கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக் கல்வித்துறை

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின், அக்டோபர் 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலான வகுப்புகளுக்கு, 21ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன. ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நேற்று முன்தினத்துடன்,தேர்வுகள் முடிந்தன.
ஒரு வார விடுமுறைக்குப் பின், அக்டோபர் 3ம் தேதி, மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு,
பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த தேதியில், டி.இ.டி., தேர்வு நடப்பதாக அறிவித்ததால், 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அக்டோPஅர் 14ம் தேதிக்கு, டி.இ.டி தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், பள்ளிகள் ஒருநாள் முன்னதாக, 3ம் தேதியே துவக்கப்படுமா என தெரியாமல், பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் தவித்து வந்தனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, "ஏற்கனவே அறிவித்த தேதியில், எவ்வித மாற்றமும் கிடையாது. திட்டமிட்ட படி, அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தனர். தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளும், இதே தேதியில் துவங்குகின்றன.

>>>செப்டம்பர் 27 [September 27]....

  • உலக சுற்றுலா தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  • கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
  • மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)

>>>1869 பள்ளிகளில் சுற்று சூழல் மன்றம்: பராமரிப்புக்காக ரூ. 46. 72 லட்சம்

தமிழகத்தில் 1869 பள்ளிகளின், சுற்றுச்சூழல் மன்றத்தை பராமரிக்க, தலா 2500 ரூபாய் வீதம், 46 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க, சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமைப்படை இல்லாத பள்ளிகளில் மட்டுமே சுற்றுச்சூழல் மன்றம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, பராமரிப்பிற்காக 1250 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், கூடுதலாக தலா 140 பள்ளிகளில், சுற்றுச் சூழல் மன்றம் அமைக்கவும், அதன் பராமரிப்பு செலவை 2500 ரூபாயாக உயர்த்தி, சுற்றுச் சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 59 பள்ளிகளின் பராமரிப்பிற்காக, ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்களிடையே சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, உலக வெப்பமய மாக்கலை தடுக்க,மரக்கன்று, மூலிகை தோட்டங்களை உருவாக்கவும், இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

>>>பாதுகாக்க வேண்டிய காது: காது கேளாதோர் வாரம் (செப்., 24 - 30)

 
ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால், அதுவே காது கேளாமை எனப்படுகிறது. உலக காது கேளாதோர் அமைப்பு, 1958ம் ஆண்டு, காது கேளாதோர் தினத்தை உருவாக்கியது. பின் இது காது கேளாதோர் வாரமாக மாற்றப்பட்டது. ஆண்டுதோறும் செப்., கடைசி வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சமூகத்தில், காது கேளாதோர் சந்திக்கும் பிரச்னைகளையும், அவர்களது கோரிக்கைகளையும், அவர்களுக்கான வசதிகளை உருவாக்கவும், ஒவ்வொரு அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை இவ்வாரம் வலியுறுத்துகிறது.

முழுமையாகவோ அல்லது பாதியாகவோ ஒலியை உணர அல்லது புரிந்து கொள்ள முடியாதவர்கள், காது கேளாதவர் எனப்படுகின்றனர். சிலரிடம் பேசும் போது, அவர்கள் நாம் சொன்னதை திரும்ப திரும்ப கேட்பார்கள். அப்படியெனில், அவர்களுக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம். இது எல்லா உயிரினங்களுக்கும் ஏற்படும் ஒன்று. நமது காது சாதாரணமாக, 20 ஹெர்ட்ஸில் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ் வரை கேட்கும் திறன் பெற்றது. ஒரு கிலோ ஹெர்ட்ஸ் = 1000 ஹெர்ட்ஸ்.

பாதிக்கப்படுவது ஏன்:
அதிக சப்தத்தை கேட்பதால் கூட காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர். பெற்றோருக்கு இக்குறைபாடு இருப்பின், குழந்தையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அடிக்கடி சளி அல்லது தொண்டை வலி ஏற்பட்டாலும் காது கேட்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கு காது கேளாமை இருந்தால், உடனே டாக்டரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் இது குழந்தையின் பேச்சுத் திறனையும் பாதிக்கும். மொபைல் போன் கதிர்வீச்சு காரணமாகக் கூட கேட்கும் திறன் பாதிப்படையலாம்.

என்ன செய்ய வேண்டும்: காதில் அழுக்கை சுத்தம் செய்கிறோம் என்ற பேரில், கண்ட கண்ட குச்சியை பயன்படுத்துவது, காதின் கேட்கும் திறனை பாதிக்கும். இதற்கு பதிலாக, அதற்கென தயாரிக்கப்பட்ட பஞ்சு உள்ள குச்சியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பலத்த சத்தம் ஏற்படும் இடங்களில் வேலை செய்வோர், ஒலித்தடுப்பு கருவிகளை பொருத்திக் கொண்டால், காது கேளாமையில் இருந்து தப்பிக்கலாம்.
*பூச்சி எதாவது காதில் நுழைந்து விட்டால், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். இது பூச்சியைக் கொன்று விடும்.

கருவிகள்:
தற்போது அறிவியல் வளர்ச்சியின் முன்னேற்றத்தால், டிஜிட்டல் மற்றும் புரோகிராம் செய்யப்பட்ட காது கேட்கும் கருவிகள் வந்து விட்டன. இதை "ஹெட் போன்' போல மாற்றிக் கொள்ள முடியாது. இதை பயன்படுத்த பயற்சி பெற வேண்டும். ஈ.என்.டி., டாக்டர்களின் ஆலோசனையின் பேரில், இதை பொருத்திக் கொள்ளலாம். காது கேளாதோரின் கேட்கும் திறனைப் பொறுத்து, இக்கருவியின் ஒலி அளவை நிர்ணயிக்கப்படுகிறது. இது நிரந்தரமாக காது கேளாமை பிரச்னையை தீர்க்காது. ஆனால் காது கேட்பதற்கு இந்த கருவி உதவும்.

>>>நீதிமன்றத்தில் முறையிட பி.டி.எஸ்., மாணவர்கள் முடிவு

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின், தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறையை எதிர்த்து, மீண்டும் கோர்ட்டிற்கு செல்ல உள்ளதாக, தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை, கடந்த ஆண்டு ஆகஸ்டில், எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ்., மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது.
இதன்படி, ஒரு பாடத்தில், எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் எடுத்தால், தேர்ச்சி என்ற நடைமுறை இருந்தது. இது, எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளில், தனித்தனியாக, 50 மதிப்பெண் எடுத்தாக வேண்டும் என, மாற்றப்பட்டது.
இந்திய பல் மருத்துவக் கழக விதிமுறைகளுக்கு, இது எதிரானது எனக் கூறி, கடந்த ஆண்டு அக்டோபரில், பி.டி.எஸ்., பயிலும் மாணவர்கள் சார்பில், சென்னை ஐ கோர்ட்டில், 40க்கும் மேற்பட்ட, "ரிட்" மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த ஐகோர்ட், "மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு, முந்தைய நடைமுறைகளின்படியே, ஆண்டுத் தேர்வு நடத்த வேண்டும்&' என, கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரியில், பி.டி.எஸ்., மாணவர்களுக்கான துணைத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், "மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்துகிறோம்&' என, கூறி, புதிய மதிப்பெண் முறைக்கு, மருத்துவப் பல்கலை, இந்திய பல் மருத்துவக் கழகத்திடம், கடந்த ஜனவரியில், சிறப்பு அனுமதி வாங்கியது.
கடந்த மாதம் நடந்த, பி.டி.எஸ்., ஆண்டுத் தேர்வு, புதிய மதிப்பெண் முறையில் நடத்தப்பட்டுள்ளது. இதில், தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளதையடுத்து, தேர்வில், பழைய மதிப்பெண் முறையை பின்பற்றக்கோரி, பி.டி.எஸ்., மாணவர்கள், மீண்டும் கோர்ட்டிற்கு செல்ல உள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பல் மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அருளப்ப ராஜ் கூறியதாவது:
பழைய மதிப்பெண் முறையில், "தியரி" பிரிவில், எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் தொடர் மதிப்பீட்டுத் தேர்வு ஆகியவற்றுக்கு, தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். இம்மூன்று தேர்வுகளையும் சேர்த்து, 50 சதவீதம் மதிப்பெண்; செய்முறைத் தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு, 50 மதிப்பெண் எடுத்தால், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிடலாம். புதிய மதிப்பெண் முறையில், மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவுகளிலும், தனித்தனியே குறைந்தபட்சம், 50 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
இதனால், கடந்த ஆண்டு வரை, 75 சதவீதமாக இருந்த, பி.டி.எஸ்., மாணவர்களின் தேர்ச்சி விகிதம், தற்போது, 30 சதவீதமாக குறைந்துள்ளது. "மருத்துவப் படிப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும்" என்ற, பல்கலை துணைவேந்தரின் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், தேர்வு நேரத்தில், உடல்நிலை, குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால், ஒரு மாணவனின் மதிப்பெண் குறையலாம். எனவே, தேர்வில் ஒரு மாணவர் எடுக்கும் மதிப்பெண்களை மட்டும், அவரின் தகுதிக்கான அளவீடாக கருதுவது சரியல்ல. எனவே, தேர்வு முறையில், பழைய மதிப்பெண் முறை கோரி, விரைவில் கோர்ட்டிற்கு செல்ல இருக்கிறோம். இவ்வாறு அருளப்பராஜ் கூறினார்.

>>>திறந்தநிலை பல்கலை பி.எட். நுழைவுத்தேர்வு தள்ளிவைப்பு

அக்டோபர் 14ம் தேதி நடக்க இருந்த பி.எட்., நுழைவுத்தேர்வு, அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திறந்தநிலை பல்கலை, பி.எட்., (சிறப்புக் கல்வி) நுழைவுத் தேர்வு, அக்டோபர் 14ம் தேதி நடக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதால், விண்ணப்பதாரரின் கோரிக்கையை ஏற்று, பி.எட்., நுழைவுத் தேர்வு, 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு பதிவாளர் அறிவித்துள்ளார்.

>>>சிறுபான்மை மாணவர்களுக்கு ஆன்-லைனில் உதவித்தொகை

தொழிற்கல்வி பயிலும், சிறுபான்மை மாணவர்கள், ஆன்-லைனில் உதவித்தொகை பெறுவதற்கான, புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய சிறுபான்மை நலத்துறை, 2012- 13 கல்வியாண்டில், தொழில் கல்வியில் பட்டமேற்படிப்பு பயிலும், சிறுபான் மை மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற, ஆன்-லைனில் விண் ணப்பிக்கும் முறையை, அறிமுகப்படுத்தி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த, தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து, உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள், www.momascholaship.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...