EMIS இணையதளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்தல் - பணிகள் குறைப்பு நடவடிக்கைகள் - பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்
பள்ளிக்கல்வித்துறை - EMIS இணையத்தில் தரவுகளை உள்ளீடு செய்தல் மறு ஆய்வு மற்றும் குறைப்பு நடவடிக்கை சார்ந்து இயக்குநர்கள் இணை செயல்முறைகள் வெளியீடு
Uploading of data on EMIS website - Reducing Data Entry activities - Joint Proceedings of Directors of School Education, Elementary Education and Private Schools
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் இருந்து தினமும் அதிகளவிலான தகவல்களை மாணவர்களிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் தாம் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாகவும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர். இதற்கு தீர்வுக்காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி கூறியிருந்தார்.இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள்:கல்வி மேலாண்மைத் தகவல் மையத்தில் (EMIS) தற்போதைய தரவு பதிவு செய்வதையும், மதிப்பிடுவதற்கும், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் பணியினைக் குறைக்கும் நோக்கில் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு தற்போதுள்ள தரவு பதிவு நடைமுறைகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றினை முழுமையான சீராய்வுக்குப் பிறகு EMIS-இல் தரவுகளை பதிவு செய்யும் பணியினை எளிதாக்கவும், நெறிப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது. பள்ளிகள் அளவில் விபரங்களை பதிவு செய்யும் பணியினை கணிசமாகக் குறைத்தும் அதே வேளையில் அத்தியாவசியமான விவரங்கள் மட்டுமே பராமரிக்கும் வகையிலும், தரவு பதிவுச் செய்யும் பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித் துறையின் கடிதம் ஆசிரியர்களுக்கான பயிற்சியின்போது அவர்களின் தரவு பதிவை குறைப்பதற்காக பயிற்சி வருகை, கருத்து மற்றும் வினாடி வினா தொகுதிகள் நீக்கம் செய்யப்படுகின்றன.
ATAL ஆய்வகம் தொகுதி பதிவு EMIS லிருந்து அகற்றப்படும்.
நிதிப் பதிவு, நிறுவனப் பதிவு , பள்ளி நன்கொடைப் பதிவு, தகவல் தொடர்புப் பதிவு. மனுக்கள் மற்றும் செயல்முறைப் பதிவு, உதவித்தொகை மற்றும் மாணவர் ஊக்கப் பதிவு, ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கான மின் கட்டண விவரங்கள் போன்றவை பதிவு செய்வது நீக்கப்பட்டுள்ளது.
நூலக புத்தகப் பதிவுகளில் யார் எந்தெந்த புத்தகங்கள் பயன்படுத்தி உள்ளனர் மற்றும் தற்போதைய புத்தக இருப்பு ஆகியவற்றை மட்டுமே பதிவேற்றம் செய்தல் போதுமானதாகும்.
வாசிப்பு இயக்கம்:எண்ணும் எழுத்தும் திட்ட மாணவர் தரநிலை விவரங்களிலிருந்தே தரவுகளைப் பெற்று வாசிப்பு இயக்கப் பதிவுகளுக்கு மாற்றப்படும். வாசிப்பு இயக்கத்திற்கான தனியான பதிவு மேற்கொள்ள வேண்டியதில்லை.
கலைத் திருவிழா:
வெற்றியாளர் பட்டியல்களை மட்டுமே பதிவு செய்ய நெறிப்படுத்தப்பட்டுள்ளது. பங்கேற்றோர் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.
தொடர் மற்றும் வளரறி மதிப்பீடுகள்:
தொடர் மற்றும் வளரறி மதிப்பீடுகள் கேள்விவாரியான தரவு உள்ளீடு செய்வதை விடுத்து, மாணவர் வாரியான மதிப்பெண்கள் மட்டுமே உள்ளீடு செய்யப்படல் வேண்டும்.
SA கேள்விகள் வாரியாக மதிப்பெண்கள் கைப்பேசி அல்லது இணையதளங்களின் மூலம் பதிவிட்டால் போதுமானது.
விலையில்லா பொருட்கள் மற்றும் பாடப்புத்தகங்கள்:
பாடப்புத்தகங்களுக்கான Barcode அடிப்படையிலான கண்காணிப்பு மாநில அளவில் இருந்து தலைமையாசிரியர்கள் வரை செயல்படுத்தப்படும். பெறப்பட்ட ஒட்டுமொத்தமாக விநியோகிக்கப்பட்ட இருப்பு மற்றும் தேவைகள் ஆகிய விவரங்களை மட்டுமே பதிவிட்டால் போதுமானதாகும். மாணவர்கள் வாரியாக பதிவு செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.
குழுக்கள் மற்றும் மன்றங்கள்:
அனைத்து குழுக்கள் மற்றும் மன்றங்கள் சார்ந்த விவரங்களை தனித்தனியே பதிவிட வேண்டியதற்கு மாறாக இவை அனைத்தையும் House System என்ற அலகின்கீழ் கொண்டு வரப்படும். இதன் வாயிலாக தனித்தனியாக மன்றங்கள் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.பணியாளர்கள் பதிவேடு, ஓய்வூதியங்கள் மற்றும் IFHRMS உடன் ஒருங்கிணைக்கப்பட்ட தரவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களப் பற்றிய விவரம் மட்டுமே பதிவேற்றம் செய்தல் வேண்டும்.கால அட்டவணை சார்ந்த உள்ளீடுகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்தால் போதுமானதாகும்
ICT மற்றும் இணைய வசதி சார்ந்த விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. இதன் மூலம் பல்வகைப் பதிவுகள் மேற்கொள்வது குறைக்கப்படுகிறது.பள்ளி சார்ந்த அனைத்து விவரங்களும் ஒருங்கமைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. எனவே, தனித்தனி விவரங்கள் பதிவிட வேண்டியதில்லை.இந்த நடவடிக்கைகள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நிர்வாக பதிவு சார்ந்த பணிச்சுமையை கணிசமாகக் குறைத்து, கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வழிகோலும். அதே நேரத்தில் இந்த மாற்றங்கள் EMIS தரவு மேலாண்மை அமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் உடன் நடைமுறைக்கு வருகிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.