கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - துரை வைகோ MP

 


இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் - துரை வைகோ MP


இந்தியாவில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித் தேர்வு அவசியமா?' என்பது குறித்து மூன்று உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டன.


வழக்கின் விசாரணையில், 'கட்டாய கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 23, துணைப் பிரிவு 1ன்கீழ் 2011, ஜூலை 29 அன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பாக புதிதாக சேர்க்கப்பட்ட விதிமுறையின்படி ஆசிரியர் பதவி உயர்வுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.


இந்த வழக்கில்  செப்டம்பர் 1 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபான்கர் தத்தா மற்றும் மன்மோகன் அமர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) நடத்துவதற்கான காரணம் குறித்து தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) 2011, பிப்ரவரி 11 அன்று வெளியிட்ட அறிவிப்பை மேற்கோள் காட்டியுள்ளது.


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு டெட் தேர்ச்சி பெறுவது கட்டாய நிபந்தனை எனக் கூறப்பட்டுள்ளது.


டெட் தேர்வு குறைந்தபட்ச தகுதி அளவுகோல்களின் முக்கிய பகுதியாக உள்ளது.


டெட் தேர்வின் மூலம் தேசிய தரநிலைகள் மற்றும் ஆசிரியர் தரத்துக்கான அளவுகோல் கொண்டு வரப்படுகிறது.


மாணவர்களின் செயல் திறனின் தரத்தை மேலும் மேம்படுத்துவதை ஊக்குவிக்கும். ஆசிரியருக்கான தரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும்போது அது அனைத்து தரப்பிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.


இதனைக் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், 'தொடக்கக் கல்வியை வழங்கும் நிறுவனங்களுக்கு, சீரான கற்பித்தல் தரத்தை உறுதி செய்வது நோக்கமாக உள்ளது. தகுதித் தேர்வு என்பது கட்டாய கல்வித் தகுதி மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏ படி தரமான கல்வி உரிமைக்கான தேவையும் ஆகும்' எனத் தெரிவித்துள்ளது.


'ஆசிரியர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142ன்கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் டெட் தகுதி பெறாமல் ஓய்வு பெறும் வயதை அடையும் வரை பணியில் தொடரலாம்' எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


ஆனால், அவர்கள் பதவி உயர்வுக்கு விரும்பினால் டெட் தேர்ச்சி பெறாமல் தகுதி உடையவராக கருதப்பட மாட்டார் எனத் தெளிவுபடுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


அந்தவகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த தீர்ப்பின்படி,

1 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் தொடர்வதற்கு டெட் தேர்வு கட்டாயம்.


டெட் தேர்வு எழுத விருப்பம் இல்லாத ஆசிரியர்கள், பணியில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது ஓய்வுகால சலுகைகளைப் பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வு வழங்கலாம் .


தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் அரசின் கணக்குப்படி 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் உயர்நிலைப் பள்ளிகளில் 31,531 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 82 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.


இவர்களில் ஐந்தாண்டுகளில் ஓய்வு பெறும் ஆசிரியர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு மேல் டெட் தேர்வு எழுத வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை அது மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது.'அதுமட்டுமில்லாமல் பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் இந்தியா முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்படைவதால் ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.


இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க ஒன்றிய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றிய ,மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.


தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனால், அரசு பள்ளி ஆசிரியர்கள் 1,38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் 38 ஆயிரம் பேரும் என மொத்தம் 1,76,000 ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள்.


தேசிய கல்வி ஆசிரியர் கவுன்சிலின் (NCTE) 2011 அறிவிப்பு, கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமைச் சட்டம் (RTE Act, 2009) பிரிவு 23-ஐ அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயித்தது தவறில்லை. ஆனால், அதை முன் தேதியிட்டு அமல்படுத்துவதும், தொடர்ந்து தகுதியை நிரூபிக்க தேர்வு கட்டாயமாக்கபடுவதும் ஏற்புடையதல்ல.


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு இலவச கல்வி உரிமைச் சட்டம் -2009, பிரிவு 23 இல் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.


எதிர்காலம் பற்றிய கவலை சூழ்ந்த நிலையில்  கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஒன்றிய அரசு உடனடியாக தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.


துரை வைகோ MP

முதன்மைச் செயலாளர் 

மறுமலர்ச்சி திமுக 

18.10.2025


 #MDMK #Vaiko #trichymp #DuraiVaiko


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21.10.2025 அன்று அரசு விடுமுறை ; 25.10.2025 அன்று வேலை நாள் : அரசாணை வெளியீடு

  21.10.2025 அன்று அரசு விடுமுறை ; 25.10.2025 அன்று வேலை நாள் : அரசாணை வெளியீடு Deepavali Next Day Holiday G.O. No. 581 , Dated 17.10.2025 த...