ஆசிரியர்களின் முயற்சியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு பெரியார் வீதி அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் இலவச பாடநூல் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்தது.
வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்து, இலவச பாடநூல்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பெரியார் நகர் தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு 369 மாணவர்கள் படித்தனர். தற்போது 69 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்த நிலையில், 436 ஆக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது போன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணமாக உள்ள ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து நாளை (2-ம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. கடந்தகாலங்களை விட தற்போது கூடுதலாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி மையத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது.
மாவட்டத்தில் வீட்டு வசதிக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து புதிய திட்டங்கள் நடைமுறைபபடுத்தப்படும். கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில் மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுப்பார். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றார்.