கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்



 தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து ஆதவ் அர்ஜுனா விளக்கம்


முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, இரண்டாவதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூன்றாவும் கடைசியுமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.


தமிழ்நாட்டில் இதுவரை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பின்பு தேசிய கீதம் இசைப்பது மரபாக இருந்தது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டதும் வந்தே மாதரம் புகுத்தப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.


முதலமைச்சராக விஜய் பதவியேற்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு திமுக, விசிக, சிபிஎம், வைகோ மற்றும் ராமதாஸ் கண்டனம்  தெரிவித்துள்ளனர். 


"மேற்கு வங்கத்தில் பாஜக அரியணை ஏறிய போது கூட அங்கு "வந்தே மாதரம்"  ஒலிக்கவில்லை. ஆனால் இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் பட்சமாக நிறுத்தி தமிழ் தாயின் முகத்தில் கரியைப் பூசி உள்ளனர். மரபுகளை சிதைத்து தமிழை அவமதிப்பது தான் நீங்கள் ஊரெல்லாம் கூவிய மாற்றமா? தமிழ் தாய்க்கு நேர்ந்த இந்த இழிவு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு நேர்ந்த அவமானம்" என திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 


முதலமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும். அந்த வகையில் அனைத்து அரசு நிகழ்வுகள் விழாக்களிலும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதையும், நிறைவாக நாட்டுப்பண் இசைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசின் முதலமைச்சரையும், தற்காலிக பேரவைத் தலைவரையும் கேட்டுக் கொள்கிறது என வலியுறுத்தி இருந்தார்.


முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடாமல் வந்தேமாதரம் பாடப்பட்டது தமிழ்நாட்டின் மரபை மீறிய நிகழ்வு என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 


விஜய் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது மரபு மீறிய செயல் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


பதவியேற்பு விழாவில் தமிழுக்கு 3வது இடமா? என விசிக கண்டனம் தெரிவித்துள்ளது.


 தாய் தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்; தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடுதான் ஆளுநர் கொடுங்குற்றத்தை அரங்கேற்றினாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.


இவ்வாறு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்து எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், "நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.


நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.


தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.


இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.


இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது.


ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!


தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்:" என்று தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடந்த 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற NEET UG தேர்வுகள் ரத்து

  கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வுகள் ரத்து ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய...