கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பழைய பென்ஷன், புதிய பென்ஷன்! பணப்பலனில் என்ன வித்தியாசம்?

 மத்திய - மாநில அரசு ஊழியர் களுக்கான பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ‘மீண்டும் பழைய பென்ஷன்’ என்பதே ஊழியர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. காரணம், பணப்பலன்! இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதெனில் மாதாந்திர பென்ஷன்!

பழைய பென்ஷன் என்ன கிடைக்கும்?

தமிழக அரசில் 31.3.2003-க்குமுன்பும், மத்திய அரசில் 31.12.2003-க்குமுன்பும் அரசுப்பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெறுவோர்க்குத் தரப்படுவது பழைய பென்ஷன் திட்டம். மாதாந்திர பென்ஷன், குடும்ப பென்ஷன், கிராஜுட்டி, பென்ஷன் கம்யூடேசன் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும். இந்த நான்கு வகைப் பணப்பலனும் அரசே வழங்குபவை. இதற்காக ஊழியர்கள் தமது சம்பளத்திலிருந்து சந்தா தொகையாக எதுவும் செலுத்தத் தேவையில்லை.

புதிய பென்ஷன் திட்டம்

பழைய பென்ஷன் திட்டத்துக்கு மாற்றாக வந்திருக்கும் புதிய பென்ஷன் திட்டத்துக்கு  மத்திய அரசாங்கம் வைத்திருக்கும் பெயர் தேசிய பென்ஷன் திட்டம் (National Pension System).  சுருக்கமாக, என்.பி.எஸ். இந்தத் திட்டத்தின் படி, ஊழியரின் சம்பளத்திலிருந்து 10% தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ‘பென்ஷன் நிதி’யில் சேர்க்கப்படும். மத்திய அரசும் தனது பங்களிப்பாக ஊழியரின் அடிப்படைச் சம்பளம் + அகவிலைப் படியில் 10% தொகையை ஊழியரின் பென்ஷன் கணக்கில் வரவு வைக்கும். இதனை பென்ஷன் நிதிஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory And Development Authority of India) நிர்வகிக்கும்.

என்.பி.எஸ். திட்டம் சார்ந்த மத்திய அரசு ஊழியர் ஓய்வுபெறும் போது குறைந்தபட்சம் 40% முதிர்வுத்தொகையை மாதாந்திர பென்ஷன் பெற முதலீடு செய்துவிட்டு, 60% தொகையை ஒட்டு மொத்தமாகப் பெற்றுச் செல்லலாம். முதலீடு செய்த தொகைக்கு, சந்தை நிலவரப்படி கிடைக்கும் தொகை மாதாந்திர பென்ஷனாகக் கிடைக்கும். இதுவே என்.பி.எஸ்.-ன் அடிப்படை.

ரத்து செய்யப்பட்ட சலுகைகள்

புதிய பென்ஷன் திட்டம் வந்தபின் பழைய பென்ஷன் திட்டத்திலிருந்து ரத்து செய்யப்பட்ட சலுகைகள்...

* அரசே மாதாந்திர பென்ஷன் தருவதற்குப் பதிலாக ஊழியரின் முதலீட்டிலிருந்து மாதாந்திர பென்ஷன் பெறவேண்டி உள்ளது.

* குடும்ப பென்ஷன் இல்லை.

*  கிராஜுட்டி கிடைக்காது.

*  பென்ஷன் கம்யூடேசனுக்கு வாய்ப்பில்லை.

திரும்பக் கிடைத்த சலுகைகள்

ஆனால், பழைய பென்ஷன் திட்டத்தில் இருந்த சில சலுகைகள் பின்னர் என்.பி.எஸ் திட்டத்துக்கும் கிடைத்துள்ளன. அவை...

*  பணியில் இருக்கும்போது இறந்துபோகும் என்.பி.எஸ். உறுப்பினரின் குடும்பத்துக்கும் (2009 முதல்) குடும்ப பென்ஷன் கிடைக்கும்.

*  பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ளது போலவே, என்.பி.எஸ்.-க்கும் (2016-ல்) கிராஜுட்டி வந்து சேர்ந்துவிட்டது.

*   பத்து சதவிகிதமாக இருந்துவந்த அரசுத்தரப்பு பென்ஷன் பங்களிப்புத் தொகை 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

*  அரசின் பங்களிப்பு உயர்வதனால், 10+10= 20% என இருந்த என்.பி.எஸ். பென்ஷன் சந்தா, 10+14= 24 சதவிகிதமாக உயரும். இதனால் ஓய்வுபெறும்போது கிடைக்கும் என்.பி.எஸ். முதிர்வுத்தொகை அதிகரிக்கும்.

இந்த முதிர்வுத் தொகை முழுவதையும் பென்ஷனுக்கான முதலீடாக விட்டு வைத்தால் கிடைக்கக்கூடிய என்.பி.எஸ். பென்ஷன் தொகை, பழைய பென்ஷன் தொகையைவிட அதிகமாக இருக்கும் என்பது கணக்கீடு.

அடிப்படைக் கேள்வி

என்.பி.எஸ். திட்டத்தின்மூலம் கிடைக்கும் முதிர்வுத் தொகை முழுவதையும் பென்ஷனுக்கான முதலீடாக விட்டு வைத்தால், பழைய பென்ஷனை விட, என்.பி.எஸ். பென்ஷன் அதிகமாக இருக்கும் என்றால், பழைய பென்ஷனையே வழங்கலாமே என்று கேட்கலாம், காரணம் என்னவெனில், என்.பி.எஸ். திட்டத்தின்கீழ் மத்திய அரசு தனது பங்களிப்பாக, ஊழியர்களின் இப்போதைய சம்பளத்தில் 14% மட்டும் செலுத்தினாலே போதுமானது. இதுவே பழைய பென்ஷன் என்றால் ஊழியரின் அப்போதைய சம்பளத்தில் அதாவது, ஓய்வு பெறும்போது பெறப்போகும் சம்பளத்தில் 50% + அகவிலைப்படி தரவேண்டி இருக்கும்.

என்.பி.எஸ். சந்தாவை 30 ஆண்டுக் காலம் முதலீடு செய்வதால், 10% - 12% வரை கூட்டு வளர்ச்சி அடைய வாய்ப்புண்டு என்று எதிர்பார்க்கலாம். இதனால்தான் என்.பி.எஸ். பென்ஷன் தொகை பழைய பென்ஷனைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் அரசின் நிதிச்சுமை குறையவும் வழி வகுக்கிறது.

மத்திய அரசில் தற்போது, பழைய பென்ஷன் மற்றும் என்.பி.எஸ். எனும் தேசிய பென்ஷன் திட்டம் ஆகிய இரண்டும் நடைமுறையில் உள்ளன.

தமிழக அரசு ஊழியர்களுக்கான சி.பி.எஸ்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டம் 31.03.2003 வரை அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கே பொருந்தும். 01.04.2003 அன்றும், அதன்பிறகும் தமிழக அரசுப் பணியில் சேர்ந்த ஏ, பி, சி, டி உள்ளிட்ட நான்கு பிரிவினருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே (Contributory Pension Scheme) அதாவது,  சி.பி.எஸ். திட்டமே நடைமுறையில் உள்ளது இந்தத் திட்டத்தின்கீழ் 5,06,000-க்கும் அதிகமான ஊழியர்கள் இதன் சந்தாரர்களாக உள்ளனர். சி.பி.எஸ் திட்டத்தைத் தமிழக அரசு, தனது கருவூலக் கணக்குத் துறை மூலம் நிர்வகிக்கிறது.

சி.பி.எஸ். திட்டத்தின்படி, ஒரு ஊழியரின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படுகிறது. அரசுத் தரப்புப் பங்களிப்பாக 10% சேர்க்கப்பட்டு, மாதந்தோறும் 20% பென்ஷன் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஓய்வுபெறும் ஊழியருக்கு அவரது சந்தா, அதற்கான வட்டி, அரசின் பங்களிப்பு சந்தா மற்றும் அதற்கான வட்டி ஆகிய நான்கு இனங்களும் தனித்தனியே பட்டியலிடப்பட்டு ஊழியரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

இந்த முதிர்வுத் தொகையை முதலீடு செய்து மாத வருமானத்துக்கு வழிசெய்துகொள்வது ஊழியரின் விருப்பம் சார்ந்தது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை மாற்றம் ஏதுமின்றி தொடர்கிறது. இதற்கான வட்டி விகிதம் ஜி.பி.எஃப்-க்கு உள்ள வட்டி விகிதம்தான்.

தமிழக அரசில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எஃப்ஸ் போன்ற அகில இந்திய அதிகாரிகளும் (All India Service Officers) பணிபுரிகின்றனர். 01.01.2004-க்குப்பிறகு பணிக்கு வந்த இவர்களுக்கு மத்திய அரசின் என்.பி.எஸ். திட்டமே பொருந்தும். எனவே, இவர்களுக்கான சந்தா தொகையை, பென்ஷன் நிதிய ஆணையத்துக்கு (PFRDAI) செலுத்தி வருகிறது தமிழக அரசு. ஆக மொத்தம், பழைய பென்ஷன், என்.பி.எஸ்., மற்றும் சி.பி.எஸ். ஆகிய மூன்று பென்ஷன் திட்டங்கள் தமிழக அரசில் உள்ளன.

வேறுபடும் பணப்பலன்...

பழைய பென்ஷன்,  என்.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். திட்டங்களின்கீழ் ஓய்வு பெறும் போது கிடைக்கும் பணப்பலன் வேறுபடுகிறது. அவ்வாறு வேறுபடும் பணப்பலன் எவ்வளவு என்பதை ஒப்பீட்டு அட்டவணையில் தரப்பட்டு உள்ளது. 01.01.2006 அன்று, தமிழக அரசுப் பணியில் சேர்ந்து 31.03.2036 அன்று ஓய்வு பெற உள்ள ஓர் அலுவலர் இந்த அட்டவணைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்தக் கணக்கீடு எவற்றின் அடிப்படையில் செய்யப் பட்டுள்ளது என்பதற்கான விளக்கம் இனி...

* 31.03.2025 வரை ஏழாவது சம்பள கமிஷன்படி அடிப்படைச் சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது.

* 01.01.2026 முதல் 1.84 என்ற காரணியின் அடிப்படையில் சம்பள நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நான்கு பதவி உயர்வுகள் தரப்பட்டு உள்ளன. 

* என்.பி.எஸ்-ல் அரசின் பங்களிப்பு 31.03.2019 வரை 10% எனவும், 01.04.2019 முதல் 14% எனவும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

* என்.பி.எஸ். வளர்ச்சி 10% என்ற அளவிலும், முதிர்வுத் தொகை மூலமான பென்ஷனுக்கு 8% வட்டியும் கணக்கிடப் பட்டுள்ளது. 

* சி.பி.எஸ்-க்கு 8% வட்டி கணக்கிடப்பட்டுள்ளது. 

* தற்போதைய நிலவரத்துக்கு ஏற்றபடி அகவிலைப்படி கணக்கிடப்பட்டுள்ளது.

சில சலுகைகள் இல்லாமல் போனாலும்,  தற்போதைய நிலையில் என்.பி.எஸ். திட்டமே பெஸ்ட் என்பதில் சந்தேகமில்லை!

- ப.முகைதீன் சேக்தாவூது (நன்றி: விகடன்.com)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...