✍️✍️✍️✍️✍️✍️✍️
*6.14 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த மூவர் குழு அறிவிப்பு*
*முடியாது என்பதன் வேறு பெயர் தான் மூவர் குழுவா!*
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்
6.14 Lakh Teachers, Govt Servants' Trust-Destroyed Trio Committee Announcement - Is Trio Committee Another Name for 'Can't' - Tamil Nadu Elementary School Teachers' Federation Condemns
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்வில் பேரிடியாக 2003 ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்கள் நடத்தி வருகின்றன.
இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு பணியில் சேர்ந்த சுமார் 38 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் இன்றி வயதான காலத்தில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதிலும் 7000 ஊழியர்கள் உயிரிழந்து அவர்களின் குடும்பங்கள் குழந்தைகள் எவ்வித வருமானமும் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். பங்களிப்பு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த தாமதம் செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
இதற்கான தொடர் போராட்டங்களின் விளைவாக 2016 ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வர் அவர்கள் ஓய்வூதிய பிரச்சனை பற்றி ஆராய திருமதி ஷீலா ராணி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் குழு அமைத்தார்கள். அவர் ராஜினாமா செய்த பிறகு அந்த குழு திரு ஸ்ரீதர் ஐஏஎஸ் தலைமையில் அந்தக் குழு இயங்கியது. ஓராண்டுக்கு பிறகு அந்த குழு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 2019 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ நடத்திய போராட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற உயர் நீதிமன்ற வழக்கில் அந்த அறிக்கை மீண்டும் உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைப் பற்றிய விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழு ஆண்டுகள் பலவாகியும் எவ்வித தீர்வையும் அளிக்கவில்லை
அரசு அமைக்கப்படும் குழுக்களின் அறிக்கைகளின் வரலாறு இப்படித்தான் இருக்கிறது.
தற்போதைய ஆளும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 309 ஆக பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்திருந்தது. நிதி நிலைமை மற்றும் சிபிஎஸ் திட்டத்தின் பாதகங்கள் பற்றி தெரிந்து அதனால் ஆசிரியர் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவதை பற்றி புரிந்து அரசால் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி பெரும்பாலான ஆசிரியர்களை அரசு ஊழியர்கள் வாக்களித்திருந்தனர்.
ஆட்சி அமைந்து நான்கு ஆண்டுகள் நிறைவு பெறும் வேளையிலும் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
ஆனால் தற்போது ஓய்வூதியம் பற்றி ஆராய்வதற்காக ஒன்பது மாத கால அவகாசம் வழங்கி குழு அமைத்து இருப்பது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற அரசுக்கு மனமில்லை என வெட்ட வெளிச்சமாகிறது.
மத்திய அரசு ஊழியர்களே ஏற்றுக் கொள்ளாத, பாதகங்கள் நிறைந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை காரணம் காட்டி குழு அமைத்திருப்பது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நலனுக்கு முற்றிலும் எதிரானது.
எனவே அரசு உடனடியாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும்.
ஆசிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்தும் அறிவிப்பை அரசு வெளியிடாமல் மேலும் தாமதப்படுத்தினால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்...
இவண்..
*சி அரசு*
மாநிலத் தலைவர்
*சு குணசேகரன்*
பொதுச்செயலாளர்
*சே நீலகண்டன்*
மாநில பொருளாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி..