கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி

அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் நியமிக்கப்பட்ட, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், இந்தாண்டு துவக்கத்தில் ரூ.5 ஆயிரம் மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இதுவரை மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பணி கிடைத்த பள்ளிகள் தொலைவாக இருந்தது, வேறு பள்ளிக்கு மாற்றம் கேட்டு கிடைக்காத காரணத்தால் தேர்வான ஆசிரியர்கள் இன்னும் பணியில் சேராமல் இருப்பது, பகுதி நேர ஆசிரியர்களாக தேர்வு பெற்ற பின் வேறு வேலைகள் கிடைத்து சென்றது போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் இன்னும் சுமார் 1,200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளதாக அனைவருக்கும் கல்வி திட்டம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்பணியிடங்களை தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாவது முறையாக அழைப்பு விடுப்பதா? அல்லது தகுதி அடிப்படையில் புதியவர்களை தேர்வு செய்வதா? என்று கல்வி துறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர்.
எந்த வகையிலாவது காலியாக உள்ள இடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களை விரைவில் நியமித்து கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தகுதியுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

>>>டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களுக்கு வடக்கு மாவட்டத்தில் பணிவாய்ப்பு

டி.ஆர்.பி., மூலம் தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தான், அதிக பணி வாய்ப்புகள் உள்ளன.
சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய டி.ஆர்.பி.,தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தலை, முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கும் 35 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, காலியிடங்கள் பற்றிய விவரமும் சேகரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இரு கல்வி மாவட்டங்களில், 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
அதிகாரி ஒருவர் கூறுகையில், டி.ஆர்.பி.,யில் தேர்வு பெற்றவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தென் மாவட்டங்களில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு காலியிடங்கள் குறைவாக உள்ளன.
திருச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தான் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. இயற்பியல்,வேதியியல் பாடங்களுக்கு தென் பகுதியில் இருந்து தேர்வான பலருக்கு வடக்கு, மத்திய மாவட்டங்களில் பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

>>>டி.ஆர்.பி. தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.
பள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை, டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம் தேர்வுப் பட்டியலை ஒப்படைக்கும் பணியை, டி.ஆர்.பி., செய்கிறது.
தேர்வுப் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, "டெண்டர்" விளம்பரம் வெளியிட்டுள்ளது.
ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொகுப்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனத்திடம், முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பணி வழங்கப்படும்.
அந்த நிறுவனத்தின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், ஒப்பந்தம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், தேர்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் தேவையான பணியாளரை நியமனம் செய்ய வேண்டும்.
ஸ்கேனிங், பிரின்ட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும், டி.ஆர்.பி., இடத்தில் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் நிறுவனம், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, தினமும் காலை, 9 முதல், மாலை 6 மணி வரை, வேலை செய்ய வேண்டும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சம்பத் மாளிகையில், நான்காவது தளத்தில், டி.ஆர்.பி., இயங்கி வருகிறது. இந்த தளத்தில் போதிய இட வசதி இல்லை. ஆறாவது மற்றும் எட்டாவது தளத்தில் இயங்கி வந்த, விளையாட்டு பல்கலை அலுவலகம், தரமணிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இரு தளங்களையும், டி.ஆர்.பி., எடுத்துக் கொண்டது.
இந்த தளங்களில், தேர்வு செய்யப்படும் சேவை நிறுவனத்தின் அலுவலகம் அமைய, அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தேர்வுப் பணிகளுக்கான தகவல் தொழில்நுட்பப் பணிகளை, தற்போது, தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சேவை வழங்கி வரும் நிலையில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, "டெண்டர்" கோரப்பட்டுள்ளது.

>>>எஸ்.சி.,- எஸ்.டி., மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை

ஒன்பதாம் வகுப்பு எஸ்.சி.,- எஸ்.டி., மாணவிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை, வங்கிகளில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் இடைநிற்றல் கல்வியை தடுக்கவும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பாவது கட்டாயம் படிக்கவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, எஸ்.சி., -எஸ்.டி., மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதோடு, மேல்படிப்பை தொடரும் வகையில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 2,000 ரூபாய் கல்வித் உதவித்தொகை வழங்குகிறது.
அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு கண்டறியப்பட்டதால், இவ்வாண்டு முதல் உதவித்தொகை தேசிய வங்கி கிளைகள் மூலம் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவியின் வங்கிக் கணக்கு எண், கிளையின் பெயர், குறியீட்டு எண் போன்ற தகவல்களை முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் சேகரித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்புகின்றனர்.
கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி.,- எஸ்.டி.,மாணவிகளுக்கு மத்திய அரசு 2000 ரூபாய் உதவித்தொகையை கடந்த 2009 முதல் வழங்குகிறது.
இத்தொகையை 2 ஆண்டுக்கு எடுக்க முடியாது. 11ம் வகுப்பு சேரும்போது, எடுக்கலாம். மேல் படிப்புக்காகவே இத்தொகை வழங்கப்படுகிறது. முறைகேடுகளை தவிர்க்க, மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைகள் இனி வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

>>>எம்.பி.ஏ.க்களில் 21% பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்..!.?

இந்தியாவில் மேலாண்மைப் (எம்.பி.ஏ) படிப்பை முடிக்கும் பட்டதாரிகளில் வெறும் 21 சதவிகிதம் பேர் மட்டுமே பணியில் சேருவதற்கு தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள் என தனியார் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.
மெரி ட்ராக் (MeriTrac) என்ற அந்த நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு இதே போன்று நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 25 சதவிகித் மேலாண்மைப் பட்டதாரிகள் பணிக்கு தகுதியானவர்கள் என்ற புள்ளிவிவரம் தெரியவந்தது.
நாடு முழுவதும் உள்ள் 25 தலை சிறந்த பிசினஸ் ஸ்கூல் உட்பட, 100 மேலாண்மைக் கல்வி பயிற்றுவிக்கும் 100 கல்வி நிறுவனங்களில் 2,264 எம்.பி.ஏ. மாணவர்களிடம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. verbal ability, quantitative ability மற்றும் reasoning ஆகிய பிரிவுகளில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குரிய மதிப்பெண்களும் வழங்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற மாணவர்களில், 52.58% பேர் மட்டுமே verbal ability தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் quantitative ability தேர்வில் 41.17% மாணவர்களும், reasoning தேர்வில் 37.51% மாணவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுவாக verbal ability தேர்வில் 45% மதிப்பெண்ணும், quantitative ability தேர்வில் 35% மதிப்பெண்ணும், reasoning தேர்வில் 40% மதிப்பெண்ணும் பெற்றாலே தேர்ச்சி பெற்றதாக கருதப்பட்ட இந்த ஆய்விலேயே 21 சதவிகித மாணவர்கள் மட்டுமே பணிக்குச் செல்லத் தகுதியானவர்கள் எனத் தெரியவந்துள்ளது, பிசினஸ் ஸ்கூல் கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

>>>2030ல் இந்திய பல்கலை.,களில் 40 கோடி மாணவர்கள்

 
இந்தியாவில் மேற்படிப்பைத் தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், மேற்படிப்பைத் தேர்வு செய்பவர்களின் சதவிகிதம் கடந்த 4 ஆண்டுகளில் 12.4 சதவீதத்தில் இருந்து 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 40 கோடியை எட்டிவிடும் என்று தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானதாக இருக்கும் என்றார்.
எனினும், இந்த அளவு மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு தற்போதுள்ளதை விட கூடுதலாக 800 பல்கலைக்கழகங்களும், 50 ஆயிரம் கல்லூரிகளும் தேவைப்படும் எனத் தெரிவித்த அவர், இவற்றை உருவாக்குவதில் ஒரு ஆண்டு தாமதம் ஏற்பட்டாலும், பல மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

>>>பி.எட்., படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வமில்லை... டி.இ.டி. தேர்வை எதிர்கொள்ள தயக்கம்...

நடப்பு கல்வியாண்டு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பி.எட்., பட்டதாரிகள், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.
கடந்த காலங்களில், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு இணையாக, பி.எட்., படிப்புக்கும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. குறிப்பாக, பெண்கள் மத்தியில், அதிக ஆர்வம் இருந்தது. பி.எட்., படித்து, அரசு பள்ளியில், ஆசிரியர் பணிக்கு சேர்ந்துவிட்டால், ஓய்வு பெறும் வரை, எவ்வித பிரச்னையும் இல்லை என்ற சூழ்நிலை, முன்பு இருந்தது. திறமையான ஆசிரியர்கள் மட்டும் பணியாற்ற, வழிவகுக்கும் வகையில், பி.எட்., முடித்தவர்களும், படிப்பவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது; தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பணியில் உள்ள ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., பிரிவில் 125, எம்.எட்., பிரிவில் 35 என, மொத்தம் 160 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டு, பி.எட்., படிப்பு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த 11ல் துவங்கியது; 18ல் நிறைவடைந்தது. 700க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்; கடந்த கல்வியாண்டில் 900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். எதிர்காலத்தில், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில், ஆசிரியர் பணிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்வியியல் படிப்பில் சேர, மாணவியரிடம் ஆர்வம் குறைந்து வருவது, ஆசிரியர் சமுதாயத்தினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் இந்திராணி கூறியதாவது: பெரும்பாலான பி.எட்., மாணவ, மாணவியர், அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக, கல்வி கற்கின்றனர். தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில், பி.எட்., பட்டம் பெற்றோர், ஆசிரியர் தகுதி தேர்விலும் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது; தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில், அரசு கல்வியியல் கல்லூரி பி.எட்., மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் குறைந்துள்ளதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு, தனியார் பள்ளிகளில், அதிக ஊதியம் வழங்கப்படுவது குறித்தும், சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எதிர்காலத்தில், தகுதி மற்றும் திறமை கொண்டிருந்தால், அரசு பள்ளிகளைப் போன்றே, தனியார் பள்ளிகளிலும், அதிக ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...