பெண்கள் விடுதியில் தீ விபத்து - 2 ஆசிரியைகள் உயிரிழப்பு...




 மதுரையில் விசாகா என்ற பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண் கைது. 


விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.


விடுதியை காலி செய்யக் கோரி கடந்த ஆண்டே மதுரை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருந்தது.


மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள, கட்ராபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் (12-09-24) அதிகாலை 4 மணியளவில் இந்த விடுதியில் இருந்த பிரிட்ஜ் திடீரென்று வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, கடுமையான கரும்புகை ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கக்கூடியவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தி அந்த விடுதியில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மீட்டனர்.


இந்த விடுதியில் ஏற்பட்டுள்ள தீயினால், கரும்புகை உருவானதில் மூச்சுத்திணறலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், பிரிட்ஜ் வெடிக்கும் போது, அதன் அருகில் இருந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரையும் பலத்த காயங்களுடன் தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரிமளா செளந்தரி மற்றும் சரண்யா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவித்திருந்தனர். பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இந்த சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் இன்பாவை மதுரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், 100 ஆண்டுகள் பழமையாக கட்டடத்தில் இயங்கி வந்த விசாகா பெண்கள் விடுதி, மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை. கட்டடம் சேதமடைந்து இருப்பதால் விடுதியை காலி செய்யுமாறு இடத்தின் உரிமையாளர் கூறியும், வெளியேற மறுத்துள்ளார். மருத்துவமனை நடத்த அனுமதி பெற்றுவிட்டு மகளிர் விடுதியை நடத்தி வந்ததால், விடுதியின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் கட்டடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையில், 2023ஆம் ஆண்டே விடுதியை இடித்து அப்புறப்படுத்த மதுரை மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியிருக்கிறது. ஆனால், விடுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விடுதி இடிக்கப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில், விடுதியில் ஏற்பட்டுள்ள விபத்து குறித்து நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று விடுதியை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வரும் பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி ஆசிரியை உள்பட 2 பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,


"மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிப்பதற்கு மாநகராட்சி சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் இடிக்காமல் இருக்கிறார்கள். நீதிமன்றத்தையும் சில பேர் அணுகி உள்ளனர். இடிக்காமல் இருக்கும் பழமை வாய்ந்த கட்டிடங்கள் ஆலோசித்து 'சீல்' வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாரும், பார்வையிட்டு ஆய்வு செய்தார். முறையான மாநகராட்சி அனுமதி, சுகாதாரத் துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, காவல்துறையின் அனுமதி என்று எந்தவிதமான அனுமதியும் பெறாமல் இந்த விடுதி செயல்பட்டு வந்துள்ளது. விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.


இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு 2 பெண்கள் பலியான நிலையில் பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு மீண்டும் ஒரு நோட்டீஸ் வழங்க உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.


மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதிக் கட்டடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தீ விபத்தை அடுத்து கட்டட உரிமையாளர் தினகரனை அழைத்து, வழக்கு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கட்டிட உரிமையாளர் தரப்பில் கட்டடத்தை காலி செய்யும் பணியும் இன்று தொடங்கும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...