பழைய ஓய்வூதியத் திட்டம் - நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு - முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதலமைச்சரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை புறக்கணிக்கக் கூடாது. மத்திய அரசின் ஓய்வூதிய புதிய அறிவிப்பு நிலைப்பாடு தான் சரி என்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. இது வாக்குறுதியை மீறிய செயல் என அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2003-ம் ஆண்டு பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜனவரி 1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதே நடைமுறையில் 01-04-2003 முதலே தமிழ்நாடு அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டப்படி, அரசு ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இது தவிர பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டது.
இதன்படி பார்த்தால் ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 15 லட்சம் ரூபாய் பெறுகிறார் என்றால், அவர்களின் மாத ஓய்வூதியம் சுமார் 62,500 ரூபாயாக இருக்கும். (ஆண்டுக்கு 15 லட்சத்தில் 50% = 7.5 லட்சம் ரூபாய் அதாவது மாதம் 62,500 ரூபாய்) ஆக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி அக விலைப் படி உயர்வுக்கு ஏற்ப இந்த தொகை அவ்வப்போது ஓய்வூதியதார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்து வருகிறது.
இந்த பழைய ஓய்வூதியம் என்பது 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் இருக்கிறது. ஆனால் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியம் தான் நடைமுறையில் இருக்கிறது. இது பெரிய அளவில் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இல்லை. ஏனெனில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சரியான தொகையை கணிப்பது கடினமாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை விட மிக குறைவாகவே உள்ளது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப் படியின் படி உயர்வு இருக்காது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.
இந்த சூழலில் மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டப்படி, உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். ஒருவர் 25 ஆண்டு அரசு பணியாற்றி ஓய்வு பெறுவார் என்று வைத்து கொண்டால் அவரது கடைசி 12 மாத சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50 சதவீதம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து 10ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். அரசு ஊழியர் இறக்கும் பட்சத்தில் அவரது ஓய்வூதியத்தில் 60 சதவீத அடிப்படையில் ஓய்வூதிய பலனாக துணைக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்து அண்மையில் சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும் போது, புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS or Unified Pension Scheme) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாக கொண்டு இருக்கும் திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் செயலாக்கத்துக்கு உரிய வழிக்காட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை என்றார்.
மேலும் தென்னரசு கூறும் போது, மத்திய அரசு புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மிக விரைவில் அந்த வழிக்காட்டுதல்கள், செயல்முறைகள் வழிகாட்டப்படும் என்று நம்புகிறோம். அது வெளியான உடனேயே நம்முடைய மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதல்வருடன் கலந்து ஆலோசித்து புதிய குழு அமைக்கப்படும். அந்த குழுவின் வழிக்காட்டுதல்படி நம்முடைய மாநிலத்தில் அந்த ஓய்வூதிய திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த நம் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார். அதாவது மத்திய அரசு அமல்படுத்தும் திட்டத்தை தமிழகத்திலும் மாநில அரசு அமல்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதே கருத்தாக உள்ளது. இந்நிலையில் பென்சன் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்மைச்சர் ஸ்டாலினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை புறக்கணிக்கக் கூடாது.
மத்திய அரசின் ஓய்வூதிய புதிய அறிவிப்பு நிலைப்பாடு தான் சரி என்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. இது வாக்குறுதியை மீறிய செயலாகும். குழு அமைக்கும் நிதி அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.