கேஸ் சிலிண்டரை சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிகள்
கேஸ் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாலும் மாற்று வழிகளை முயற்சித்து வருவதாலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், தற்போது இருப்பில் இருக்கும் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
1. முதலில் அடுப்பு பர்னர் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். நீங்கள் அடுப்பை எரிக்கும்போது மஞ்சள் நிறத்தில் இருந்தால் பர்னரில் அழுக்கு சேர்ந்திருக்கலாம். எனவே, அதனை சுத்தப்படுத்தி பயன்படுத்துவது நல்லது. அதுபோல கேஸ் செல்லும் குழாயிலும் அடைப்புகள் இருந்தால் கேஸ் அதிகமாக உறிஞ்ச வாய்ப்புள்ளது. இதற்கு கேஸ் அடுப்பைக் கடைகளில் கொடுத்து சுத்தம் செய்து பயன்படுத்தலாம். இதை இப்போது மட்டுமின்றி குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை செய்வது கேஸ் பயன்பாட்டைக் குறைக்கும்.
2. கேஸ் அடுப்புக்கு பதிலாக முடிந்தவரை இன்டக்ஷன் ஸ்டவ் எனும் மின் அடுப்பைப் பயன்படுத்தலாம். தண்ணீர் கொதிக்கவைப்பதற்கு, டீ, காபி போடுவதற்கு, முட்டை மற்றும் பருப்புகளை வேகவைப்பதற்குக்கூட பயன்படுத்தலாம். தண்ணீர் சுட வைப்பதற்கு கெட்டில்களும் உடனடி உதவியாக இருக்கும்.
3. அதேபோல பிரஷர் குக்கரை முடிந்தவரைப் பயன்படுத்துங்கள். பருப்புகள், காய்கறிகளை வேகவைப்பதற்கு பிரஷர் குக்கரை பயன்படுத்திய பிறகு சாதாரண பாத்திரத்திற்கு மாற்றி பயன்படுத்தலாம். இது அதிக சமையல் எரிவாயுவை மிச்சப்படுத்தும்.
4. நீங்கள் செய்யும் சமையல் அளவுக்கு ஏற்ப பாத்திரங்களைத் தேர்வு செய்யுங்கள். அடுப்பு எரிவதற்கு சரியான அளவில் அல்லது சற்று பெரிதாக தேர்வு செய்வது நல்லது.
5. நீங்கள் சமைப்பதற்கான காய்கறிகளை வெட்டிவைப்பது, மசாலா தயார் செய்து வைப்பது என அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வையுங்கள். அடுப்பு எரிந்துகொண்டே இருக்கும்போது பொருள்களை தயார் செய்வது கேஸ் அதிகமாக செலவாகும். கடுகு, சீரகம் போன்ற சிறிய பொருள்களையும் எடுத்து பக்கத்தில் வைத்துக்கொள்வது நல்லது. அரிசி, பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து பின்னர் சமைக்கலாம்.
6. தேவைக்கேற்ப ஒரு நேரத்தில் ஒரு அடுப்பை மட்டும் பயன்படுத்தலாம். எரியும் தீயை தேவைக்கேற்ப குறைத்துவைத்தும் பயன்படுத்தலாம்.
7. அதேபோல சாதம் வேகவைக்கிறீர்கள் என்றால் தேவைக்கேற்ப தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரை அதிகமாக வைப்பது அதிக கேஸ் செலவாகும்.
7. உணவை மீண்டும் சூடுபடுத்தும் வேலையைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
8. அடுப்பை பற்றவைத்துவிட்டால் முடிந்தவரை அனைத்து சமையல் வேலைகளையும் முடித்துவிட்டு அணையுங்கள். மீண்டும் மீண்டும் பற்றவைப்பது வேண்டாம். அதேபோல சமையல் முடிந்ததும் ரெகுலேட்டரை அணைத்துவிடலாம்.
9. பருப்பு, காய்கறிகளை தனித்தனியே வேகவைக்காமல் ஒரே குக்கரில் சேர்த்தோ அல்லது குக்கரில் மேலும் ஒரு பாத்திரத்தை தனியாக வைத்தோ பயன்படுத்துங்கள்.
10. நீங்கள் என்ன சமைக்கப் போகிறீர்கள் என்பதைப் பொருத்தும் சமையல் எரிவாயு செலவாகும். உதாரணமாக இட்லி என்றால் ஒரே நேரத்தில் ஊற்றி வைத்துவிடலாம். தோசை என்றால் நீண்ட நேரம் அடுப்பு எரிய வேண்டியிருக்கும். எனவே சிலிண்டர் இல்லை, வேறு வழியே இல்லை எனும் பட்சத்தில் விரைவாக சமைக்கும் உணவுகளைத் தேர்வு செய்யலாம்.
இறுதியாக, உங்கள் பகுதியில் வாய்ப்பு இருந்தால் விறகு அடுப்புகளைப் பயன்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.