தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் வேலை நிமித்தமாக புலம்பெயர்ந்து வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள எந்த ஒரு நியாய விலை கடையிலும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் வசதிக்காக "எம் ரேஷன்" என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளை அடையாளம் காணவும், தங்களுக்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்ற விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இந்த செயலியை தேசிய தகவல் மையம் (National Informatics Centre) உருவாக்கியுள்ளது. முதல் கட்டமாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப் பட்டுள்ள இது படிப்படியாக 14 மொழிகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது . இது குறித்து உணவு மற்றும் பொது வினியோகத் துறை செயலாளர் சுதன்ஷ பண்டே கூறும்போது, "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முதல் கட்டமாக 4 மாநிலங்களில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தபடியாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டது. மீதமுள்ள அசாம், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் 69 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர் என்றார்..