கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - TRB க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 


பி.எட்., படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பி.எட். படிப்பை முடிப்பதற்கு முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிஎட் முடிக்காமலேயே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் பணி வழங்க உத்தரவிட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், " தமிழக அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பம் கோரி கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 25-ந் தேதி அறிவிப்பு வெளியானது. நானும் விண்ணப்பித்தேன். அந்த தேர்வில் 97 மதிப்பெண் எடுத்தேன்.


பின்னர், கடந்த மே மாதம் 31-ந் தேதி சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது. இதன் பின்னர் வெளியிடப்பட்ட தேர்ச்சி பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு விதிகளின்படி எனக்கு இப்பதவி பெற தகுதியில்லை என்று கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தது. மேலும் தகுதி இல்லாதோர் பட்டியலில் என் பெயர் முதலில் இடம் பெற்று இருந்தது. இந்த பட்டியலை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று ராஜேஸ்வரி கூறியிருந்தார்.


இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் கதிவரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறும் போது, "மனுதாரர் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால், பி.எட். படிப்பை 2018-ம் ஆண்டுதான் முடித்துள்ளார். அதனால், அவருக்கு பணி பெற தகுதி இல்லை" என்று வாதிட்டார்.


மனுதாரர் ராஜேஸ்வரி தரப்பில் வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் ஆஜராகி, '2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையில், 2016-17 கல்வியாண்டில் இறுதியாண்டு படிக்கும் பி.எட். மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும், பி.எட். தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன்படி மனுதாரர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு 2017-ம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். ஆனால், பி.எட். படிப்பில் அவர் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாடத்திற்கான தேர்வை எழுதி 2018-ம் ஆண்டு பி.எட். பட்டம் பெற்றுவிட்டார்' என்று வாதிட்டார்.


அரசு தரப்பு , மனுதாரர் தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அவர் தனது உத்தரவில், "2017-ம் ஆண்டு தகுதி தேர்விலும், 2018-ம் ஆண்டு பி.எட். தேர்விலும் மனுதாரர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆகவே, மனுதாரரை ஆசிரியர் பணியை பெற தகுதியில்லாதவர் என்று கூற முடியாது. மனுதாரரை தகுதியில்லாதவர் பட்டியலில் சேர்க்க எந்த காரணமும் கிடையாது.  எனவே, மனுதாரரின் பெயரை தகுதி பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்பின்னர், அவருக்கு பணி வழங்கும் நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளவேண்டும்" என்று குறிப்பிட்டார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...