கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“நாங்க படிச்சா மட்டும் ஏன் உங்க வயிறு எரியுது?” - பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொதிக்கும் அரசுப்பள்ளி மாணவிகள்



“நாங்க படிச்சா மட்டும் ஏன் உங்க வயிறு எரியுது?” - பா.ஜ.க-வுக்கு எதிராகக் கொதிக்கும் அரசுப்பள்ளி மாணவிகள்


“நாங்க படிச்சா மட்டும் ஏன் உங்க வயிறு எரியுது?” - கொதிக்கும் செஞ்சி அரசுப்பள்ளி மாணவிகள்…


வினாத்தாள் கசிந்ததால்தான் செஞ்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்றதாக பா.ஜ.க-வின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதியால் எழுந்த சர்ச்சை, அந்த மாணவிகளையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது!


“நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணா..?” - கொளுத்திப்போட்ட பா.ஜ.க-வின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி


2024-25 கல்வியாண்டின் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் 08.05.2025 அன்று வெளியாகின. அதில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 65 மாணவிகள், வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். ஆனால், அந்தப் பள்ளியைச் சேர்ந்த 167 மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுவிட்டதாகத் தகவல்கள் பரவவே, ‘வினாத்தாள் லீக் ஆகிவிட்டது’ எனச் செய்திகள் றெக்கைகட்டின.



மாணவிகள் தேர்வு எழுதிய மையம்...


இதுதான் சான்ஸ் என கோதாவில் குதித்த தமிழக பா.ஜ.க-வின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி, “செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் வேதியியல் தேர்வெழுதிய 167 மாணவிகள் 100/100 மதிப்பெண்கள் பெற்றிருப்பதும், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் 99 மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் வியப்போடு அதிர்ச்சியையும் அளிக்கிறது. விடைகளை முன்னரே தயார் செய்து மாணவர்களிடம் கொடுத்துவிட்டனரா அல்லது விடைத்தாள்களே மாற்றிவைக்கப்பட்டனவா என்ற கேள்விகளும் எழாமலில்லை. இயல்பாக படித்துத் தேரவேண்டிய மாணவர்களை, செயற்கையாக மதிப்பெண்கள் பெறவைப்பது மாணவர்களைச் சீரழிக்கும் செயல்’ என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கொளுத்திப்போட்டார்.


அந்தப் பதிவுக்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நாராயணன் திருப்பதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “இந்த மாணவிகள் மற்ற பாடங்களில் என்ன மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியுமா... இருந்தாலும் குழு அமைத்து இது குறித்து விசாரணை நடத்தப்படும்” என்று கூறியிருந்தார். அதையடுத்து விசாரணையை மேற்கொண்ட ஒரு குழு, ‘வினாத்தாள்கள் கசியவில்லை’ என்று கூறியிருக்கும் நிலையில், விகடன் அந்தப் பள்ளிக்கு நேரில் சென்றோம்.


“நாங்க படிச்சா மட்டும் ஏன் உங்க வயிறு எரியுது?” - கொதிக்கும் செஞ்சி அரசுப்பள்ளி மாணவிகள்…


“தேர்ச்சி விகிதத்தை உயர்த்தியது தவறா?”


செஞ்சி பேருந்து நிலையத்துக்கு அருகில் அடர்த்தியான மரங்கள் சூழ, எட்டு ஏக்கரில் விசாலமாக விரிந்து இருக்கிறது அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி. 1961-ல் உயர்நிலைப்பள்ளியாகத் தொடங்கப்பட்டு, 1990-ல் மேல்நிலைப்பள்ளியாக மாறிய இந்தப் பள்ளியில், தற்போது 1,650 மாணவிகள் படித்துவருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இங்கு படித்து அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்.சி (கால்நடை மருத்துவம்) படித்துவரும் மாணவிகளின் விவரங்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், புகைப்படங்கள் போன்றவற்றைத் தாங்கிய பேனர்கள் பள்ளி வளாகத்தில் பளிச்சிடுகின்றன. மாவட்டக் கல்வித்துறையின் அனுமதியுடன், வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற 65 மாணவிகளின் மதிப்பெண் பட்டியலை ஆய்வு செய்தோம். அதில் அனைத்து மாணவிகளும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், உயிரியல் மற்றும் கணிதப் பாடங்களில் 95 முதல் 99 வரை மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்கள்.


அப்போது நம்மிடம் பேசிய பள்ளி ஆசிரியர்கள் சிலர், “2020-ல் 89%, 2022-ல் 95%, 2023-ல் 97%, 2024-ல் 99% சதவிகிதமாக இருந்த எங்கள் பள்ளியின் ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதத்தை, தற்போது 100% ஆக உயர்த்தியிருக்கிறோம். அது தவறா... இந்த ஆண்டு எங்கள் பள்ளியிலிருந்து 414 பேர், சாரதா மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து 148 பேர், ஸ்ரீவித்யா விகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியிலிருந்து 36 பேர் என மொத்தம் 598 பேர் எங்கள் பள்ளியிலேயே அமைந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார்கள். அவர்களில், வேதியியல் பாடத்தில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த 65 மாணவிகள், சாரதா பள்ளியைச் சேர்ந்த 91 மாணவிகள், வித்யா விகாஸ் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவிகள் என மொத்தமாக 167 மாணவிகள் 100 மதிப்பெண்களைப் பெற்றார்கள். அதைத்தான், ‘167 அரசுப் பள்ளி மாணவிகள் 100 மதிப்பெண்களைப் பெற்றுவிட்டனர்’ எனக் கிளப்பிவிட்டு விட்டனர்.




செஞ்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி



கஷ்டப்பட்டு படித்த மாணவிகளின் மன வலி தெரியுமா?


பருவத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லாமல் பல தேர்வுகளை நாங்கள் நடத்துகிறோம். ஆண்டுக்கு 8 முதல் 10 `ஸ்லிப்’ தேர்வுகளை நடத்துகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியே ஒரு பெரிய நோட் வைத்திருக்கிறோம். அதில் வினாத்தாள்களை ஒட்டி, அவர்களைத் தேர்வு எழுதவைப்போம். இது தவிர, புத்தகங்களில் இருக்கும் பயிற்சி வினாக்களை அச்சடித்து, அதை மாணவர்களிடம் கொடுத்து அதை நன்றாகப் படிக்கவைத்து தேர்வு வைப்போம். அதேபோல, ஒரு மார்க் வினாக்களை அச்சடித்து, லேமினேட் செய்து அவர்களிடம் கொடுத்துவிடுவோம். அதை வீட்டில் படித்துவிட்டு, இங்கு தேர்வு எழுதுவார்கள்.


ஒரு ஆசிரியர், ஒரு ஆண்டில் எடுக்கும் பாடங்களை 12 யூனிட்டுகளாகப் பிரித்து, முக்கியக் கேள்விகளைத் தொகுத்து லேமினேட் செய்து கொடுப்போம். அதைப் படிக்கச் சொல்லி அதையும் தேர்வாக வைப்போம். ஒருகட்டத்தில் அவர்கள் கேள்விகளைப் பார்க்கும்போதே, விடை மனதுக்குள் ஓட ஆரம்பித்துவிடும். மாணவர்களுக்கு இப்படியெல்லாம் பயிற்சி கொடுத்துத்தான், தேர்வை அணுகவைக்கிறோம். இதில், `அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இவ்வளவு மதிப்பெண்களை எடுக்கலாம்?’ என்று போகிற போக்கில் வன்மத்தைப் பரப்பினால், எளிய பின்னணியிலிருந்து வந்து, கஷ்டப்பட்டுப் படித்த அந்த மாணவிகளின் மன வலி எப்படியிருக்கும் தெரியுமா... அவர்களின் திறமையை குறைத்து மதிப்பிடலாமா?” என்கின்றனர் குமுறலாக.



“நாங்க படிச்சா மட்டும் ஏன் உங்க வயிறு எரியுது?”


நம்மிடம் பேசிய மாணவிகள் சிலர், “காலையில 8:30 மணிக்கு வந்தா, சாயந்தரம் 5:30 மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ் முடிச்சிட்டுதான் வீட்டுக்குப் போவோம். அப்பப்போ நடத்துற பாடங்களை, ஆசிரியர்கள் எங்களுக்கு டெஸ்ட் வெச்சாங்க. அதனால தேர்வு பயம்ங்கிறது எங்களுக்கு இல்லை. இதுக்கு முன்னாடி நடந்த முழு ஆண்டுத் தேர்வு வினாத்தாள்களை வெச்சு, நிறைய மாதிரித் தேர்வுகளை நடத்தினாங்க. அதனாலதான் எங்களா இப்படி மார்க் எடுக்க முடிஞ்சுது. இதெல்லாம் தெரியாம எங்களை பிட் அடிச்சோம்னு சொல்றாங்க.


நாங்க காலேஜுக்குப் போகும்போது எங்க பள்ளியின் பெயரைக் கேட்டா, நாங்க பிட் அடிச்சவங்கனு சொல்ல மாட்டாங்களா... அரசுப்பள்ளியில படிச்சா 100 மதிப்பெண்கள் எடுக்கவே கூடாதா... `100% தேர்ச்சி… இத்தனை பேர் 100 மதிப்பெண்கள்’னு பக்கம் பக்கமாக விளம்பரப்படுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து ஏன் பா.ஜ.க-வின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி பேசுறதில்லை... எங்க உழைப்பைக் கொச்சைப்படுத்தும் உங்களுக்கு ஒரு கேள்வி... நாங்க படிச்சா மட்டும் ஏன் சார் உங்களுக்கு வயிறு எரியுது?” என்றனர் ஆதங்கத்துடன்.


இறுதியாக, மாவட்ட கல்வித்துறை அதிகாரி அறிவழகனிடம் பேசினோம். “எங்கள் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள்.  ஒரு குழுவை அமைத்து, வினாத்தாள்களைத் தயாரித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்புவேன். அந்த வினாத்தாள்களை நோட்டில் ஒட்டி, மாணவர்களுக்குத் தேர்வு வைக்கிறார்கள். அதை ஜெராக்ஸ் எடுப்பதற்கு நாங்கள் பணம்கூடக் கொடுப்பதில்லை. ஆசிரியர்களே அவர்கள் செலவில் நோட் வாங்கி, ஜெராக்ஸ் எடுத்து ஒட்டி தேர்வு வைக்கிறார்கள். இந்த நடைமுறை வேறு எந்த மாவட்டத்திலும் இல்லை. அடுத்த ஆண்டு 100 மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்” என்றார் நம்பிக்கையோடு.


சம்பந்தப்பட்ட செஞ்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரே இல்லை. ஆனாலும், அங்கிருக்கும் ஆசிரியர்களெல்லாம் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு, ஊரே மெச்சும் அளவுக்கு மாணவிகளைத் தேர்ச்சிபெறச் செய்திருக்கின்றனர். அந்த அர்ப்பணிப்பையெல்லாம் புரிந்து கொள்ளாத பா.ஜ.க-வின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி போன்றவர்கள், வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொட்டுவது, வயிற்றெரிச்சல் இல்லாமல் வேறேன்ன?


நன்றி : விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்

   THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல் அனைவருக்கும் வணக்கம். அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்...