கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இவ்வளவு பாவப்பட்டவங்களா ஆண்கள்...!?

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.
என்ன கொடுமை சார் இது...?

>>>புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?

தமிழகத்தையும் புதுவையையும் உலுக்கி எடுத்தது, ‘தானே’. இப்போது, ‘தானே’ போலவே சில ஆண்டுகளுக்கு முன் ‘ஜல்’, ‘லைலா’ போன்ற பெயர்களும் ஊடகங்களில் அடிபட்டன. புயலுக்கு எப்படிப் பெயர் வைக்கிறார்கள்?பிரத்யேகமான பெயர் இருந்தால்தான் எந்த விஷயத்தையும் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். புயல் குறித்த எச்சரிக்கைக்கும­் அதன்பின் விளைவுகளை தெரிவிக்கவும் ஊடகங்களுக்கு இந்தப் பெயர் பெரிய அளவில் உதவியாக உள்ளது.ஆரம்பத்தில் தன்னிச்சையாகவும­் பின்பு பெண்களின் பெயரிலும் புயல்கள் குறிப்பிடப்பட்ட­ன. அதன்பின் சர்வதேச அளவில் செயல்படும் வானிலை ஆய்வு மையம் பல நாடுகளும் சிபாரிசு செய்த பெயர்களை முறைப்படுத்தி, அந்தந்தப் பகுதிக்கு ஏற்ப புயலுக்கு பெயர் வைக்கப்பட்டது.உலக வானிலை அமைப்பில் (world metrological organization) இந்தியா, வங்கதேசம், மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை ஆகிய 8 நாடுகளைக் கொண்ட குழு உள்ளது. வங்க, அரபிக் கடலில் ஏற்படும் புயலுக்கு இந்த நாடுகள் சிபாரிசு செய்த பெயர்களில் இருந்து பெயரிடும் முறை, 2004ம் ஆண்டு அக்டோபர் முதல் நடைமுறையில் உள்ளது.இவை ஏற்கனவே கலாசாரத்தைப் பிரதிபலிக்கும்,­ நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக உள்ள 64 பெயர்களைத் தேர்வு செய்துள்ளன. இதில் இதுவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவான 28 புயல்களுக்கு 28 பெயர்கள் வைக்கப்பட்டு விட்டன. மற்ற பெயர்கள் இனி வரும் புயல்களுக்கு வைக்கப்படும். இதற்கு முன் வந்த புயல்களுக்கு ஒன்னி, நிஷா (வங்க தேசம்), ஆகாஷ், பிஜ்லி (இந்தியா), கோனு, அயலா (மாலத்தீவு), ஏமின், பயர் (மியான்மர் ), சிடர், வார்த் (ஓமன்), நர்கீஸ், லைலா (பாகிஸ்தான்), ராஷ்மி, பந்து (இலங்கை), கைமுக் (தாய்லாந்து) ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டன.‘தானே’, மியான்மர் நாடு தேர்வு செய்த பெயர்களில் ஒன்று. அடுத்த புயலுக்கு ஓமன் நாடு தேர்வு செய்த முர்ஜான் (murjaan) என்ற பெயர் இருக்கு.

>>>'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.!

 
நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும் - இப்படி சொன்னவர் யார் தெரியுமா ? நம் தேச தந்தை காந்தியடிகள் !

மகாத்மா காந்தியடிகள், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது' என்று குறிப்பிட்டார்.

கடிதத்தைப் படித்த லியோ டால்ஸ்டாய் மிகுந்த தன்னடக்கத்தோடு, 'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளு வரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்.

இந்நிகழ்வுக்குப் பின், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை காந்தி படித்தார். பின், 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றார்..

தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம் !!!

>>>வாஸ்கோடகாமாவின் இந்திய வருகை..!

 
1498 மே மாதம் 17 ஆம் நாள். அன்று பொழுது விடிந்த போது இந்திய சரித்திரத்தில், இந்த நாள் பிற்காலத்தில் ஏற்படுத்த இருக்கும் கலாச்சார, அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

ஆம்! அன்றுதான். பார்த்தலோமிய டயஸ் காட்டியிருந்த நல்வழியைப் பயன்படுத்திக் கொண்டு, நன்னம்பிக்கை முனையைத் தாண்டி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரம், கேரளப் பகுதியின், கள்ளிக்கோட்டைக்கு (கோழிக்கோடு) வாஸ்கோடகாமா எனும் போர்த்துக்கீசியர் முதன் முதலில் வந்து சேர்ந்த தினம்.

யார் இந்த வாஸ்கோடகாமா? எதற்கு இவர் இந்தியாவிற்கு வந்தார்? எப்படி இங்கு வந்தார்? எதனால் இவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்தது? என்று பல கேள்விகள் எழுகிறதல்லவா. இந்த கேள்விகளுக்குப் பதில் தேடி காலச்சக்கரத்தில் ஏறி சற்றேப் பின்னோக்கிச் சென்று பார்ப்போம்.

கி.பி 12 ஆம் நூற்றாண்டிலிருந்து, 16 ஆம் நூற்றாண்டு வரையிலான ஐந்நூறு ஆண்டுகளில், இந்தியாவிற்கும், ஐரோப்பாவிற்குமிடையே இருந்த வர்த்தக உறவுகள் வலுவானதாய் இருந்தன. குறிப்பாக ஐரோப்பாவில் அதிகம் உட்கொள்ளப் படும் அசைவ உண்வுகளுக்கு சுவையூட்டும் ஏலம், மிளகு, மிளகாய், இலவங்கம் போன்ற வாசனைப் பொருட்களிற்கு, ஐரோப்பிய சந்தைகளில் தேவை மிக அதிகமாக இருந்தது.15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கும், மேலை நாடுகளிற்குமிடையே வணிகம் நடைபெற மூன்று கடல் வழி மார்க்கங்கள் இருந்தன.

1.எகிப்தின் வழியாக ஐரோப்பாவை அடையும் மார்க்கம்.

2.ஆக்ஸஸ், காஸ்பியன் மற்றும் கருங்கடல் வழியாக ஐரோப்பாவை அடையும் வடக்கு வழி மார்க்கம்.

3.சிரியாவிலிருந்து மத்திய தரைக்கடல் மூலம் ஐரோப்பாவை அடையும் இடைப்பட்ட மார்க்கம்.

ஆனால் இம்மூன்று வியாபார மார்க்கங்களும், துருக்கிப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழே இருந்தன. எனவே துருக்கியர்கள் விதித்த தீர்வைக்குட்பட்டே எவரும் வணிகம் செய்ய வேண்டி இருந்தது மட்டுமின்றி, ஐரோப்பிய, துருக்கி அரசுகளுக்கிடையேயிருந்த பகைமை உறவும் பெரும் பிரச்சினையாய் இருந்தது.

இந்த காரணங்களால், ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்குமிடையேயான புதிய மற்றும் நேரடி கடல் வழி மார்க்கத்தை கண்டு பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது. இந்த முயற்சியை முதன் முதலில் தொடங்கியவர்கள் ஸ்பானியரும், போர்த்துக்கீசியருமே. ஆனால் இதில் முதலில் வெற்றி கண்டவர்கள் போர்த்துக்கீசியர்களே.

அப்போதைய இளவரசர் ஹென்றி இதற்குத் தேவையான முழு உதவியையும், ஆதரவையும் வழங்கினார்.இதனைப் பயன்படுத்திக்கொண்டு, ஆப்பிரிக்கக் கடற்கரைப் பகுதியில் காலூன்றி, பின்னர் 1471ல் பூமத்திய ரேகையைக் கடந்தனர். 27 வருட கடும் முயற்சிக்குப் பின்னர் 1498 ல் இந்தியாவை வந்தடைந்தனர்.

கள்ளிக்கோட்டைக்கு வாஸ்கோடகாமா வந்தடைந்த போது, இங்கு நிலவிய அரசிய்ல் சூழ்நிலை போர்த்துக்கீசியருக்கு சாதகமாகவே இருந்தது. அப்போது கள்ளிக்கோட்டை “ஜமோரின்“ எனப்படும் இந்து மத அரசரால் ஆளப்பட்டு வந்தது. கள்ளிக்கோட்டையைத் தவிர கொச்சி, கண்ணனூர், விசயநகரம் ஆகிய இடங்கள் இந்து மத அரசர்களாலும், டில்லி,பீஹார், குஜராத், பீஜப்பூர், அகமது நகர் ஆகிய இடங்கள் முஸ்லீம் அரசர்களாலும் ஆளப்பட்டு வந்தன.

இவற்றுள் இந்து மன்னர்கள் கோலோச்சி வந்த கேரளக் கடற்கரைப்பகுதியில் வாஸ்கோடகாமா காலடி வைத்ததால், அப்பிரதேச மன்னர்களின் ஆதரவு எடுத்த எடுப்பிலேயே போர்த்துக்கீசியருக்கு கிட்டியது. அது வரை கடல்வழியின் மூலம் இந்திய நாட்டின் வர்த்தக முற்றுரிமையை (Trade Monopoly) முஸ்லீம் வர்த்தகர்களே பெற்றிருந்ந்தனர்.

அந்த சமயத்தில் வாஸ்கோடகாமா கண்டு பிடித்த கடல் மார்க்கமும், இந்து அரசர்களிடம் அவர் பெற்ற ஆதரவும் இந்த முற்றுரிமைக்கு சவால் விடுவதாய் இருந்தது. இது முஸ்லீம் அரசர்களுக்கு, இந்து அரச்ர்களிடமும், போர்த்துக்கீசியர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதைத்தான் “இந்தியவுக்குச் செல்வதற்கென கண்டுபிடிக்கப்பட்ட புதிய கடல் மார்க்கம் பண்பாட்டு உலகத்தின் மீது ஏற்படுத்திய விளைவுகளைப் போன்று வேறெந்தச் செயலும் இடைக்கால வரலாற்றில் ஏற்படுத்தியிருக்க வில்லை” என்று சர்.டெனிஸன் ராஸ் எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறாக வாஸ்கோடகாமாவின் கண்டுபிடிப்பும், வருகையும், இந்திய அரசியலிலும், வாணிகத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவை ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கீழ் கொண்டு வருவதற்கான, அடிமைத்தனத்திற்கான விதை தெரிந்தோ தெரியாமலோ, வாஸ்கோடகாமாவால் மெல்ல அன்று விதைக்கப்பட்டது.

>>>ஜனவரி 02 [January 02]....

நிகழ்வுகள்

  • 366 - அலமானி எனப்படும் ஜேர்மனிய ஆதிகுடிகள் ரைன் ஆற்றைக் கடந்து ரோமை முற்றுகையிட்டனர்.
  • 1492 - ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாடா சரணடைந்தது.
  • 1757 - கல்கத்தாவை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
  • 1782 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
  • 1791 - ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை இந்திய ஆதிகுடிகள் படுகொலை செய்தனர்.
  • 1793 - ரஷ்யாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன.
  • 1893 - வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • 1905 - ரஷ்யக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் ஜப்பானியரிடம் சரணடைந்தனர்.
  • 1921 - ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: மணிலா ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
  • 1955 - பனாமாவின் அதிபர் ஜோசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1959 - முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • 1971 - கிளாஸ்கோவில் உதைபந்தாட்ட மைதானம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1982 - சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
  • 1993 - யாழ்ப்பாணம், கிளாலி நீரேரியில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1999 - விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
  • 2008 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

பிறப்புகள்

  • 1940 - எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், ஏபெல் பரிசு பெற்ற கணித இயலர்.

இறப்புகள்

  • 1782 - கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் - இலங்கையின் கண்டியை ஆண்ட கடைசி அரசன்.
  • 1876 - மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)

>>>சமயோசித புத்தி...!

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.

அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.

புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.

இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.

குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...

பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...!

>>>டி.என்.பி.எஸ்.சி 2013–ம் ஆண்டு கால அட்டவணை

TNPSC டி.என்.பி.எஸ்.சி. மூலமாக 2013–ம் ஆண்டு எந்தெந்த அரசு பணி இடங்களுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும்? என்ற கால அட்டவணை ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படுகிறது. இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடியும்.

அரசு வேலைக்கு தேர்வு

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் எழுத்தர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள், சார்நிலை பணியாளர்கள், குரூப்–ஏ அதிகாரிகள் போன்றோர் தமிழ்நாடு அரசு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு போட்டித்தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

போட்டித்தேர்வுகள் குரூப்–1, குரூப்–2, குரூப்–4 என்று பல்வேறு நிலைகளில் நடத்தப்படுகிறது. எழுத்தர்களும், தட்டச்சர்களும், கிராம நிர்வாக அதிகாரிகளும் குரூப்–4 தேர்வு மூலமாகவும், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரிகள், நகராட்சி கமிஷனர்கள், சார்–பதிவாளர்கள், உதவி தொழிலாளர் ஆய்வாளர்கள், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரிகள், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரிகள், வருவாய் உதவியாளர்கள் போன்றோர் குரூப்–2 தேர்வு மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வு காலஅட்டவணை

இதேபோன்று, துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. ஊராட்சி உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர், மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய உயர் பதவிகள் குரூப்–1 தேர்வு மூலமாகவும் நேரடியாக நிரப்பப்படுகின்றன.எந்த தேர்வுக்கு எப்போது அறிவிப்பு வரும்? எப்போது தேர்வு நடத்தப்படும்? தேர்வு முடிவு எப்போது வரும்? என்பன போன்ற விவரங்கள் முன்கூட்டியே தெரியாது. டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஆர்.நட்ராஜும், செயலாளராக டி.உதயச்சந்திரனும் (தற்போது வேறு பதவியில் உள்ளார்) பொறுப்பேற்ற பின்னர் ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும்? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு எப்போது? தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? ஆகிய விவரங்களுடன் வருடாந்திர தேர்வு கால அட்டவணையை (ஆனுவல் பிளானர்) வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

ஜனவரி இறுதியில் வெளியீடு

அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. இதன்மூலம், அரசு பணியில் சேர விரும்புவோர் தங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள முடிந்தது. காலவரையுடன் தேர்வு முடிவு தேதி, நேர்முகத்தேர்வு, இறுதி முடிவு ஆகியவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டதால் போட்டித்தேர்வுக்கு படித்து வந்த மாணவ–மாணவிகள் உற்சாகத்தோடும், முழுமூச்சோடும் படிக்கும் நிலை உருவானது.இந்த நிலையில், 2013–ம் ஆண்டுக்கான தேர்வு காலஅட்டவணை தயாரிக்கும் பணி முடிவடையும் தருவாயில் இருக்கிறது. காலி இடங்கள் பற்றிய பட்டியல் 75 சதவீதம் பெறப்பட்டுவிட்டன. இன்னும் ஒருசில துறைகளில் இருந்து குறிப்பிட்ட சில பதவிகளுக்கான காலி இடங்களின் பட்டியல் வரவேண்டியுள்ளது. அதுவும் கிடைக்கப்பெற்றதும் 2013–ம் ஆண்டுக்கான காலஅட்டவணை இறுதி செய்யப்பட்டு ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்

>>>கொடைக்கானலில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்

கொடைக்கானலை சுற்றி உள்ள பகுதியில் நிறைய சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது அவற்றை நாம் இங்கே பார்க்கலாம் . இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது நம்முடைய பாதுகாப்பு மிகவும் அவசியம் அதை மனதில் கொண்டு சுற்றுலாவை நல்ல முறையில் சுற்றி பார்த்து விட்டு வரவேண்டும் . சில நேரங்களில் விளையாட்டு விபரிதமாக கூட முடியும் .நம்முடைய பாதுகாப்பை மனதில் கொள்ளவேண்டும் .நான் என்ன சொல்ல வருகிறேன் என்று நண்பர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைகிறேன்

முதலில் நாம்
கொடைக்கானல் பற்றி பார்க்கலாம் !!!

கொடைக்கானல் - மலைகளின் இளவரசி

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். முன்னர் கொடைக்கானலில் மலைவாழ் மக்களே வாழ்ந்து வந்தனர், பின்னர் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது கோடை காலகங்களில் இங்கு தங்கியிருந்தனர்.

கொடைக்கானலில் பார்க்கவேண்டிய இடங்கள் :

வெள்ளி நீர்வீழ்ச்சி:
கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. கடல் மட்டத்தில் இருந்து 5900 அடி உயரத்தில் இருக்கும் இந்த நீர்விழ்ச்சி பார்ப்பதற்கு வெள்ளியை போன்றே இருக்கும். கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளிவரும் தண்ணீரே இந்த நீர்வீழ்ச்சியின் பிறப்பிடமாகும். நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 55 மீ.

கொடைக்கானல் ஏரி:
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். 1863ஆம் ஆண்டு முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஏரி. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.இந்த ஏரியின் அருகே மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.

ப்ரயண்ட் பூங்கா:
பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில், கொடைக்கானல் ஏரிக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த பூங்கா. மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன. 150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலை துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

கோக்கர்ஸ் நடைபாதை:
1872 ஆம் ஆண்டு கோக்கர் என்பவர் உருவாக்கியதுதான் இந்த நடைபாதை. 1 கி.மீ நீளமுடைய இந்த நடைபாதை பேருந்து நிலையத்தில் இருந்து 0.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வானிலை நன்றாக இருந்தால் இங்கிருந்து பெரியகுளம், மதுரை, டால்பின் மூக்கு, பம்பா ஆறு போன்றவற்றை காணலாம். வான் ஆலன் மருத்துவமனை அருகே தொடங்கும் இந்த நடைபாதை புனித பீட்டர் தேவாலயத்தின் அருகே முடிகிறது. இங்கு சில நேரங்களில் உங்கள் நிழலை மேகங்களின் மீது காணமுடியும்(brocken spectre).

டால்பின் மூக்கு:
பாம்பர் பாலத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 8.0 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கு இருந்து பார்த்தால் பெரியபாறை ஒன்று டால்பின் மீனின் மூக்கு போன்று தெரியும். இந்த பாறையின் கீழே 6600 அடி ஆழமுடைய பள்ளம் இருக்கிறது. இதன் அருகே பாம்பர் அருவி உள்ளது. இந்த அருவியில் liril soap விளம்பரம் எடுக்கப்பட்டது. அதனால் இதனை லிரில் அருவி என்றும் அழைக்கின்றனர்.

பசுமை பள்ளத்தாக்கு(suicide point):
கோல்ப் மைதானத்தின் அருகே, பேருந்து நிலையத்தில் இருந்து 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 1500 மீ. வானிலையைப் பொருத்து இங்கிருந்து வைகை அணையை காணலாம்.இதில் நிறைய காதல் ஜோடிகள் விழுந்து இறந்ததும் உண்டு

தலையர் நீர்வீழ்ச்சி:
இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயர்ந்த நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த நீர்வீழ்ச்சியை காட் ரோட்டில் இருந்து காணலாம். அருகில் சென்று காண்பதற்கு வழி கிடையாது.

குணா குகைகள்:
கமல் ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் இந்த குகை இடம்பெற்றதால் இதனை குணா குகை என்கின்றனர். அதற்கு முன்னர் பிசாசின் சமையலறை(Devil's kitchen) என்றழைக்கப்பட்டது இந்த குகை. சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது ஆனால் தற்பொழுது குகையின் உள்ளே செல்ல முடியாது, மிக தூரத்தில் இருந்து பார்க்கலாம்.

Pine forest:
இந்த ஊசியிலை காட்டை 1906 ஆம் ஆண்டு பிரயண்ட் என்பவர் உருவாக்கினார். கொடைக்கானலை பசுமையாக்கும் முயற்சியில் மலைப்பகுதிகளில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்த்தார். இப்போது இந்த காடு பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகிறது.

பியர் சோழா அருவி(Bear shola Falls):
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி. முன்னர் கரடிகள் இங்கு தண்ணீர் குடிக்க வந்ததால் இந்த நீர்வீழ்ச்சிக்கு இந்த பெயர் ஏற்பட்டது. அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருக்கிறது இந்த நீர்வீழ்ச்சி.

Kodaikanal solar observatory:

கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் 1898 ஆம் ஆண்டு இந்திய வான்கோளவியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து 2343 மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து வைகை அணை, பெரியகுளம் மற்றும் சோத்துப்பாறை அணை ஆகியவற்றை காணமுடியும். இந்த ஆய்வுக்கூடத்தின் முன்னாள் இயக்குநரான ஜான் எவர்செட், இங்கு இருக்கும்போது எவர்செட் விளைவை கண்டுபிடித்தார்.

திறந்திருக்கும் நேரம்

காலை 10 மணி - மதியம் 12.30 மணி மற்றும் மாலை 7 மணி - 9 மணி.
சீசன் நேரங்களில் வெள்ளிக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்.

தூண் பாறைகள்:

இந்த பாறைகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளன. இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது கூடுதல் தகவல்.

பாம்பர் அருவி:

இந்த அருவிக்கு grand cascade என்ற பெயரும் உள்ளது. கொடைக்கானலில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அருவி.

செண்பகனூர் அருங்காட்சியகம்:
இந்த அருங்காட்சியகம் 1895 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட விலங்குகள், பூக்கள், பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த அருங்காட்சியகம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியின் உதவியுடன் பராமரிக்கப்பட்டு இயங்குகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருங்காட்சியகம். செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் இயங்கும்.

நன்றி
தமிழ்நாடு சுற்றுலா

>>>அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922)

 
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.

அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)
பெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர்.

இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு "வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய "அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.

பெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர்.

நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.

தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதில்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.

தொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது எனக் கருதுகிறேன்.

தொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

>>>தீயோர்க்கு அஞ்சேல்! - சுகி.சிவம்

"தாத்தா... என்ன படிக்கிறீங்க? எனக்கு பரீட்சை இருக்கு... அதனாலே நான் படிக்கிறேன். நீங்கள் ஏன் படிக்கிறீங்க?" என்றபடியே வந்தான் பாபு.

"வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இங்கிலாந்தில் வாழ்ந்த லியானர்ட் வெல் பற்றி படித்தேன். எவ்வளவு ஆழமான சிந்தனை அவருக்கு" என்று பாபுவின் ஆவலை தூண்டினார் தாத்தா.

"அவரை பற்றி சொல்லுங்க தாத்தா" என்று நச்சரித்தான் பாபு.

"மக்கள் நடமாட்டமே இல்லாத பாதை, இருட்டுவேளை... கையில் பணத்துடன் குதிரை மீது பயணம் செய்து கொண்டிருந்தார் லியானர்ட் வெல். அப்போது 'நில்' என்று அவரை மிரட்டியபடி எதிரே வந்து துப்பாக்கியை காட்டினான் ஒரு முகமூடி கொள்ளையன்.

"எடு பணத்தை" என்று மிரட்டினான்.

பணத்தை கொடுத்த பிறகும், "ம்... மரியாதையாக குதிரையை என்னிடம் ஒப்படைத்துவிடு" என்று மேலும் மிரட்டினான். அதன்படியே நடந்துகொண்டார் வெல்.

வெற்றிக்களிப்புடன் குதிரை மீது ஏறி புறப்பட தயாரான முகமூடி கொள்ளையனை நிறுத்தி, "உனக்கு வெட்கமாக இல்லையா? உழைத்து உண்ணாமல் திருட்டு தொழில் செய்கிறாயே இது பாவம் இல்லையா?" என்று கம்பீரமாக குரலை உயர்த்தி கேட்டார் வெல். இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையன், "டேய், நீ மானம் அற்றவன். உயிருக்கு பயந்து பணத்தையும் குதிரையையும் என்னிடம் கொடுத்த கோழை" என்று கேலி பேசினான்.

லியனார்ட் வெல் உறுதியுடன் "மூடனே, நாளை கடவுளின் கேள்விக்கு நீ என்ன பதில் சொல்வாய்? திருடுவது பாவம் என்ற பைபிள் நெறியை நீ அறியாதவனா? இறைவனின் தண்டனைக்கு ஏன் உள்ளாகிறாய்?" என்று கேட்டார்.

அவரது உறுதி மற்றும் தெளிவான பேச்சால் கொள்ளைக்காரன் ஆச்சர்யம் அடைந்தாலும் தப்பிக்கும் நோக்கத்தில் "மேலே பேசாதே... பேசினால் சுட்டுவிடுவேன். சாக பயந்து பணத்தையும், குதிரையையும் கொடுத்த கோழை நீ. எனக்கு புத்தி சொல்கிறாயா?" என்று உறுமினான்.

"போயும் போயும் பணத்துக்காகவோ குதிரைக்காகவோ நான் சாக விரும்பவில்லை. அவற்றை சம்பாதிக்க என்னால் முடியும். இப்போதும் நான் சாவதற்கு தயார். கடவுளுக்கு விரோதமான இழி செயலான திருட்டினால் உனக்கு பாவம் வரும். அந்த பாவத்திலிருந்து உன்னை தடுப்பதால் மரணம் வந்தாலும் அந்த மரணம் ஏற்கத்தக்கது. சுடு என்னை" என்றபடி குதிரைக்கு முன்னே நின்று மார்பை திறந்து காட்டினார் வெல்.

திகைத்துப் போன கொள்ளையன் சற்று தடுமாறினான். இறுதியில் குதிரையில் இருந்து இறங்கி லியானார்ட் வெல்'ஐ தழுவிக் கொண்டு, "பாவத்திலிருந்து என்னை மீட்டுவிட்டாய். அதற்கு நன்றிக் கடனாக திருட்டு தொழிலை விட்டுவிடுகிறேன்" என்று கண்ணீர் விட்டான்" என கதையை சொல்லி முடித்தார் தாத்தா.

"தாத்தா, ஆத்திச்சூடியில் இது பற்றி என்ன சொல்லியிருக்கு?" என்றான் பாபு.

"தீயோர்க்கு அஞ்சேல்" என்றார் தாத்தா.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்