90 அரசு கலைக் கல்லூரிகளில் கல்வி கற்போர் உதவி மையத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக் கூடத்தின் வாயிலாக, தமிழகத்தில் உள்ள 90 அரசு கலைக் கல்லூரிகளில் திறந்தநிலைக் கல்வி கற்போர் உதவி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்குத் தமிழக அரசின் உயர் கல்வித்துறை அரசாணை (எண். 150) வெளியிட்டுள்ளது. இதன்படி கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்வி கற்போர் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மண்டல ஒருங்கிணைப்பாளர் என்.சரவணக்குமார் கூறும்போது, ''அரசு கலைக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ள கல்வி கற்போர் உதவி மையங்கள் மூலமாக, பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்விக்கூடத்தில் நடத்தப்படும் 38 முதுநிலை பட்டப்படிப்புகள், 42 இளநிலை பட்டப்படிப்புகள், 20 டிப்ளமோ படிப்புகள், 140 சான்றிதழ் படிப்புகள் மற்றும் குறுகிய காலப் படிப்புகள் கற்பிக்கப்பட உள்ளன.
இவை அனைத்தும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீரிக்கப்பட்ட பாடப் பிரிவுகள் ஆகும். அரசுப் பணியில் சேருவதற்குத் தகுதியுடை படிப்புகள் இவை. இணையவழி வகுப்புகள் மூலமாகப் படித்து பட்டம் பெறலாம்'' என்றார்.
இதுகுறித்துக் கல்வி கற்போர் உதவி மைய அரசு கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் எம்.புகழேந்தி கூறும்போது, ''பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் வரும் டிச.31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவோ, அரசுக் கல்லூரியிலோ சேர்ந்து கொள்ளலாம். பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 99433-75556, 98947-39777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.