தமிழகம் முழுவதிலும் உள்ள B.Ed கல்லூரிகளில் 30 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் கல்லூரிகளில் 26ஆம் தேதி முதல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் இயங்கி வரும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது என தெரிவித்தார்.
அதற்கான விண்ணப்பங்கள் 26-02-2021 முதல் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் மாணவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார். அதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடக்க உள்ளதை அடுத்து இன்று முதல் அதற்கும் விண்ணப்பங்கள் பெறப்படுவது தொடங்கியுள்ளது. இந்த வகை மாணவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
மேலும் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையிலும் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் B.Ed கல்லூரிகளில் கட்டணமாக ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்க கூடாது என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில கல்லூரிகளில் அதையும் மீறி சில அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கிறது. இது குறித்து ஆலோசித்து ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.