பர்கூர் அருகே தேர்வு அறையில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் மீது புகார்
Teacher accused of sexually harassing student in exam room
பர்கூர் அருகே பிளஸ் 2 மாணவிக்கு தேர்வு அறையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முதுகலை ஆசிரியர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி அடுத்து திருவண்ணாமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தவர் 17 வயது மாணவி. இவர் நேற்று 18ஆம் தேதி கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் உள்ள அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த உயிரியல் தேர்வினை எழுத சென்றார்.
அப்போது அந்த மாணவி தேர்வு எழுதிய அறையின் மேற்பார்வையாளராக வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ்(44) என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த அந்த 17 வயது மாணவியின் மார்பில் கை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி செய்வதறியாமல் திகைத்துள்ளார். இதனால் அந்த சிறுமியால் தேர்வினை சரிவர எழுத முடியாமல் திணறியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்வு முடிந்த பின் வெளியே வந்த அந்த சிறுமி, மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியிடம், அவர் பயின்ற பள்ளியின் முதல்வர், ஏன் சோகமாக இருக்கிறாய். தேர்வு சரியாக எழுதவில்லையா என கேட்டுள்ளார். அப்போது தேர்வு அறையில் தன்னிடம் ஆசிரியர் ரமேஷ் நடந்து கொண்ட சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதே போல் அதே அறையில், அதே பள்ளியை சேர்ந்த தேர்வு எழுதிய மாணவி ஒருவரும், தன்னிடமும் அவ்வாறு ஆசிரியர் ரமேஷ் நடந்துகொண்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பள்ளியின் முதல்வர் இது குறித்து, அந்த தேர்வு மையத்தின் பொறுப்பாளரான மேகலசின்னம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் மற்றும் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார், ஆசிரியர் ரமேசை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.