கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படுவது சாத்தியமா (Is it possible to implement the Old Pension Scheme)...



 உத்தரவாதமான பழைய பென்சனுக்கான தீ பற்றிக்கொண்டது...


ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாத் தனது நிதிநிலை அறிக்கையில் பிப்ரவரி 22, 2022 ல்


“அடுத்த நிதி ஆண்டிலிருந்து 2004 முதல் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பழைய பென்சன் அமுல்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளார்.


அறிவித்தது காங்கிரசு முதல்வர். புதிய பென்ஷன் திட்டத்தை சட்டமாக்கியதே காங்கிரஸ் அரசு தான். ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் அதை அமுல்படுத்தியது வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு. இடதுசாரிகளைத்தவிர அனைத்து கட்சிகளும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தன. புதிய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தின.


எனவே ராஜஸ்தான் அரசின் அறிவிப்பு உண்மைதானா? சாத்தியமா? என்று ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர். 


ராஜஸ் தானில் 5.6 லட்சம் பழைய பென்சன் பெறும் ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆகும் செலவு ரூ23000 கோடி. 5.5 லட்சம் புதிய பென்சன் ஊழியர்கள் இருக்கிறார்கள்.இவர்களுக்காக அரசு ஆண்டு தோறும் அளிக்கும் பங்களிப்பு தொகை ரூ 29000 கோடி. இது ஆண்டுதோறும் 7.5 சதம் அதிகரிக்கும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. எனவே ”மாநில அரசு நிதிச்சுமையை கணக்கில் கொண்டு குறுகிய கால லாப கண்ணோட்டத்தில் பழைய பென்சனை அமல்படுத்துகிறது” என்று எக்ஸ்ப்ரெசும் பிசினஸ்லைனும் குறை கூறுகின்றன. புதிய பென்சனில் நிதிச்சுமை கூடுதலாகும் என்று மேற்கு வங்க இடதுசாரி அரசில் நிதி அமைச்சராக இருந்த அசிம்தாஸ் குப்தா அப்போதே கூறினார்.


சத்திஸ்கர் மாநிலம் அறிவிப்பு


ராஜஸ்தானை தொடர்ந்து மார்ச் 9 அன்று சத்திஸ்கர் முதல்வர் புதிய பென்சனில் உள்ள அனைத்து மாநில அரசு ஊழியர்களும் பழைய பென்சனுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்துவிட்டார். அத்துடன் அவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்சனை ரத்து செய்ய கோரிக்கை வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும்  அசாமிலும் அந்த முதல்வர்களுக்கு நிர்பந்தம் எழுந்துள்ளது.


இமாச்சலப்பிரதேசத்தில்


பாஜக ஆளும் இமாச்சலப்பிரதேசத்தில் ராஜஸ்தான் அறிவித்த மறு நாளில் இருந்து அதாவது பிப்ரவரி 23 முதல் 9 நாள்  மாநிலம் முழுதும் பாத யாத்திரை நடத்தி மார்ச் 3 ஆம் தேதி தலை நகர் சிம்லா வில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. இதை நடத்தியது யார் தெரியுமா? புதிய பென்சன் திட்ட ஊழியர் சங்கம். இதன் விளைவாக மார்ச் 9 அன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன் மொழிந்து சட்ட மன்றத்தில் உரையாற்றிய பாஜக முதல்வர் ஜெய்ராம் தாக்குர் பழைய பென்சனை அமுலாக்குவது பற்றி பரிசீலிக்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


இடதுசாரிகள் புதிய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தவில்லை


29 மாநிலங்களில் மேற்கு வங்கம் தவிர மற்ற 28 மாநிலங்களில் புதிய பென்சன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மார்க்ஸிஸ்ட் கட்சி தலைமை வகித்த இடதுசாரிகள் ஆண்ட வரை மேற்கு வங்கம், கேரளா, திரிபுராவில் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தாமல் பழைய பென்சனே வைத்திருந்தனர். கேரளாவில் காங்கிரசு வந்த பின் 2013 முதலும் திரிபுராவில் பாஜக வந்தபின் 2018 முதலும் புதிய பென்சன் திட்டம் அமல் படுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் மமதா பழைய பென்சனை தொடர்கிறார். அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 2022 ஜனவரி 31ல் 55,14,516 பேர் புதிய பென்சன் திட்டத்தில் உள்ளனர். தமிழக புதிய பென்சன் திட்ட ஊழியர்கள் இந்த கணக்கில் வராது. ஏனெனில் அவர்களது கணக்கு இன்னும் Pension Fund Regulatory and Development Authority (PFRDA) வுக்கு அனுப்பப்படவில்லை.


வாக்குறுதிகள்


தெலிங்கானாவில் தேர்தல் வாக்குறுதியில் ”புதிய பென்சனை ரத்து செய்வோம்” என்று வாக்குறுதி அளித்த சந்திரசேகர் அரசு, ஊழியர்களின் போராட்டத்திற்குப்பிறகும் ”இது மத்திய சட்டம். மத்திய அரசு தான் இதனை ரத்து செய்யவேண்டும்” என்று கைகழுவி விட்டுவிட்டார். ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும், பின்னர் ஒரு கமிட்டி போட்டு அமைதி காக்கிறார். கேரளாவில் 2016 தேர்தலில் வெற்றி பெற்ற இடது முன்னணி, தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சனை மீண்டும் அமல் படுத்த வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஏனோ இன்னும் புதிய பென்சனை ரத்து செய்யவில்லை. செய்திருந்தால் இடதுசாரிகள் முன்னுதாரணமாக ஆகி இருப்பார்கள். உத்தரப்பிரதேச தேர்தலில் சமாஜ்வாதி கட்சி இப்போது அதே வாக்குறுதியை அளித்துள்ளது.


பெரும்பாலான ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் வந்துள்ளதும், இந்தப் புதிய பென்ஷன் திட்டத்தின் அநியாயம் பற்றிய விழிப்புணர்வு பெருகி உள்ளதும், எல்லா மாநிலங்களிலும் போராட்டம் வலுப்பெற்றுள்ளதும், இந்த கோரிக்கைக்கு அரசியல் ஆதரவு கிட்டியிருப்பதும் மாநில தேர்தல்களில் இந்த கோரிக்கை பிரதிபலிக்கத் துவங்கியுள்ளது.  தமிழகத்தில் கூட அரசு ஊழியர்கள் தமிழக அரசு ஊழியர் சங்கத் தலைமையில் வேலை நிறுத்தங்கள் உட்பட பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக எந்த கட்சியும் இந்த கோரிக்கையை நிராகரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. திமுக தன் தேர்தல் அறிக்கையில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வாக்களித்துள்ளது. படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை அமல் படுத்துவோம் என்று முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் அறிவித்துள்ளார். அமல்படுத்தவில்லை என்றால் ஊழியர்கள் விடமாட்டார்கள்.


மாநில அரசு மாற்ற முடியுமா?


தெலிங்கானா முதல்வர் சொல்வது சரிதானா என்று பார்ப்போம். சட்டம் மத்திய சட்டம்தான். ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்குத்தான் அது கட்டாயம். சட்டத்தின் 12(4) பிரிவு கூறுவது என்ன.


“மாநில அரசுகள் விரும்பினால் ஒரு அறிவிக்கை மூலம் தனது ஊழியர்களை தேசிய பென்சன் திட்டத்தில் கொண்டு வரலாம்.”


மத்திய சட்டம் நேரடியாக அவர்களுக்கு பொருந்தாது.


அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய பேச்சு இன்னும் மக்களவை இணைய தளத்தில் உள்ளதை பாருங்கள்;


“மாநில அரசுகள் சேர கடமைப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தாங்களாக விரும்பி சேர்ந்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்குத்தான் இது 1-1-2004 முதல் கட்டாயம்” (The state governments were not obliged to join. They joined voluntarily. Only for the central government employees, it is mandatory from 1-1-2004)


தெலிங்கானா அரசு ஊழியர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு மாநில அரசு விரும்பினால் புதிய பென்சன் திட்டத்தை திரும்பபெற முடியும் என்று PFRDA பதில் அளித்துள்ளது. ஓர் அரசாணையின் மூலம் அவர்களை புதிய பென்சனிலிருந்து விலக்கிவிடலாம். கேரளா குறித்து கேட்ட கேள்விக்கும் அதே பதிலை அளித்தது PFRDA. எனவே சட்டம் தடை இல்லை.


திரும்பிப் போக முடியுமா?


15 ஆண்டுகள் கழித்து திரும்பிப்போக முடியுமா? என்று கேட்கப்படுகிறது. போக முடியும் என்பதுதான் பதில்.


1-1-2004 முதல் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு இது கட்டாயம். ஆனால் சில நீதி மன்ற தீர்ப்புகளுக்குப் பின் மத்திய அரசு 1-1-2004 க்கு முன் தேர்வாகி, 1-1-2004 அன்றோ அல்லது அதற்கு பின்போ வேலையில் சேர்ந்தவர்கள் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் இருந்தால், 15 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் அவர்களை பழைய பென்சனில் கொண்டுவர மத்திய அரசு 17-2-2020ல் உத்தரவு போடவேண்டியதாகிவிட்டது. அவ்வாறு பலர் இப்போது பழைய பென்சனுக்கு மாறி விட்டார்கள். PFRDA ஒவ்வொருவர் கணக்கிலும் ஊழியர்களது பங்களிப்பு, அரசு பங்களிப்பு என தனித்தனியாக பராமரிக்கிறது. பழைய பென்சனுக்கு மாறுகிறவர்களின் சொந்தப் பங்களிப்பு தொகையை அவர்களுக்கு PF கணக்கு திறந்து அதில் செலுத்திவிட்டது. அரசின் பங்களிப்பு தொகையை அரசே எடுத்துக்கொண்டது.


இதே முறையை பின்பற்றி அனைத்து ஊழியர்களையும் பழைய பென்சனில் கொண்டு வருவதற்கு எதுவும் தடை இல்லை. கொள்கைதான் தடை. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் கணக்கில் 5.66 லட்சம் கோடி உள்ளது. இதை பங்கு சந்தையில் போடவேன்டும். பென்சனை தனியார் மயமாக்க வேண்டும். இதுதான் சீர் திருத்தம். இதிலிருந்து பின்வாங்கக்கூடாது. என்பதுதான் அவர்களின் கொள்கை.


மாநில அரசுகள் பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்தினால் ஆண்டு தோறும் அவர்கள் அளிக்கும் பங்குத்தொகை செலவு இருக்காது. செல்லும்போது செலவு என்னும் முறை தான் இருக்கும்.(pay-as-you-go-system). அரசு இதுவரை செலுத்திய பங்குத்தொகை மொத்ததமாக அரசுக்கு  கிடைக்கும். நிதி பற்றாக்குறையை சமாளிக்கலாம்.


அநியாயமான புதிய பென்சன் திட்டம்


புதிய பென்சன் போதுமான பென்சனுமல்ல. உத்தரவாதமான பென்சனும் அல்ல.  ஒருவர் ரெயில்வேயில் 14 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வு பெற்றார். அவரது அடிப்படை சம்பளம் ரூ 46000.


பழைய பென்சன் திட்டத்தில் 10 ஆண்டு பணி முடித்து ஓய்வு பெற்றாலே ரெயில்வேயில் முழு பென்சன் உண்டு. அதாவது பாதி  சம்பளம். அதாவது ரூ 23000 பென்சன் தொகை. இதில் 40% அதாவது ரூ9200 கம்யூட் செய்யலாம். அதை கழித்தால் அவரது மாத பென்சன் ரூ 13800. கம்யூட் செய்தாலும் அடிப்படை பென்சனான 23000 க்கு பஞ்சப்படி 6 மாதத்துக்கு ஒரு முறை கிடைக்கும். கம்யூட்டேசன் தொகையாக ரூ 9 லட்சம் கிடைக்கும். ஊழியர் இறந்தால் இணையருக்கோ, விதவை, மணமாகாத, விவாகரத்து பெற்ற மகள்கள் யாருக்காவது பென்சன் கிடைக்கும். பழைய பென்சனில் பிஎஃப் வேறு உண்டு அவர் சேமிப்பில் இருக்கும் தொகை வேறு அவருக்கு கிடைக்கும்.


புதிய பென்சன் திட்டத்தின்படி அவர் கணக்கில் இருந்தது ரூ12 லட்சம். 60 சதம் அதாவது ரூ 7.2 லட்சம் அவர் எடுத்துக்கொண்டார். 4.8 லட்சம் அவர் பென்சனுக்காக ஆனுவிட்டியில் முதலீடு செய்தார். ஒரு லட்சத்துக்கு ரு 523 வீதம் அவருக்கு கிடைப்பது வெறும் ரூ 2510. பழைய பென்சனில் அடிப்படை பென்சன் ரூ 13800 ம் அதற்கான பஞ்சப்படியும் கிடைக்கும். எனவே இது பழைய பென்சனுக்கு ஈடு இல்லை. அத்துடன். ஆனுவிட்டி கம்பெனிகள் அந்தத் தொகை 4.8 லட்சத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள். அசலே பறிபோகும் அபாயம் இருப்பதாக செபி கூறுகிறது. குறைந்தபட்ச பென்சன் உத்தரவாதமும் கிடையாது. ஊழியர் இறந்தால் இணையருக்கு அதே தொகை கிடைக்கும். வேறு யாருக்கும் கிடைக்காது. எனவே இது உத்தரவாதமுமில்லை. போதுமானதும் கிடையாது. இதற்கு பஞ்சப்படி கிடையாது. பிஎஃப் கிடையாது.


புதிய பென்சன் திட்டம் எந்த நியாயமும் இல்லாதது. எனவே தான் இன்று எந்த தொழிற்சங்கமும் இதை ஆதரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவின் சங்கமான பிஎம்எஸ் கூட புதிய பென்சனை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் முதல்வரே ராஜஸ்தானில் அதன் அநியாயம் குறித்து பேசி ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே இனி புதிய பென்ஷன் திட்டம் நல்லது என்று சொல்லி யாரும் ஊழியர்களை ஏமாற்ற முடியாது. சாத்தியமில்லை என்று சொல்லியும் ஏமாற்ற முடியாது. அவர்களின் போராட்டம் இறுதி வெற்றி பெறும் வரை ஓயாது. அரசியல் நிர்பந்தம் வெற்றிக்கு வழி வகுக்கும்.


அக்கினிகுஞ்சு ஒன்று பொந்திடை வைத்தாகிவிட்டது. வெந்து தணியும் காடு. இது காட்டுத்தீ போல பரவும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2024 இதழ்

    தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2024 இதழ்  - Then Chittu - 01-15 November 2024 Magazine  தேன்சிட்டு - 01-15 நவம்பர் 2024 மாதமிருமுறை இதழ் - உ...