தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க கல்வித் துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
2004-ம் ஆண்டு பாடத்திட்ட மாற்றம் குறித்த ஆய்வின்போது கணினி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவானது. இதையடுத்து பாடத்திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கணினி அறிவியலை ஒரு பாடமாக பயிற்றுவிக்கவும், இதர வகுப்புகளுக்கு பின்னர் விரிவுபடுத்தவும் திட்டமிட்டு அப்போது அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கான பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டன. அதன்பின் பல்வேறு காரணங்களால் அவற்றை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. தமிழக பாடத்திட்டத்தில் தற்போது 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
இதர வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் மூலம் கணினியின் அடிப்படை பயன்பாடுகள் குறித்து பயிற்றுவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு, அரசு உதவிப் பள்ளிகள் இவற்றை முறையாக பின்பற்ற முடிவதில்லை. இதனால் அடிப்படை கணினி அறிவுகூட இல்லாமல் மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிமனித வாழ்க்கையில் அத்தியாவசியமாகி விட்டது. மேலும், இணையதள முறைகேடு மற்றும் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அதுகுறித்த குறைந்தபட்ச விழிப்புணர்வு இருப்பது அவசியமாகும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி அறிவியலை பாடமாக பயிற்றுவிக்க முடிவாகியுள்ளது. அதன்படி பாடத்திட்டம் தயாரிப்பு, பாடவேளைகள், தேர்வு நடைமுறை உள்ளிட்ட முன்தயாரிப்பு பணிகள், தேவையான கட்டமைப்பு வசதிகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இப்பாடத்துக்கு தேர்வு நடத்தப்பட்டாலும் அந்த மதிப்பெண் தேர்ச்சிக்கான கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
கணினி அறிவியல் பாடத்தைகற்றுத் தர கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு மறுத்து விட்டால் அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பாடம் பயிற்றுவிக்கப்படும். அதற்காக அவர்களுக்கு பிரத்யேக பயிற்சிகளும் வழங்கப் படும். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த பரிசீலனை செய்துள்ளோம். இதன்மூலம் மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.