கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள் ஜனவரியில் திறக்கப்பட உள்ளன. இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால், தொழில்கள் நலிவுற்று, வருமானம் குறைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்தனர். இதனால், அரசு பள்ளிகளில், இந்தாண்டு ஐந்து லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில், தேவையின் அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.
இதற்காக, தமிழகம் முழுதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சேகரிக்க, இணை இயக்குனர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, இதுகுறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காலியிடங்களின் பட்டியல் வந்ததும், உபரியாக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் இருந்து, தேவைப்படும் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.