கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு இருந்தாலும், பல இடங்களில் தாயின் சாதியை அடிப்படையாக வைத்து சாதி சான்றிதழ் வழங்க வருவாய் துறையினர் மறுத்து வருவதாக தொடர் புகார் எழுந்த நிலையிலும், இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததாலும் புதிய அரசாணையை அரசு வெளியிட்ட்டிருக்கிறது.
இதன்படி அனைத்து மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளும் கலப்பு திருமணம் செய்த பெற்றோர் விருப்பத்தின் பேரிலேயே அவர்களுக்கு குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தந்தையின் பெயரிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டாலும், கலப்பு திருமணம் செய்தவர்கள் தாய் சாதியின் அடிப்படையிலும் தங்கள் குழந்தைக்கு சாதி சான்றிதழ் பெறலாம் என்ற உத்தரவு இந்த புதிய அரசாணை மூலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.