'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள், முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன,'' என, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
பள்ளி கல்வி துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: தினமும் துறை ரீதியான கூட்டம் நடக்கிறது. அதில், அதிகாரிகளின் கருத்துகள் பெறப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., மற்றும் பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய அரசு விபரங்கள் கேட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வருடன் பேசி, இன்று கடிதம் அனுப்பப்படும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கப்படும். தனியார் பள்ளிகளுக்கு நிகராக, 'ஆன்லைன்' வழி மாணவர் சேர்க்கையை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், பல்வேறு மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் வாயிலாக, தன்னார்வத்துடன் கொரோனா தடுப்பு பணிக்கு வந்துள்ளனர். அவர்களை முதல்வரே பாராட்டியுள்ளார். கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் குழுவினர், உளவியல் கவுன்சிலிங் தருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பீட்டு முறைகளுடன், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், சரியான முறையை முடிவு செய்து, முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் அறிவிக்கப்படும்.அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி களுக்கு அபராதம் விதிக்கப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், வீட்டில் இருந்து கல்வி கற்க வசதியான, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
>>> பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி...