாதிப்பினை ஆய்வு செய்து வருகிறார்கள். அதே டிசம்பர் மாதத்தில் மீண்டும் பாதிப்புகளில் இருந்து வெளிவராத அதே தலைநகர் சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினால்  பொதுமக்களும், பொது நோக்கர்களும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?..*


 *பல்வேறு புலனப் பதிவுகளில்  போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள்... பேச்சுவார்த்தைக்கு முறைப்படி அழைக்காவிட்டாலும் இவர்களே சென்று பார்ப்பார்கள்.. முதலமைச்சர் நின்று கொண்டு இவர்களையும் நிற்க வைத்து   வெள்ள பாதிப்பு இன்னமும் நீங்க வில்லை... எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று தெரிவிப்பார்கள். சில சங்கத் தலைவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்திக்கவே முடியாது.  நமது ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் அவர்கள் நம்மை அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த ஒரு பெருமை போதாதா?.. என்று நமக்கு ஆறுதல்  அளிக்க முன் வருவார்கள்..  உடனே தலைவர்களும் போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம் என்று முதல் நாள்தான் அறிவிப்பார்கள்.*


*ஏற்கனவே டிட்டோஜாக் இது போன்ற அறிவிப்புகளுக்கு வழிகாட்டி நிற்கின்றது.*



 *போராட்டக் களத்தினை தீவிர படுத்த 19ஆம் தேதி திருச்சியில் ஜேக்டோ ஜியோ  கூடுகிறார்களாம்!. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். நடைபெறப் போகும் கூட்டத்திலாவது ஜாக்டோ ஜியோ என்ற வீரம் செறிந்த அமைப்பினை ஒரு தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து கொண்டு வெளியில் வாருங்கள்!*


*ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப் பிடியுங்கள்!..*


*சுதந்திரமான கூட்டமைப்பிற்கு ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் ஒற்றுமை உணர்வு ஒன்றுபட்ட உணர்வாக ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியானால்... சங்கத் தலைவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் மத்தியில் கேள்விக்குறிக்கு ஆளாகுவோம்!..*


 *மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி என்பார்கள்!.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்காக போராட்டங்களை நடத்துவது தான் ஜாக்டோ ஜியோ இயக்கம்!.. என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு செயல்பட முன்வருவோம்!..*



*மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மின்துறை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள்,  எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் இவர்களது இரவுபகல் பாராத  அர்ப்பணிப்பு  மிகுந்த பணியினை மறக்கத்தான் முடியுமா?..  இவர்களையெல்லாம் பாராட்டுகிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்..  இவர்களின் கோரிக்கைகளைப் பற்றி  ஏற்க மறுப்பது ஏன்?.. என்ற  உணர்வுகள் மேலிட்டு வருகின்றன.*




*நடந்ததை மறந்து இனி நடக்க இருப்பதை உணர்ந்து ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப்பிடித்து களத்தில் தொடர்ந்து நிற்போம்!..*


*பெற்ற அனுபவங்களை காய்தல், உவத்தல் அகற்றி உரிமை உறவுடன் பகிர்ந்து கொள்கிற உங்களின் சகோதரன்...*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...